அடியன்
aṭiyaṉ
தென்னிந்தியாவில் வாழும் பழங்குடிகளுள் ஒன்று.
தென்னிந்தியாவில் வாழும் பழங்குடிகளுள் ஒன்று. இக்குழு மக்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலும் கருநாடக மாநிலத்திலும் காணப்படுகின்றனர். இவர்களின் தாய்மொழி கன்னடத்திலிருந்து தோன்றிய ஒரு கிளைமொழி. எனினும், அனைவரும் மலையாளமும் அறிந்துள்ளனர். உயர்குலப் பிரிவினர் ஒருவருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் ஒருத்திக்கும் உதித்த வழித்தோன்றல்களே அடியன் இனத்தவர் என்ற பழங்கதை ஒன்று, இவ்வினத்தவரிடையே வழங்கி வருகிறது.
அடியன் பழங்குடி மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ‘தம்புரான்’ மக்களின் விளைநிலங்களில் அடிமையாக வேலை செய்து வருகின்றனர். இம்மக்கள் ஏனைய தீண்டத்தகாத சமூகங்களைக் காட்டிலும் மிக்க கீழ்நிலையில் நடத்தப்படுகின்றனர். இவர்களின் பண்ணை முதலாளிகள், இவர்களிடமிருந்து தீட்டைத் தவிர்ப்பதற்காகக் குறைந்தது ஆறு அடி தூரமாவது தள்ளியிருக்கவேண்டும் எனக் கருதுகின்றனர். எனினும் உயர்சாதியினரின் வாழ்வுச் சடங்குகளில் அடியன் இனத்தவரின் பணி இன்றியமையாததாக இருக்கிறது. அடியன் பெண்மணி உயர்சாதியினரின் மாதவிடாய்க்குப் பிறகு பல தூய்மைப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்ளுகிறாள். இவள், தான் சார்ந்துள்ள வீட்டின் பெண் மகப்பேறு அடைந்திருக்கும்போது தீட்டுக்கழியும் நாள்வரை தாயையும் சேயையும் நன்முறையில் பேணிக்காத்தல் வேண்டும். இக்காலங்களில் இவளைத் தொடுவதனால் தீட்டேதும் பட்டதாகக் கருதப்படுவதில்லை. இவர்கள் செய்துவந்த அடிமை ஊழியத்திற்கு ஒரு (பரிசுப்பணம்) தங்கள் பண்ணையாளர்களிடமிருந்து பெறுவர். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் பெறும் இப்பணம் ‘அடிமைப்பணம்’ எனக் கூறப்படுகிறது. அடியன் மக்களிடையே வழி வழி வந்த ‘பெருமான்’ எனப்படும் தலைவன் உளன். பெரும்பாலும், அடியன்கள் வாழுமிடங்கள் மலையுச்சியிலோ மருத நிலப்பரப்பிலோ இருக்கும். இவர்களுக்குச் சொத்துரிமை ஏதுமில்லை. எனவே, தங்கள் சந்ததியினரிடையே சொத்தைப் பிரிப்பது தொடர்பான பழக்க வழக்கச் சட்டமுறைகளும் இவர்களிடையே இல்லை. இக்காலத்தில் இவர்கள் மிகக் குறைவான கூலியைப் பெறும் ஊழியர்களாக உழுதொழில் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் இந்துக்களின் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இந்தப் பழங்குடிகளுக்கென குறிப்பிடத்தக்க கோயில்கள் எவையும் கிடையா. இவர்கள், முன்னோர் வழிப்பாட்டை மேற்கொள்கின்றனர். முன்னோர்களின் சாவுச் சடங்குகளை இவர்களின் தலைவன் முன்னின்று நடத்துகிறான்.ஆ.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 261)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e35cfuqv/
தமிழ்“அடியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e35cfuqv/APA
Oliyon Research. (2026). அடியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e35cfuqv/MLA
"அடியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e35cfuqv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment