அவிரோத நாதர்
avirōta nātar
கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் விளங்கிய சமண சமயப் புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் விளங்கிய சமண சமயப் புலவர்களுள் ஒருவர். சமணர்களும் தம் சமயத்தொடர்பாக இலக்கியங்களும் பிரபந்தங்களும் இயற்ற முற்பட்டனர். இவர் திருநூற்றந்தாதி என்னும் அந்தாதி நூலை இயற்றியுள்ளார். இவர் பெயர் அவிரோதி நாதர் என்றும் அவிரோதி ஆழ்வார் என்றும் வழங்கப் பெறும். அவிரோதி என்பது பகை கடந்தவன் என்னும் பொருளில் அருகதேவனைக் குறிக்கும் பெயராகும். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர்ச் சமணசமயம் சார்ந்தவர் என்று கூறப்படுகிறார். வைணவராக இருந்தபோது, ஒருகால், சமண சமய நுட்பம் அறிய விரும்பினார். சமண சமயம் சார்ந்தவர்க்கல்லது கூறுவதற்கில்லை என்று கூறக்கேட்ட இவர் உடனே அச்சமயம் சார்ந்து, நேமிநாதர் கோயிலை ஒருமுறை வலம் வருவதற்குள் திருநூற்றந்தாதியினைப் பாடி முடித்தமை கண்டு, இவருக்கு அச்சமய நுண்பொருள் உபதேசம் செய்யப்பட்டது என்பது கூறப்படுகிறது. தமிழில் பெருந்திரட்டு ஒன்றினைத் தொகுத்த தத்துவராயர், சமய வேறுபாடு கருதாது, இந்நூலிலிருந்தும் பாடலைத் தேர்ந்து தம் திரட்டில் சேர்த்துள்ளார். இந்நூல் 100 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆகிய அருக சமயத் துதிநூல் ஆகும். இந்நூலாசிரியர் இவ்வந்தாதியை அருகதேவன் பாதத்தில் சேர்த்ததாகத் தெரிவித்துள்ளார். ‘நாக்கொண்ட செஞ்சொல் அவிரோதிநாதன் நவின்ற மெய்ந்நூல்’ என்றும், ‘அந்தாதியாக அவிரோதி ஓதிய ஆகமம்’ என்றும், இந்நூற் சிறப்புப் பாயிரம் கூறுவது, நூலாசிரியனைக் குறித்தே என்றும் சிலர் கூறுவர். மற்றுஞ்சிலர், இவற்றில் ‘அவிரோதி’ என்பது அருக தேவனைக் குறிக்கும் என்பர். திருநூற்றந்தாதியேயன்றி, இந்நூலாசிரியர் சமணசமய பரமாகத் திருவெம்பாவை ஒன்றும் இயற்றியுள்ளார் என்பது கூறப்படுகிறது. இந்நூல் 20 பாடல்களும் இரண்டு மிகைப்பாடல்களும் கொண்டுள்ளது. இந்நூலின் நடைப்போக்கு முதலியவற்றை ஆய்ந்த சிலர் இது அவிரோத நாதரால் பாடப்பட்டதன்று; பிற்காலத்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 907)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dgm4udyq/
தமிழ்“அவிரோத நாதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dgm4udyq/APA
Oliyon Research. (2026). அவிரோத நாதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dgm4udyq/MLA
"அவிரோத நாதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dgm4udyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment