அரசியார் பேரறிக்கை
araciyār pēraṟikkai
அரசியார் பேரறிக்கை என்பது விக்டோரியா அரசியாரால் கி.பி.
அரசியார் பேரறிக்கை என்பது விக்டோரியா அரசியாரால் கி.பி. 1858–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிக்கும். இது அரை நூற்றாண்டுக் காலத்திற்கு இந்திய மக்களின் உரிமைச் சாசனமாக விளங்கியது. பேரரசியார் விக்டோரியாவின் பேரறிக்கை படைவீரர் கலகத்திற்குப் பின் கி.பி. 1858–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 1–ஆம் நாள் இந்திய அரசர்கள், சிற்றரசர்கள், மக்கள் ஆகிய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதியும் தலைமை ஆளுநருமான கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற அரசவை விழாவில் இதனை வெளியிட்டார். அரசியாரின் விருப்பத்திற்கேற்பத் திருத்தியமைக்கப்பட்ட இப்பேரறிக்கையில் அவருடைய பெருந்தன்மை, அறச்செயல், சமயப் பொறை ஆகியவற்றை உணர்த்தும் கீழ்க்காணும் கூறுகள் அடங்கியிருந்தன.
“கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் அரசியான விக்டோரியா எனப்படும் யாம், பல இன்றியமையாத காரணங்களை முன்னிட்டு, பிரபுக்கள் மக்கள் சபையாரின் இசைவினைப் பெற்று, இதுவரையில் கிழக்கிந்திய வாணிகக் குழுவால் நிருவகிக்கப்பட்டு வந்த இந்திய ஆட்சியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். ஆதலால் அப்பகுதிகளில் உள்ள குடிமக்கள் நம்மிடம் அன்புள்ளவர்களாக இருக்குமாறு பணிக்கிறோம்; நமக்கும் நம் சந்ததியார்க்கும் நம்மால் இந்தியாவை ஆளுவதற்கு நியமிக்கப்படுவோர்க்கும் அவர்கள் பற்றுறுதியுடன் இருக்க வேண்டும்.
“நாமும், திறமைசான்ற ஊழியமும் விசுவாசமும் கொண்டுள்ள சார்லசு சான் கானிங் பிரபுவை நம் முதல் அரசப் பிரதிநிதியாக அல்லது தலைமை ஆளுநராக நியமிக்கின்றோம். அவர் அப்பகுதிகளை தம் சார்பில், நம் பெயரால் ஆட்சியை நிருவகிப்பார். அவர் இந்திய விவகாரங்களைக் கவனிக்க இங்கிலாந்து நாட்டு அமைச்சரவையிலுள்ள செயலாளர்களுள் ஒருவர் வழியாக நாம் பிறப்பிக்கும் ஆணைகள் விதிகள் ஆகியவற்றிற்கு உட்பட்டுச் செயற்படுவர்”.
“இப்போது கிழக்கிந்திய வாணிகக் குழுவின் பணியில் உள்ள படைத்துறை சாராத அரசு அலுவலர்கள் யாவரையும் நாம் அவரவர்கள் பணியிலேயே அமர்த்திக் கொள்கிறோம். அவர்கள் நம் விருப்பக் காலத்திற்கு ஊழியம் செய்யக்கடவர்”.
“அன்றியும், சுதேச மன்னர்களுக்கு (Native Princess) இதன்வாயிலாகத் தெரிவிப்பது யாதெனில், கிழக்கு இந்திய வாணிகக் குழு அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களும் அங்ஙனமே அவற்றை மதித்து நடப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்”.
“இப்பொழுது நம்மிடம் உள்ள பகுதிகளை விரிவுபடுத்த நாம் விரும்பவில்லை; நேரடிப் பகுதியில் அயலார் படையெடுப்பதையும் அனுமதியோம்; அண்டை நாடுகள்மீது அத்துமீறுதலையும் அனுமதியோம்”.
“சுதேச மன்னர்களின் உரிமைகள், பெருமை மரியாதை ஆகியவற்றை எங்களுடையதாகக் கருதி மதிப்போம்; நம் குடிமக்களைப்போன்று அவர்களுடைய வாழ்வும் வளம்பெறச் சமுதாயம் முன்னேற விரும்புகிறோம்; இவை உள்நாட்டு அமைதியாலும் நல்லாட்சியாலுமே பெறப்படுவனவாம்”.
“எங்களுடைய மற்றக் குடிமக்களுடன் கடமையுணர்ச்சியால் நாங்கள் பிணைக்கப்பட்டுள்ளது போன்று இந்திய மக்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள அக்கடமைகளை உண்மையுடன், மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்றுவோம்”.
“நாம் கிறித்தவ சமயத்தில் ஆறுதல்களைப் பெற்று அமைதி அடைகின்றோம்; நம் குடிமக்களின் மீது நம் கருத்துகளைத் திணிக்க விரும்பவில்லை. சமய நம்பிக்கை, கோட்பாடுகளின் பெயரால் எவரொருவருக்கும் தனிச்சலுகை காட்டுதலோ எவரொருவரையும் வருத்துதலோ கூடாது என்பது எம் கருத்து. எல்லோரும் சட்டங்களால் சமமாகவும், நடுநிலைமையோடும் பாதுகாக்கப்படல் வேண்டும். நம் குடிமக்களின் சமய நம்பிக்கைகளிலும், வழிபாட்டு முறைகளிலும் தலையீடுதல் கூடாது என்று அதிகாரிகள் வலியுறுத்தப்படுகின்றார்கள்.
“நம் குடிமக்களின் இனம் அல்லது சாதி, சமயக் கோட்பாடு எதுவாயினும், வேறுபாடின்றித் தடையில்லாமல், கல்வியறிவு, திறமை, பணியில் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும் என்பதும் எங்கள் நோக்கம்”.
“இந்திய மக்கள் தம் முன்னோர்களிடமிருந்து தாங்கள் மரபுரிமையாகப் பெற்ற நாட்டின்மீதுள்ள உணர்வை நாங்கள் அறிவோம்; அதனை மதிக்கிறோம்; அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்து உரினமகளும் நில உடைமையும் பேரரசியின் நியாயமான தேவைகள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்படும். பொதுவாகச் சட்டமியற்றுதலிலும் அதனை நிருவகிப்பதிலும் மரபுரிமைகள், இந்தியாவின் செயல் வழக்காறுகள் ஆகியவற்றிற்குத் தகுதியுரிமை வழங்கப்படும்”.
“பேராசை பிடித்தவர்கள் செய்கையால், இந்திய நாட்டிற்கு அண்மையில் ஏற்பட்ட தீமைகளையும், துன்பங்களையும் கண்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்; அவர்கள் தங்கள் நாட்டு மக்களைப் பொய் வதந்திகளால் ஏமாற்றியிருக்கின்றனர். மேலும் அவர்களை வெளிப்படையாகக் கலகமிடவும் தூண்டியிருக்கின்றனர். போர்க்களத்தில் அக்கலகத்தை ஒடுக்கிய முறையால் நமது வலிமை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தவறான பாதையில் இட்டுச் செல்லப்பட்டவர்களை நாம் மன்னித்து விடுகின்றோம்”.
“இறையருளால் உள்நாட்டு அமைதியைத் திரும்பவும் நிறுவியபின், இந்தியாவின் அமைதிக் காலத் தொழில்துறை ஊக்குவிக்கப்படும்; பொதுநலத் துறைப்பணிகள் மேம்படுத்தப்படும்; மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். இந்திய மக்களின் நல்வாழ்வு எங்கள் வலிமை; அவர்களின் மனநிறைவு எங்கள் பாதுகாப்பு; அவர்களின் நன்றியறிதலே தலைசிறந்த கைம்மாறு”.
“நம் மக்களின் நலனுக்காக இவ்வெண்ணங்கள் நன்கு ஈடேறுமாறு இறைவன் நமது திறனைப் போற்றிப் பாதுகாப்பாராக”!
பேரரசியார் பேரறிக்கையில் புதுயுகத்தைப் புகுத்துவதற்குரிய நெறிமுறைகள் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம். தீமையில் இருந்து நன்மை தோன்ற முடியும் என்றால், இத்தகைய திட்டங்கள் அனைத்திற்கும் படைவீரர் கலகமே அடிப்படைக் காரணம் எனலாம். பேரரசியார் பெருந்தன்மையுடன் கலகக்காரரை அளவு மீறித் தண்டிப்பதில்லை என உறுதியளித்தார். இதனால் இந்தியாவில் அமைதியை ஏற்படுத்துவது கானிங் பிரபுவுக்கு எளிதாயிற்று. ஏற்கனவே நிறைவேறிய பட்டயச் சட்டங்களும் இப்பேரறிக்கையில் முற்றுப்பெற்றன. வாணிகக் குழுவின் அதிகாரங்கள் முழுவதும் கி.பி. 1853 ஆம் ஆண்டுக்குள்ளாக ஆங்கில அரசின் ஆட்சிக்குச் சென்றுவிட்டன. நாட்டு மரபுவழியான பழக்க வழக்கங்களில் தலையிடுவதில்லை என்றும் நில உடைமைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில்லை என்றும் இப்பேரறிக்கை அறிவித்தது. ஆனால், அரசுப் பணிகளில் சாதி, சமய வேறுபாடுகளைக் கவனியாமல், தகுதியொன்றை மட்டும் கவனிப்பார்கள். இது நவீன மயமாக்குதலின் குறிக்கோள்களுள் ஒன்று எனலாம். பொது நலனுக்கான பணிகளும் அமைதியான தொழில்களும் வளர்ச்சியும் நல்லாட்சியின் கூறுகள் என்பதையும் சுட்டிக்காட்டிற்று இப்பேரறிக்கை. ‘இந்திய மக்களுக்கு இவ்வாணை புதிய வானத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தது. அவர்களுக்கு அமைதி, சமயப் பாதுகாப்பு, அரசியாரின் மற்றக் குடிமக்களுடன் சம உரிமை ஆகியவற்றை அளித்ததோடு இவைகளுக்கும் மேலாகத் தகுதியுடையவர்க்கு உயர் பதவிகள் அளிக்கப்படும் என உறுதியும் அளித்தது’ எனப் பேராசிரியர் ஈசுவரி பிரசாத் கூறுகிறார். இப்பேரறிக்கையைக் கி.பி. 1215–இல் சான்மன்னர் கையொப்பமிட்ட பெரும் பட்டயத்துடன் (Magna Carta) ஒப்பிட்டு, “இந்தியாவின் பிறப்புரிமையை உறுதிப்படுத்தும் ஒரு பெரிய முதல் அரசியல்சட்டம்” எனப் புகழ்கின்றனர்.பி.கி.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 724)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e2pnubdy/
தமிழ்“அரசியார் பேரறிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e2pnubdy/APA
Oliyon Research. (2026). அரசியார் பேரறிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e2pnubdy/MLA
"அரசியார் பேரறிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e2pnubdy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment