உபநிடதங்கள் வேதங்களின் பகுதிகளாகிய மந்திரம், பிராமணம், ஆரணியகம் ஆகியவற்றை அடுத்து இறுதிப் பகுதியாய் அமைந்துள்ளதால் வேதாந்தங்கள் எனப்படுகின்றன. உபநிடதம் என்னும் வடசொல்லுக்கு மிக்கதுடன் ஆசிரியர் அருகில் அமர்வது என்பது பொருள். உபநிடதங்களுக்கு மறைபொருள் என்ற பொருளும் உண்டு. எனவே மறையாகிய உண்மையறிவை ஆசிரியர் மாணவனுக்குக் கற்பித்தல் என்றும் பொருள்படும். வேதங்களில் சொல்லப்படும் உண்மைகளுள் இதுவே சிறந்தது என்பதாலும், வேத அறிவிற்கெல்லாம் இதுவே முடிவென்பதாலும், இவ்வுண்மையறிவு பிறவிப் பிணியையும் அதன் காரணமான அறியாமையையும் நீக்குவது என்று சங்கரரின் உரையிற் காணப்படுவதாலும் இவ்வறிவு காணப்படும் பகுதியான உபநிடதங்களுக்கு வேத–அந்தம் என்னும் பெயர் பொருந்துவதாகும். பின்னர், உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சிந்தனைகளும் வேதாந்தங்கள் என்றே சொல்லப்பட்டன. உபநிடதங்கள் எப்பொழுது, எம்முறையில், யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்று கூறமுடிவதில்லை. உபநிடதங்களுள் மிகப் பழமையானவை புத்தர் காலத்திற்கு முன்னர் தோன்றியிருக்கவேண்டும் என்று கருதப்படுவதால் அவற்றின் காலத்தை கி.மு. எட்டாம் நூற்றாண்டு எனலாம். பார்த்து என்ற அறிஞரின் கருத்துப்படி உபநிடதம் என்ற பெயருள்ள 250 நூல்கள் இப்பொழுது இருக்கின்றன. உபநிடதங்களை 108 என்று கணக்கிட்டு முக்திசோபநிடதம் அட்டவணைப்படுத்துகிறது. இவற்றுள் மிகவும் பழமையானவையும், சங்கரர் போன்றோரால் அடிப்படையாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளவையும் ஆகிய உபநிடதங்கள் 13 மட்டுமே. இவை ஈச, கேன, கத, பிரச்சன, முண்டக, மாண்டூக்கிய, தைத்திரீய, ஐதரேய, சாந்தோக்கிய, பிரசுதாரணியக, கௌடீதகீ, மைத்திராணீய, சுவேதாச்சுவதார உபநிடதங்கள். இவற்றுள் சில உரைநடையிலும் சில செய்யுள் வடிவிலும் சில இரண்டும் கலந்த நடையிலும் அமைந்துள்ளன. பிற்காலத்தில் தோன்றிய உபநிடதங்கள் அவை காணப்படுகின்ற வேதப் பகுதியைப் பொறுத்தும், குணங்களுடன் கூடிய இறைவர்களைப் போற்றுவதைப் பொறுத்தும் பெயர் பெறுகின்றன. இவ்வகையில் மந்திரம் அல்லது சம்கிதையின் இறுதியில் உள்ள உபநிடதப்பகுதிகள் ‘சங்கிதோபநிடதம்’ எனவும், பிராமணங்களுடன் இணைந்தவை ‘பிராமணோபநிடதம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றன. விட்டுணு, சிவன், தேவி, கணேசன், கந்தன், சூரியன், இராமன், நரசிம்மன் போன்ற இறைவர்களையும், அவர்களின் தோற்றங்களையும் போற்றும் அப்பெயர்களாலேயே உபநிடதங்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில உபநிடதங்கள் தாம் அடிப்படையாகக் கொண்டுள்ள பொருளின் பெயரால் சொல்லப்படுகின்றன. உபநிடதங்களை அவை சார்ந்த வேதங்களைக் கொண்டும் பிரித்துக் கூறுவதுண்டு. நால் வேதங்களில் அதர்வண வேதத்தைச் சார்ந்த உபநிடதங்களே எண்ணிக்கையில் மிகுந்தவை. உபநிடதங்கள் பொதுவாக மூவகை அறிவைப் பற்றிப் பேசுகின்றன. அவை: கருமகாண்டம் எனப்படும் வினைப்பகுதியில் கூறப்பட்டுள்ள சில வினைகளுக்கோ அவற்றின் உறுப்புகள் சிலவற்றிற்கோ பொருளை விளக்கி, அவற்றின் மூலம் மன ஒருமைப்படுத்துதலைக் கூறுவது; ஆன்மாவை உணர்வதற்கான சில செயல்முறைகளை விவரிப்பது; தத்துவங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பேருண்மைகளை எடுத்து உரிய வழிகளின்மூலம் ஆராய்வது. உபநிடதங்கள் கற்பிக்கும் உண்மையைச் சுருக்கமாகப் பிரமம்–ஆன்மா என்பதனால் சுட்டலாம். எங்கும் எப்பொழுதும் உள்ளதும் பேரொளியானதும் அனைத்திற்கும் அடிப்படையாகவும் தோற்றுவாயாகவும் உள்ளதும் பிரமம். ஒவ்வொருவருக்கும் உள்ளே நின்று இயங்குவது ஆன்மா. பிரமமும் ஆன்மாவும் ஒன்றே என உபநிடதங்கள் கூறுகின்றன. புறத்தே தோன்றும் உலகிற்கு அடிப்படையாயுள்ளது ஆன்மா. அதுவே உண்மைப் பொருள். உலகத்தைப் பற்றிய எண்ணமும் தன்னைப் பற்றிய எண்ணமும் பிரமம்–ஆன்மா என்ற ஒரே பொருளில்தான் முடிவுறுகின்றன. பிரம–ஆன்ம உண்மையை உபநிடதங்கள் இருவகையில் விளக்குகின்றன. i) முதலில் பருப்பொருள்களிலோ உடல் வட்டங்களிலோ உணர்வு நிலைகளிலோ தொடங்கி, இதுவல்ல என்று ஒவ்வொன்றாக விலக்கி, இறுதியில் அனைத்திற்கும் நுண்ணியதாக விளங்குவதே உண்மைப்பொருளான பிரமம்–ஆன்மா என்று உபநிடதம் கூறுகின்றது. இவ்விளக்கத்தில் உலகும் அதன் பொருள்களும் உண்மையல்ல; வெறுந் தோற்றமே என்று கருதப்படுவதால் இது நிட்பிரபஞ்சவாதம் அல்லது உலகுண்மை இன்மைக்கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. இக்கோட்பாடு பின்வரும் மூன்று உபநிடதங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிருகதாரணியக உடநிடதத்தில் கார்கி என்னும் அம்மையார் அனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படையானது யாது என்று வினவியதற்கு, யாக்ஞவல்கியர் என்னும் முனிவர் விடையாக முதலில் பருப்பொருள்களிலிருந்து தொடங்கி, படிப்படியாகச் சென்று, பரந்தவெளியே யாவற்றுக்கும் அடிப்படை என்று முடித்தார். மேலும் வினவுகையில் வெளிக்கும் அப்பால் உள்ளது அழியாத, இன்னதென்று விவரிக்க இயலாத பொருள் என்று கூறுகிறார். அதுவே பிரமம் ஆகும். தைத்திரீய உபநிடதத்தில் பிருகு என்பவர் பிரமத்தைப்பற்றிக் கூறுமாறு தம் தந்தை வருணரைக் கேட்டார். அவர் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, எதில் வாழ்ந்து, இறுதியில் எதில் ஒடுங்குகின்றதோ அதுவே பிரமம் ஆகிய உண்மைப் பொருள் என்றார். பின்னர்ப் பிருகு தம் தவ வலிமையால் அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம் ஆகிய உடல் திரைகளை ஒவ்வொன்றாகப் பிரமம் அல்ல என்று விலக்கி அவற்றுக்கு உள்ளே ஆனந்தப் பிழம்பாக விளங்கும் பொருளே பிரமம்–ஆன்மா என்று உணர்ந்தார். மாண்டூக்கிய உபநிடதம் ஆன்மாவை உணரும் பிறிதொரு முறையைக் குறிக்கிறது. பிரமம் அல்லது ஆன்மா என்னும் முதற்பொருளை ஓம் என்ற சொல் குறிக்கிறது. ஓங்காரத்திற்கு நான்கு மாத்திரைகள் இருப்பது போன்று ஆன்மாவிற்கு நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் மூன்று நிலைகளான விழிப்பு, கனவு, உறக்கம் ஆகியவற்றில் உணரப்படும் பொருள்கள் தோன்றியும் மறைந்தும் வேறுபட்டும் இருப்பினும், இவற்றின் அடிப்படையாக விளங்கும் ஆன்மா மாறாதது; அழிவில்லாதது. இந்நிலை துரியம் எனப்படுகிறது. இது ஓங்காரத்தின் அ, உ, ம் என்ற ஒலிகளுக்கு அப்பால் உள்ள அரை மாத்திரையைப் போன்றது. ஆன்மாவின் அல்லது பிரமத்தின் உண்மை இயல்பு எண்ணத்திற்கும் மனத்திற்கும் அப்பால் இரண்டல்லாத ஒன்றான துரிய நிலை ஆகும். இந்நிலையில் ஆன்மாவின் இயல்பு ஆனந்தமே. உபநிடதங்களில் நிட்பிரபஞ்சக் கோட்பாட்டைத் தெரிவிக்கும் வாக்கியங்களின் கருத்து பிரமம் வெறுமை என்பதன்று. எல்லையற்ற பொருளான பிரமம் எண்ணங்களுக்கு உட்பட்டதன்று என்பதனா- லேயே இதுஅன்று இதுஅன்று என்று குறிக்கப்படுகிறது. நிட்பிரபஞ்ச வாக்கியங்கள், ‘பிரமம் சத்தியம் ஞானம் ஆனந்தம்’, ‘சத்தியத்தின் சத்தியம்’ என்பன இலக்கண வாக்கியங்களுடன் சேர்ந்து பேருண்மைப் பொருளைப் போற்றுகின்றன. கால இடவரையறையின்றி எப்பொழுதும் எங்கும் உள்ளபடியால் சத்தியம் என்றும், உணர்வற்ற பொருளாயில்லாது உணர்வுப் பொருளாயிருப்பதால் ஞானம் என்னும், துன்பமற்று விணங்குவதால் ஆனந்தம் என்றும் பிரமம்-ஆன்மா கூறப்படுகின்றது. 2. பிரம–ஆன்மாவின் மற்றொரு வகை விளக்கத்தில் பிரமம் அல்லது ஆன்மா சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் அடிப்படையாக உள்ளது. உயிர்களுக்கும் உலகிற்கும் அதுவே முதல். இவ்விளக்கத்தில் உலகும் அதன் பொருள்களும் உண்மை என்று கருதப்படுவதால் இதனை சனப்பிரபஞ்சுவாதம் அல்லது உலகுண்மைக் கோட்பாடு என்கின்றனர். இக்கோட்பாடு சாந்தோக்கிய உபநிடதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இரண்டல்லாத ஒன்றாகிய உள்பொருள் மட்டுமே இருந்தது. அது ‘நான் நன்றாகப் பெருகுவேனாக’ என்ற எண்ணம் கொண்டவுடன், அதனின்றும் முதலில் நெருப்பும் பின்னர் நீரும் அதன்பின்பு உணவும் தோன்றின. பிறகு இம்மூன்றின் கலப்பால் ஏனைய உயிருள்ள பொருள்களும் உயிரற்ற பொருள்களும் தோன்றின. இரண்டல்லாத ஒன்றாகிய உள்பொருள் யாவற்றிற்கும் அடிப்படையால் இருக்கின்றது. அதுவே அனைத்தும்; அதுவே உண்மை; அது பிரமம்–ஆன்மா. மேலும், பிரமம் அல்லது ஆன்மா மனமாகவும், பிராணனாகவும், உடலாகவும், ஒளி வடிவாகவும், உண்மையாகவும், உறுதியாகவும், அனைத்துச் செயல்களாகவும், விருப்பங்களாகவும், உணர்வுகளாகவும், அனைத்தையும் ஈர்த்துக்கொள்வதாகவும், சொல்லற்று அமைதியாய் விளங்குகிறது. உலகுண்மைக் கருத்தின்படி இவ்வுலகம் பிரமத்தால் படைக்கப்பட்டது. பிரமத்தின் ஒரு பகுதியே உலகமாக மாறுகின்றது. உலகிற்குப் பொருள்காரணமும் செயல் காரணமும் பிரமமே. பிரமம் உலகமாகவும் அதே சமயம் உலகைக் கடந்தும் இருக்கிறது. உயிர்ப் பொருள்களும் உயிரற்றவையும் பிரமத்திலிருந்து படிப்படியாகத் தோன்றியவையே, இறுதியாய் இவையாவும் பிரமத்தையே அடைகின்றன. சீவன் என்று சொல்லப்படும் உயிர் உண்மையில் ஆன்மா அல்லது பிரமத்தினின்னும் வேறானதன்று. அது அறியாமையினால் கட்டுப்பட்டுப் பிறப்பு இறப்பு வட்டத்தில் தொடர்ந்து பிறந்தும் இறந்தும், ஊழ் வினைகளின் பயனை நுகர்ந்துகொண்டே மேன்மேலும் புதிய வினைகளையும் சேர்க்கிறது. நான், எனது என்ற எண்ணங்களினால் துன்புறும் சீவனை அவ்வறியாமையினின்றும் விடுவிப்பதை உபநிடதங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. அறியாமையினின்று நீங்கி வீடுபேறு பெறுதற்குரிய வழிகளையும் உபநிடதங்கள் கூறுகின்றன. வீடு பேறு பெற முதலில் ஒருவன் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர் அழியும் உலகப்பொருள்களின்பால் உள்ள பற்றை நீக்கி உண்மைப்பொருளான ஆன்மாவை அடையும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, உண்மை உணர்ந்தவர்களை அடைந்து அவர்களின் வாயிலாக முற்றறிவைப் பெற வேண்டும். அவர்கள் சொல்வதைக் கவனத்துடன் கேட்டு, கேட்டவற்றின் பொருளை ஆராய்ந்து, தெளிந்தபொருளை மனத்தில் இருத்தி முதிர்ச்சி பெற்றுப் பக்குவமடைந்தால் முற்றறிவு அவனுக்குத் தோன்றும், அத்தகையவன் வீடுபேறு பெற்றவன் அல்லது முத்தன் எனப்படுகிறான். இந்நிலை உடலுடன் கூடி இருக்கும்பொழுதோ உடலை நீக்கிய பின்னரோ ஏற்படலாம். வீடுபேறு என்பது உபநிடதங்களின்படி சீவன் தன்னைப் பிரமம் என்று உணர்வதாகும். உபநிடதங்கள் முழுதும் கூறும் உண்மையைச் சில வாக்கியங்களே தெளிவுபடுத்துகின்றன. அவை ‘அது நீயாக இருக்கின்றாய்’, ‘நானே பிரமமாக உள்ளேன்’, ‘சீவனும் பிரமமும் ஒன்று’. இவை உயர்ந்த வாக்கியங்கள் எனப்படுகின்றன. மேலும், இவ்வாக்கியங்களில் சீவனும் பிரமமும் ஒன்று என்றும், இரண்டும் வெவ்வேறானவை என்றும், ஒன்றும் வெவ்வேறும் ஆனவை என்றும் பொருள் சுட்டும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றுள் சீவனும் பிரமமும் ஒன்று என்ற வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்கரர் அத்துவிதக் கோட்பாட்டினையும், ஒன்றும் வெவ்வேறும் ஆனவை என்பதன் அடிப்படையில் இராமாநுசர் விசிட்டாத்துவிதக் கோட்பாட்டினையும், வெவ்வேறானவை என்பதன் அடிப்படையில் மத்துவர் துவைதக் கோட்பாட்டினையும் நிறுவினர். இக்கோட்பாடுகள் வேதாந்தங்கள் என்று பெயர் கொண்டு விளங்குகின்றன. பி.ஆர்.ந.