இலா பிளாட்டா
ilā piḷāṭṭā
அர்செண்டினா நாட்டின் நகரங்களுள் ஒன்று.
அர்செண்டினா நாட்டின் நகரங்களுள் ஒன்று. இது போனசு அயர்சு (Buenos Aires) மாநிலத்தின் தலைநகரமாகும். இலா பிளாட்டா (La Plata) நகரம் போனசு அயர்சிலிருந்து 56 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது. போனசு அயர்சு தலைசிறந்த வணிக மையமாகச் சிறப்புப் பெற்றுள்ளது. இறைச்சியைத் தகரப் பெட்டிகளுள் அடைத்தல், எண்ணெயைத் தூய்மைப்படுத்துதல், மரமறுத்தல், மாவரைத்தல், கைத்தறி நெசவு போன்ற தொழில்கள் இந்நகரில் நடைபெறுகின்றன. இவ்வூருக்கு 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள என்சிநாடாவில் (Ensenada) துறைமுகமுள்ளது. துறைமுகத்திற்கும் நகருக்குமிடையே இருப்புப் பாதைத் தொடர்பும், பெருங்கடலில் செல்லும் கப்பல்கள் இந்நகருக்கு வந்து செல்லும் நீர்வழித் தொடர்பும் உள்ளன. மயிர், பெட்ரோல் ஆகியவையும், உறைந்த பனியால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், கோதுமையும், பாம்பாசுப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட ஏனைய தானிய வகைகளும் இத்துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியாகின்றன. பண்பாட்டு அடிப்படையில் இந்நகரம் போனசு அயர்சுடன் போட்டியிடுகிறது. தேசிய பல்கலைக் கழகம், வானநூல் கூடம், ஆராய்ச்சிக் விலங்கியல் பூந்தோட்டம், தேசிய நூலகம், மாநில நுண்கலைப் பொருள்களின் அருங்காட்சியகம், திருச்சபைகள், கலையரங்குகள், குதிரைப் பந்தய வளாகம் போன்றவை இந்நகரில் அமைக்கப் பெற்றுள்ளன.
ஆர்செண்டினா குடியரசின் மாநாட்டிற்குப் பின்னர், கி.பி. 1880–ஆம் ஆண்டில் போனசு அயர்சு தேசியத் தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநிலச் சட்டமன்றம் புதிய நகர் ஒன்றை மாநிலத் தலைநகராக அமைப்பதென முடிவெடுத்தது. அம்முடிவின்படி கி.பி. 1881–ஆம் ஆண்டில் இலா பிளாட்டா தலைநகராயிற்று. கட்டடங்களைக் கட்டும் பணி கி.பி. 1882–ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. இலா பிளாட்டா வாசிங்டன் மாநகரத்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரசு மாளிகை சட்டமன்றம், நீதிமன்றம், மாநகர் மன்றம் போன்றவை தென் அமெரிக்காக் கண்டத்திலேயே தலை சிறந்தவை என்று கருதப்படுகின்றன.
இந்நகரின் பெயர் ஈவா பெரான் (Eva Peron) என்னும் அம்மையாரின் நினைவாக 1952–இல் மாற்றப்பட்டது. இந்த அம்மையார் அர்செண்டினாவின் எதேச்சாதிகாரியாக விளங்கிய சுவான் பெரான் (Juan Peron) என்பவரின் மனைவி. சுவான் பெரான் 1955–இல் வீழ்ச்சியுற்றபோது, இந்நகரின் பழைய பெயரான இலா பிளாட்டாவே திரும்ப வைக்கப்பெற்றுவிட்டது. இதன் மக்கள் தொகை 4,55,000 (1980).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 371)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6fmzdqx/
தமிழ்“இலா பிளாட்டா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6fmzdqx/APA
Oliyon Research. (2026). இலா பிளாட்டா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6fmzdqx/MLA
"இலா பிளாட்டா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6fmzdqx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment