சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்; வீரமிக்கவன்; அக்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களுள் ஒருவன். எழினி என்பது இவன் இயற்பெயராகும். தன் எதிரியொடு தகடூரில் போர் செய்து இறந்தவன் என்பது இவன் பெயரிலமைந்த அடையினால் தெரிகிறது. இவன் இறந்தபோது அரிசில் கிழார் கையறு நிலைத்துறையில் ஒரு பாடல் (புறம். 230) இயற்றினார். அதில், அவர் எழினியை, ‘விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்’ உடையவன் என்றும், ‘வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாள்’ உடையவன் என்றும், பொய்யாதவன் என்றும் பாராட்டியுள்ளார்.