சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் பதின்மூன்றாவதாக வைத்து எண்ணப்படுவது. இதனை உமாபதி சிவம் செய்தார் என்று மரபாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நூல் செய்தவர் உமாபதி சிவம் அல்லர், சீகாழி தத்துவ நாதர் என்பது இக்கால ஆய்வாளர்கள் கண்ட முடிபாகும். இவர் காலம் கி.பி. 14–ஆம் நாற்றாண்டாகும். இந்நூல் அளவிற் சிறியது; ஆறு பாடல்களை உடையது. சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் தச காரியங்களைச் செவ்வையாக விளக்குகிறது. தச காரியங்களாவன: தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பன. முதற்பாடல் தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி என்ற மூன்றையும் கூறுகிறது. இரண்டாம் பாடல் ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சத்தி ஆகிய மூன்றையும் உணர்த்துகிறது. பின்னுள்ள நான்கு பாடல்களும் முறையே சிவ ரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பவற்றை விளக்குகின்றன. அப்பாடல்களின் சாரத்தைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 1. உயிர் முப்பத்தாறு தத்துவங்களாற் கூட்டப் பெற்ற உடல், கருவி, உலகு, நுகர்பொருள் ஆகியவற்றின் தொழிற்பாட்டை அறிவது தத்துவ ரூபம். 2. மேற்கூறிய தத்துவக் கூட்டங்களுக்கு உணர்வு இல்லை என்று அறிவது தத்துவ தரிசனம். 3. உயிர் தத்துவக் கூட்டங்களின் வாயிலாய் இறைவனை அறிய முடியாதென்று கண்டு அவற்றை விட்டு நீங்குதல் தத்தவ சுத்தி. 4. இவ்வாறு தத்துவங்களின் தொடர்பு நீங்கிய பின்னர், உயிர் தன்னியல்பையறிதல் ஆன்ம ரூபம். 5. உயிர் தன்செயல் அற்று நிற்றல் ஆன்ம தரிசனம். 6. பசுஞானமாகிய உயிரறிவு மடங்கித் திருவருள் வயப்பட்டு அதனுள் அடங்கி வெளிப்படாதிருத்தல் ஆன்ம சுத்தி. 7. ஆணவ மலத்திற் கட்டுண்டிருக்கும் உயிர்களைக் கருதிப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்யும் சிவ பரம்பொருள் திருவருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு குருவாய் வெளிப்பட்டு, இந்திரியங்களை வேறாகக் காணும்படி செய்து ஆதாரமாய் நிற்கிறது என்று உயிர் தன்னறிவிற் காண்பது சிவரூபம். 8. திருவருள் உயிரிடத்தில் சுட்டறிவு நீங்கும் படி நிலைபெற்றது சிவனது திருவடியாகும்; பார்க்கிற எவ்விடமும் சிவமே விளங்கும்படி நிட்டை கூடுதல் சிவனது முகமாகும். அப்போது அறிவுக்கறிவாக உயிரிடத்துத் தோன்றுகிற முதல்வனது விளக்கமே அவனது முடியாகும். உயிர் இவ்வுண்மையைத் தெளியக் கண்டு, உடல் கருவி, உலகு முதலிய கட்டுகளினின்றும் நீங்கி, முதல்வனோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலே சிவதரிசனம். 9. அவ்வாறு ஏகனாகி நிற்கும்பொழுது, எத்தகைய பொருள் வந்து எதிர்ப்படினும் அவற்றில் இயல்பை உள்ளவாறு உணர்ந்து, அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் உணர்ந்து, உயிர்க்கு மேலாகிய திருவருளையும் அதற்கு முதலாக விளங்கும் சிவத்தையும் உணர்ந்து, எல்லாவற்றிற்கும் அப்பரம்பொருளே காரணம் என்பதைத் தெளியக் கண்டு, அவனருளையல்லது ஒன்றையும் கருதாமல் தன்னை இழந்து நிற்றல் சிவ யோகம். 10) அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமல் முதல்வனோடு ஒன்றி நின்றால், ஊழ்வினையால் பாவங்களைச் செய்தாலும் தீயொழுக்கங்களில் தலைப்பட்டாலும் இறைவன் அவ்வுயிரினிடமாக நின்று அச்செயல்களையெல்லாம் தம் செயலாக ஏற்றுக் கொண்டு, வினைக்கு ஈடாக வரும் எல்லா நுகர்வுகளையும் சிவபோகமாக்கி, அவ்வுயிரைத் தானாகச் செய்துவிடுவான். இதுவே சில போகம். உயிர் மெய்யுணர்வு பெற்று இன்புறுதலாகிய உண்மை நிலையை இவ்வாறு பத்து வகையான படி நெறியில் வைத்து விளக்குவதால் இந்நூல் உண்மை நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. தச காரியம் என்னும் பொருளைத் தனியே எடுத்து விளக்கிய முதல் நூல் இதுவேயாகும். ஆஆ.