ஓர் ஆங்கிலச் சமூக மானிடவியல் வல்லுநர்; சிறுசமூகத்தினரின் சமூக அமைப்பினை (Social Structure) அறிய முறையான கோட்பாட்டையும் பொதுமைப்பாடுகளையும் உருவாக்கியவர். ஆல்பிரடு இரெசினால்டு பிராட்கிளியு பிரெளன் (Alfred Reginald Radcliff Brown) இருபதாம் நூற்றாண்டின் முற்பாதிக் காலத்தில் வாழ்ந்த தலையாய மானிடவியலாளர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு சனவரி 17–ஆம் நாள் இங்கிலாந்தில் இராட்கிளிபு பிரௌன் பர்மிங்காமில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரௌன் ஆகும். இவர் 1926–ஆம் ஆண்டில் தம் தாயின் பெயரான இராட்கிளிபு (Radcliff) என்னும் பெயரையும் இணைத்து இராட்கிளிபு பிரௌன் என்று மாற்றிப் பெயரிட்டுக் கொண்டார். கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத் திரினிட்டி கல்லூரியில் (Trinity College) பயின்றபின் தம் முதல் மானிடவியல் களப்பணியை 1906 முதல் 1908 வரை அந்தமான் தீவுகளில் மேற்கொண்டார். இப்பணியின் வெற்றியை அடுத்துத் திரினிட்டி கல்லூரியின் ஆராய்ச்சிப் புத்தாய்வு ஊதியம் (Fellowship) கிடைக்கப் பெற்றார். இதனையடுத்து 1910–1912 இல் மேற்கு ஆசுத்திரேலியாவிற்கு ஆய்வுப் பயணத்தை மேற் கொண்டார். ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளின் உறவுமுறை, குடும்ப அமைப்பு முதலானவற்றைப் பற்றி முதன்மையாக ஆராய்ந்தார். தொங்கா (Tonga) அரசின் கல்வித் துறைக்கு இயக்குநராக 1916–ஆம் ஆண்டு பணியாற்றினார். கேப் நகரப் (Cape Town) பல்கலைக் கழகத்தில் 1920–இல் இருந்து 1925–ஆம் ஆண்டு வரை சமூக மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்குப் பிரௌன் ஆப்பிரிக்க வாழ்க்கையும் மொழியும் பற்றிய புலத்தை (School of African Life and Languages) நிறுவினார். சிட்னிப் பல்கலைக் கழகத்தில் 1925–இலிருந்து 1931 வரையிலும், சிகாகோப் பல்கலைக் கழகத்தில் 1931–இலிருந்து 1937– வரையிலும், ஆச்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் 1937–இலிருந்து 1946–வரையிலும் சமூகமானிடவியல் பேரா- சிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1947–இலிருந்து 1949 வரையிலும் எகிப்திலுள்ள பரோக்குப் (Farouk) பல்கலைக் கழகத்தில் (இப்போது அலக்சாண்டிரியாப் பல்கலைக் கழகம்) பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 1955–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 24–ஆம் நாள் இயற்கை எய்தினார். இராட்கிளிப்பு பிரௌனுக்கு அடுத்து வந்த அனைத்து மானிடவியலாரும் இவருடைய கொள்கையில் மிக்க அளவு ஈடுபாடு செலுத்தினர். இவர் 1922–இல் வெளியிட்ட அந்தமான் தீவினர் ஆய்வில் சமூக அமைப்புப் (Social Structure) பற்றிய விரிவான கொள்கையை வகுத்துள்ளார். தொடக்க காலத்தில் பண்பாடே அடிப்படை என்று எண்ணியிருந்தார். தம் ஆய்வுப் பரப்பில் முதிர்ச்சியுற்ற பொழுது, பண்பாடு சமூகத்தின் ஒரு கருத்துப் பொருளே (Abstraction) என்றும், இது மதிப்புகளையும் முறைமைகளையும் உள்ளடக்கி நிற்கிறது என்றும் எண்ணினார். இந்நிலையில் பண்பாட்டின் அறிவியலை உணருவது கடினமென்றும், மக்களுக்கிடையே அல்லது மக்கள் குழுக்களுக்கிடையே காணப்படும் அமைப்புகளையும் அவர்களுக்கிடையே நிலவும் நடத்தைக் கூறுகளையும் உறவுகளையும் அறிந்து கொள்ளுதல் எளிதென்றும் எண்ணினார். இவரது சமூக அமைப்பு (Social Structure) மிகத் தெளிவான ஒரு நிலையினைச் சமூகக் கட்டமைப்புடன் (Social Organization) தெளிவுபடுத்தி நிற்கவில்லை. ‘சமூக அமைப்பு’, ‘சமூகக் கூட்டமைப்பு’ ஆகிய இவ்விரண்டும் ஒரு பொருட்சொல்லாகக் காணப்பட்டன. அமைப்பியல் செயற்பாட்டியல் கோட்பாட்டின் (Structural–functionalism) அணுகுமுறை இவரால் உருவாக்கப்பட்டதாகும். குடும்பம், உறவுமுறை, வயதுக் குழுக்கள், அரசியலமைப்பு, சட்டம், பொருளாதாரக் கட்டமைப்பு முதலான செயற்பாடுகளை உள்ளடக்கிய உறவுகளை அடிப்படையாக ஆராயும் பரப்பை இவர் உருவாக்கினார். இதுவே சமூக மானிடவியல் அல்லது ஆங்கிலேய மானிடவியல் என்று கூறப்படுகிறது. இதனை ஒப்புமைச் சமூகவியல் எனவும் குறிப்பிட்டனர். ஆசுத்திரேலியாவில் சிட்னிப் பல்கலைக் கழகத்தில் (1925–31) பணியாற்றியபோது கல்விசார் பணியிலும் கொள்கை சார்ந்த மானிடவியல் பரப்பிலும் ஆராய்ச்சிப் பரப்பிலும் பயன்படுசார் மானிடவியல் பரப்பிலும் மிகுந்த ஈடுபாட்டினைத் தாமும் வளர்த்துக் கொண்டு மாணாக்கருக்கும் கற்பித்தார். இவர் 1931–இல் வெளியிட்ட ஆசுத்திரேலியப் பழங்குடிகளின் சமூகக் கட்டமைப்பு (Social organization of Australian Tribe) என்னும் தம் படைப்பில் சிறந்த கோட்பாட்டினையும் அதன் அணுகுமுறையின் பயன் முறைகளையும் வெளியிட்டார். ஆசுத்திரேலியாவின் அனைத்து ஆதிக் குடிகளிலும் அவர்களின் உறவு முறை, திருமணம், மொழி, மரபுகள், தொழில், நிலஉடைமை, பால் உறவு, வானியல் அறிவு முதலான செயற்பாடுகளின் தரவுகளை வகைப்படுத்திப் பகுத்தாய்ந்தார். இதன் அடிப்படையில் சமூகத்தின் இயல் நிகழ்ச்சிகளையும் சமூகக் கட்டமைப்பில் காணப்படும் கூறுகளின் செயல்தன்மையையும் அறிந்தார். இராட்கிளிப்பு பிரௌனின் முதன்மையான படைப்புகளாகக் கருதப்படுபவை அந்தமான் தீவினர் (Andaman Islanders–1922), ஆசுத்திரேலிய ஆதிக்குடிகளின் சமூகக் கட்டமைப்பு (Social Organization of Australian Tribes–1931), ஆதிக்குடிகளின் அமைப்பும் செயல்முறையும் (Structure and Function in Primate Society–1952), சமூக மானிடவியலில் முறைகள் (Methods in Social Anthropology–1958) ஆகியவையாகும்.