இந்தியத்துணைக் கண்டத்தின் தேசிய மரபு சான்ற கதையாகக் காலத்தை வென்று திகழும் இதிகாசமாகும். இது மக்களால் பன்னெடுங் காலம் தலைமுறை தலைமுறையாகக் கேட்கப்பட்டு வருகிறது. இக்கதை ஆசியாக்கண்டம் முழுவதும் பரவி, மொழி, பண்பாடு, நிலவியல் அடிப்படையில் வேறுபட்டுள்ள அவர்களை உணர்வு அடிப்படையில் ஒன்றுபடுத்தியுள்ள பெருமைக்குரியது. அத்துடன் காலம், மொழி, இலக்கியம், சமயம், வயது, பொருளியல், கல்வி முதலிய உலகப் பொதுமைக் கூறுகளிலும் (Universal features) சிறந்து விளங்குகிறது. இராமாயணக் கதை இலக்கியம், சமயம், தத்துவம், நாட்டுப்புறம் என்ற நான்கு நிலைகளில் வளர்ச்சி பெற்ற போக்குடையது. மக்களிடையே வழங்கி வந்த இராமன் கதைக்கு முதன்மை கொடுத்து, இலக்கியப்படுத்திப் பெரும் இதிகாசமாக உருவாக்கித் தந்தவர் வான்மீகி. முதலில் வடமொழியில் தோன்றிய இராமாயணம் காலப் போக்கில் பதினான்கு இந்திய மொழிகளிலும் காப்பிய வடிவமேற்று மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒரே இராம கதையைப் பேசினாலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தனிச்சிறப்புகளை உடையன. அதேசமயத்தில் வெல்வேறு காலத்தில் வெவ்வேறான பண்பாட்டுச் சூழலில் மாறுபட்ட சமயங்களைச் சார்ந்து தோன்றிய இவ்விராமாயணங்களிடையே சமுதாய, சமய, பாரம்பரிய வளர்ச்சி நிலையையும் காணமுடியும். வேதகால இராமாயணம் முதன்முதலாக இராமாயணக் கதைக்குறிப்பு இருக்குவேதத்தில் காணப்படுகிறது. இந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் நடந்த போரினை விவரிக்கும் போது சீதை உழவர்களின் தேவதையாகக் குறிப்பிடப்பட்டுள்ளான். இராமாயணக் கதை மாந்தர்களான இராமன், வசிட்டர், விசுவாமித்திரர், இட்சுவாகு, யயாதி, பரதன் ஆகியோர் பெயர்களும் இவ்வேதத்தில் சுட்டப்பட்டுள்ளன. ஆனால், இராமாயணக் கதை முழுமையாக அவ்வேதத்தில் காணப்படவில்லை. சாதகக் கதைகளில் இராமாயணம் புத்த மதத்தைப் பரப்பும் நோக்கில் பிராகிருத மொழியில் எழுந்த சாதகக் கதைகளிலும் இராமன் கதை காணப்படுகிறது. இந்தச் சாதகக் கதைகளின் காலம் கி.மு. 5–ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று டாக்டர் வேபர் கருதுகிறார். அதாவது, வால்மீகியின் காலத்திற்கு முந்தியனவாகச் சாதகக் கதைகள் கணிக்கப்பட்டுள்ளன. ‘தசரத சாதகம்’ என்ற நூலே வால்மீகி ராமாயணத்திற்கு வித்தாக இருக்கவேண்டும் என்றும் டாக்டர் வேபர் கருதுகிறார். டாக்டர் தினேசு சந்திர சென் என்னும் ஆராய்ச்சி அறிஞரும் இதை ஒப்புக் கொள்கிறார். சாம சாதகம், வெசந்திர சாதகம், சம்புல சாதகம், இலங்காவதார சாதகம், தசரத சாதகம், அனமாக சாதகம், தசரதா கதனம் என்ற சாதகக் கதைகளில் இராமன் கதை கூறப்பட்டாலும் பின் மூன்று சாதகங்கள் இராமாயணத்துடன் மிகுந்த தொடர்புடையனவாகத் திகழ்கின்றன. தசரத சாதகம் ‘பனாரசு’ என்ற நகரை ஆட்சி செய்த தசரதன் என்ற மன்னனுக்கு இராம பண்டிதன், இலக்கனா குமாரன் என்னும் இரு ஆண்களும், சீதாதேவி என்னும் ஒரு பெண்ணும் தோன்றினர். தசரதன் பட்டத்தரசி இறந்தவுடன் இன்னொரு பெண்ணை மணக்கிறான். அவளுடைய மகன் பரதன். அவள் வேண்டுகோளின்படி பரதனுக்கு ஆட்சியும், இராமபண்டிதனுக்குப் பன்னிரண்டு ஆண்டு காடுறைவாழ்வும் கிடைத்தன. இராமபண்டிதனுடன் இலக்கனா, சீதா இருவரும் காட்டிற்குச் சென்றனர். இராமனை அழைத்துவரச் சென்ற பரதன் இராமபாதுகையுடன் திரும்பும்போது இலக்கனாவையும் சீதாதேவியையும் உடன் அழைத்து வந்தான். இராம பண்டிதன் காட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் சீதாவை மணந்துகொள்கிறான். இவ்வாறு கதை அமைந்துள்ள இத்தசரத சாதகத்தில் இராவணன் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. அனமாக சாதகம் இந்தச் சாதகத்தில் கதை மாந்தர்களின் பெயர் சுட்டப்படவில்லை. நாட்டை இழந்த அரசன் ஒருவன் காட்டில் வசித்தான் அப்பொழுது அவன் மனைவியை இழந்தான். குரங்குகளின் உதவியால் மனைவியைத் திரும்ப அடைந்து தன் நாட்டையும் பெற்றான். பின்னர் மக்கள் அவன் மனைவியின் கற்பில் ஐயங்கொள்ள, அவள் தன் கற்பை நிலைநாட்ட, பூமியை நோக்கித் தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்ட, பூமியும் அவளை அழைத்துக் கொண்டது. தசரதா கதனம் இதில் தசரதனுக்கு நான்கு மனைவியர்; நால்வருக்கும் முறையே இராமன், இராமனா, பரதன், சத்ருக்கனன் என்ற மக்கள் பிறந்தனர். மூன்றாம் மனைவிமேல் தசரதன் மிகுந்த ஆசை கொண்டிருந்தான். அவள் தன் மகன் பரதனுக்கு அரசைக் கேட்டாள். தசரதனும் அதை மறுக்கவில்லை. இராமனும் இராமனாவும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசிப்பதற்காகச் சென்றார்கள். தன் மாமன் வீட்டிற்குச் சென்று திரும்பிய பரதன், தசரதன் மரணத்தை அறிந்தான். இராமன் காட்டிற்குச் சென்ற விவரம் அறிந்து தன் தாயை ஏசிய பரதன், காட்டிற்குச் சென்று இராமனை உடன்வருமாறு அழைத்தான். இராமன் மறுக்க, அவன் தோல் செருப்பை எடுத்து வந்து ஆட்சி செய்தான். இராமன் 12 ஆண்டுகள் கழித்து வந்து திரும்பவும் ஆட்சியை மேற்கொண்டான். இந்தச் சாதகக் கதையில் சீதை பற்றிய குறிப்பே இல்லை. சமண இராமாயணம் சமணர்கள் பிராகிருத மொழியில் இயற்றிய இராமாயண நூல்கள் புத்த சாதகக் கதைகள்போல் பழைமையுடையன அல்ல. விமலசூரி என்பவர் ‘பவும சரித’த்தையும் (பத்ம சரிதம் என்று வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது), குணபத்திரர் என்பவர் ‘உத்தர புராணத்தை’யும் இயற்றியுள்ளனர். இவ்விரு இராமாயணங்களிலும் இராமன், இலக்குவன், இராவணன் ஆகியோர் சமண மதத்தைச் சார்ந்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். பவும சரிதம் கி.பி. 3–ஆம் அல்லது 4–ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இந்நூலில் இராவணன் ஒரு தலை உடையவனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இராவணன் அணிந்திருந்த வைரமாலை அவனைப் பத்துத்தலை உடையவனாகக் காட்டியதால், அதைக் கண்ட இராவணன் தந்தை அவனுக்குத் ‘தசக்கிரீவன்’ என்ற பெயரைச் சூட்டினான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்நூலில் அனுமன் இராவணனின் நண்பனாகச் சுட்டப்பட்டுள்ளான். உத்தர புராணம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டினதாகக் கூறப்படுகிறது. இதில் சீதை இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த மகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். சீதை பிறப்பைக் கணித்த வானசாத்திர வல்லுநர்கள் அவளால் தீங்கு வரும் என்று கூற, அதைக் கேட்ட இராவணன் மாரீசனிடம் குழந்தையை ஒப்புவித்து நாட்டை விட்டு வெகுதூரத்தில் கொண்டு விட்டு வரச்சொல்ல, அவன் மிதிலையில் ஒரு சாக்கடையில் விட, சனகன் அவளைக் கண்டு எடுத்து வளர்த்தான் என்று கூறப்படுகிறது. இந்நூலில் இலக்குவன் கடுமையான காய்ச்சலினால் இறந்ததாகவும், அவன் நரகத்தைச் சென்றடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சமணர்கள் வடமொழியிலும் இராமாயணக் காப்பியங்கள் செய்துள்ளனர். அவர்களுள் கி.பி. 7–ஆம் நூற்றாண்டில் இரவிசேனன் ‘மகாராமாயண’த்தையும், கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் ஏமசந்திரன் ‘திரிசட்டி சுலோகா புருட சரித’த்தையும், கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தேவ விசயர் ‘இராம சரித’த்தையும் எழுதியுள்ளனர். பௌத்த, சமண சமயங்களும் இந்து சமயமும் இராமாயணத்தைத் தங்கள் சமயம் பரப்பும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டன. சீதை இந்து சமயப்படி சனகரின் வளர்ப்புமகளும், சமண சமயப்படி இராவணன் மகளும், பௌத்த சமயப்படி தசரதன் மகளும் ஆவாள். சமயங்கள் தங்களுக்கென்று சில மரபுகளை ஏற்படுத்திக் கொண்டு, அம்மரபுப்படி இராமயணக் கதையை உருமாற்றிப் பயன்படுத்திக் கொண்டன. வடமொழியில் இராமாயணம் வால்மீகிராமாயணம் இராமன் கதை மக்களிடையே பரவக் காரணமாக இருந்தவர் வால்மீகி. முதலில் இராமன் கதைக்கு இலக்கிய வடிவம் தந்த இவரை ‘ஆதிகவி’ என்றும், இவர் இயற்றிய இராமாயணத்தை ‘ஆதிகாவியம்’ என்றும் போற்றுகின்றனர். ஆசியாக்கண்டம் முழுவதுமாகப் பரவியுள்ள இராமன் கதைக்கு வால்மீகிராமாயணமே அடிப்படையாகும். பிற்காலத்தில் வடமொழியில் பல காவிய, புராணங்களில் இராமன் கதை பேசப்பட்டாலும், இன்றளவும் எல்லா மொழியினரும் அறிந்து போற்றுவது வால்மீகிராமாயணமாகும். வால்மீகிராமாயணம் ஏழு காண்டங்களையும், 500 சருக்கங்களையும், 24,000 சுலோகங்களையும் கொண்டுள்ளது என்று வால்மீகியே பாலகாண்டம் நான்காம் சருக்கத்திலும், உத்தரகாண்டம் தொண்ணூற்று நான்காம் சருக்கத்திலும் கூறியுள்ளார். ஆனால், இன்று கிடைக்கும் மூன்று பதிப்புகளுள் தென்னிந்தியப் பதிப்பில் 643 சருக்கங்களும், கௌடியா பதிப்பில் 673 சருக்கங்களும், வடமேற்குப் பதிப்பில் 666 சருக்கங்களும் காணப்படுகின்றன. இவ்விராமாயணத்தை இராம சரிதம், சீதையின் சரிதம், பௌலங்தய வதம் (இராவணன் வதம்) என்னும் பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். பொதுவாக, ஆய்வாளர்கள் வால்மீகிராமாயணம் கி.மு. 3–ஆம் நூற்றாண்டினதாக இருக்கும் என்று கருதுகின்றனர். வால்மீகி படைத்த இராமன் இட்சுவாகு குலத்தில் பிறந்த ஒரு வீறுசான்ற மனிதனே. வால்மீகிக்குப் பின்வந்தவர்களே அவனைத் திருமாலின் அவதாரமாக்கினர். வால்மீகிராமாயணத்தை வேதத்திற்குச் சமமானது என்னும் பொருளில் ‘வேதசமா’ எனக் குறிப்பிடுகின்றனர். வால்மீகி தம் இதிகாசத்தைத் ‘த’ என்று தொடங்கும் காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தை வைத்து வரிசைப்படுத்தி ஓர் எழுத்துக்கு ஆயிரம் சுலோகங்களாக இருபத்துநான்கு எழுத்துகளுக்கு இருபத்துநாலாயிரம் சுலோகங்களை அமைத்துப் பாடியுள்ளார். மகாபாரதத்தில் இராமாயணம் வியாசரின் மகாபாரதத்தில் மூன்றாம் பிரிவான வன பருவத்தில் திரௌபதியை இழந்ததனால் வருந்திக் கொண்டிருக்கும் உதிட்டிரருக்கு மார்க்கண்டேய முனி கூறுவதாக ‘இராமோபாக்கியானம்’ (இராமன் பற்றிய கிளைக் கதை) அமைந்துள்ளது. இக்கதையில் இராமன் திருமாலின் அவதாரம் என்றும், சீதை சனகரின் சொந்த மகள் என்றும் கூறப்பட்டுள்ளது. சீதை தன் கற்பை மெய்ப்பிக்கத் தீயில் புகுந்தமைபற்றி இக்கிளைக் கதையில் கூறப்படவில்லை. வால்மீகிராமாயண உத்தரகாண்ட நிகழ்ச்சிகளும் இதில் சுட்டப்படவில்லை. டாக்டர் சக்தன்கர் என்பவர் இக்கிளைக்கதை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்கிறார். ஆனால், டாக்டர் ஆப்கின்சு, டாக்டர் ஏ. இலட்விக்கு என்ற அறிஞர்கள் இக்கதை வால்மீகிராமாயணத்திலிருந்து தோன்றியிருக்க வாய்ப்பில்லை; இது தனிப்பட்ட முறையில் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர். டாக்டர் சாக்கோபி முதலிய பிற அறிஞர்கள் இக்கருத்தை ஒப்புக் கொண்டு, வால்மீகிக்கு முற்பட்ட இராமாயணக் கதை இதற்கு அடிப்படையாக இருக்கும் என்னும் கருத்தைத் தெரிவித்துள்ளனர். வடமொழியில் வால்மீகிராமாயணம் தோன்றிய பின்னர்க் காவியம், புராணம், நாடகம் என்ற மூன்று வகையான இலக்கியங்களில் இராமன் கதை வளர்ச்சி பெறத் தொடங்கியது. இவை அனைத்திற்கும் வால்மீகிராமாயணம் அடிப்படையாக இருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டும் அமைந்துள்ளன. காவிய இராமாயணங்கள் இரகுவம்சம் காளிதாசரால் இயற்றப்பட்டது. இதன் 9 முதல் 16 வரையிலுள்ள சருக்கங்கள் இராமன் கதையைப் பேசுகின்றன. வால்மீகி கதையை விரிந்த விடத்து இவர் குறுக்கியும், அவர் குறுக்கிய விடத்து இவர் விரித்தும், கருத்து வேறுபாடு வராமல் இருக்கச் சிலவிடங்களைத் தவிர்த்தும் கதை சொல்லப்பட்டுள்ளது. பட்டி காவியம் இதற்கு ‘இராவண வதம்’ என்ற பெயரும் உண்டு. பட்டி என்பவரால் எழுதப்பட்டது. இக்காப்பியத்தில் இராமன் கதை பிறப்பிலிருந்து அசுவமேதயாகம் வரை கூறப்பட்டுள்ளது. 22 சருக்கங்களும் 1625 சுலோகங்களும் உள்ளன. வடமொழியில் மிகச் சிறந்த மகாகாவியமாகப் போற்றப்படுகிறது. சானகி அரனா குமாரதாசரால் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆறு காண்டங்களை உடையது. வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நூல். ஆனால், சிற்சில இடங்களில் வால்மீகியிடமிருந்தும் வேறுபட்டுள்ளது. வால்மீகி அகலிகை சாம்பலானாள் என்று கூற, குமாரதாசர் கல்லானாள் என்று கூறியுள்ளது ஒரு சான்றாகும். இராமசரிதம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் அபிநந்தனால் எழுதப்பட்டது. வாலிவதத்திற்குப் பின்பு கார்காலம் வந்தது எனத் தொடங்கி இராவணவதம் முடிய இந்நூலில் கூறப்பட்டுள்ளது, இந்நூல் 40 சருக்கங்களை உடையது. இராமாயண மஞ்சரி இது சேமேந்திரன் என்பவரால் புராணநடையில் எழுதப்பட்டது; 6,000 சுலோகங்களைக் கொண்டுள்ளது. தசாவதார சரிதம் காசுமீரில் கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செமேந்திரா என்பவரால் எழுதப்பட்டது. மிகச் சுருக்கமாக 294 பத்திகளில் இராமன் கதையை இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் இராவணன் செய்த கடுந்தவத்தையும், அதன் வாயிலாக அவன் பெற்ற வரங்களையும் கூறித் தொடங்குகிறது. சீதை இலக்குமியின் அவதாரம் என்றும், தாமரையில் பிறந்தவள் என்றும் சித்திரிக்கப்படுகிறாள். இராவணன் அவளைத் தன் வளர்ப்பு மகளாக்கிக் கொண்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராமாயண பாரதம் கவிராசனால் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இராமனின் பிறப்பு முதல் முடிசூட்டுதல் வரையிலான கதை இடம்பெற்றுள்ளது. இராமாயணக் கதை தொடர்ந்து அமையுமாறும், ஒவ்வொரு சுலோகத்திலும் பாரதக் கதை தோன்றுமாறும் இந்நூல் யாக்கப்பட்டுள்ளது. இரகுவீர சரிதம் மல்லிநாதரால் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது 17 சருக்கங்களுடையது. இக்காப்பியத்தில் இராமன் காட்டில் முனிவர்களைக் காண்பது முதல் முடிசூடல் வரையிலான கதை இடம் பெற்றுள்ளது. பாலகாண்டக் கதை காட்டில் வாழும் முனிவர்களால் மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டது. அனுமன் உரை மூலமாக இராம, இலக்குவரின் அங்க வருணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. உத்தரராகவ சகலியமாலா என்பவரால் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இந்நூலில் திருமாலின் அவதாரமாக இராமனும், ஆதிசேடன் அமிசமாக இலக்குவனும், சக்கரத்தின் அமிசமாகப் பரதனும், சங்கின் அமிசமாகச் சத்துருக்கனும் பிறந்தனர் என்பது கூறப்பட்டுள்ளது. தமிழில் கம்பரும் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இராமலிங்கமிர்தா அத்துவைதா என்னும் புலவரால் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 18 சருக்கங்களைக் கொண்ட இந்நூலில் இராமனின் இளமைக்கால நிகழ்ச்சிகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இராமன் தன் இறை உருவைக் கோசலைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இராவணனிடம் நாரதர் சீதையின் அழகை எடுத்துரைத்ததாக இந்நூல் கூறுகிறது. தத்துவ சங்கிரகராமாயணம் இது இராம பிரக்மானந்த சரசுவதி என்பவரால் எழுதப்பட்டது. இராமன் கதையைத் தத்துவ நோக்கோடு சமய உண்மைகளும் விளங்குமாறு எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. இதற்குத் தத்துவ சட்டிக ராமாயணம்’ என்ற பெயரும் உண்டு. இராமாயண சம்பூ போசன் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் சம்பூ காவிய வகையைச் சார்ந்தது. இந்நூல் ‘போச சம்பூ’ என்றும் ‘சம்பூரண ராமாயணம்’ என்றும் வழங்கப்படும். காலம் கி.பி. 10–ஆம் நூற்றாண்டு. நாடக இராமாயணங்கள் வடமொழி நாடகங்கள் பல இராமன் கதையைத் தழுவி எழுந்துள்ளன. பவபூதியின் ‘உத்தரராமசரிதம்’, ‘மகாவீர சரிதம்’, திங்நாகனின் ‘குந்தமாலா’, முராரியின் ‘அநர்க்கராகவம்’, சக்திபத்திரரின் ‘ஆச்சரிய சூடாமணி’, இராச சேகரரின் ‘பாலராமாயணம்’ பாசனின் ‘பிரதிமா நாடகம்’, ‘அபிசேசு நாடகம்’, பீடனின் ‘தூதாங்கதம்’ அல்லது ‘சாயா நாடகம்’, அநுமானின் ‘மகா நாடகம்’ அல்லது ‘அநுமந்நாடகம்’, சயதேவரின் ‘பிரசந்தராகவம்’, இராமபத்திர தீட்சிதரின் ‘சானகி பரிணயம்’ முதலிய நாடகங்கள் இராமன் கதையைப் பின்பற்றி எழுந்தவையாகும். பவபூதியின் மகாவீர சரிதத்தில் சூர்ப்பணகை மந்தரையின் உடலில் புகுந்து, இராமனைச் சீதையுடனும் இலக்குவனுடனும் காட்டிற்கு அனுப்பும்படி சொல்லுகிறாள். மேலும், இந்நாடகத்தில் இராவணன் வேண்டுகோளின்படி வாலி தானாகவே இராமனிடம் போரிட்டு இறக்கிறான். ‘ஆச்சர்ய சூடாமணி’ நாடகத்தில் இராவணன் சீதையைத் தூக்கிப் போகும்போது அவன் இராமன் வடிவத்தில் வந்தான் என்பது கூறப்படுகிறது. சீதை தான் நலமாக மகப்பெற்றால் ஒவ்வொரு நாளும் குந்தமாலாவால் தங்கையை வழிபடுவதாக வேண்டிக்கொண்டாள் எனக் ‘குந்தமாலா’ நாடகம் கூறுகிறது. ‘பிரதிமா’ நாடகத்தில் கைகேயி தசரதனுக்கு முனிவர் இட்ட சாபத்தைப் போக்குவதற்காக இராமனைப் பதினான்கு நாட்கள் காட்டிற்குச் செல் எனக் கூற. அது வாய் தவறிப் பதினான்கு ஆண்டுகளாக வந்துவிட்டது என்பது கூறப்படுகிறது. ‘சானகி பரிணயத்தில்’ சீதையைத் தூக்கிப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் விராதன் இராமவேடத்துடனும், இராமனைத் தூக்கிப் போகவேண்டும் என்று சூர்ப்பணகை சீதை வேடத்துடனும் வந்து, ஒருவரை ஒருவர் அறியாது இருவரும் பூக்கொய்யத் தொடங்கியபோது, சூர்ப்பணகை விராதன் கழுத்தில் ஏறிப் பூக்கொய்யத் தொடங்குகிறாள். இதை உண்மையான இராமனும் சீதையும் மலைமேல் நின்று பார்த்துப் பேசி மகிழ்கின்றனர். இவ்வாறு இந்நாடகங்கள் சில சுவையான மாறுபட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகத் திகழ்கின்றன. புராண இராமாயணங்கள் வடமொழியில் தோன்றிய 18 மகாபுராணங்களிலும், 20 சிறுபுராணங்களிலும் இராமாயணக்கதை இடம்பெற்றுள்ளது. பதுமபுராணம், சிவபுராணம், சிவ மகா புராணம், சீமத் தேவி பாகவதம், நாரத புராணம், அக்கினி புராணம், கந்தபுராணம், கூர்ம புராணம், கருட புராணம், பிரமானந்த புராணம், பாகவதம் போன்ற நூல்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கன. இப்புராணங்களில் கூறப்படும் இராமகதைகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றன. இம்மாறுபாட்டிற்குச் சமயத்தையும், வேறுபட்ட பண்பாட்டுச் சூழலையும் காரணமாகக் கூறமுடியும். பதுமபுராணத்தில் இராமன் அனுமனைக் கைலாய மலைக்கு அனுப்பி, கல் கொணர்வித்து சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டதாகவும்; சிவமகா புராணத்தில் சக்தி இராமனை ஆராய்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளன. பிரமானந்த புராணம் என்பது தான் அதியாத்ம ராமாயணம் என்று வழங்கப்படுகிறது. இதில் சிவன் பார்வதி உரையாடல் வாயிலாகக் கதை கூறப்படுகிறது. அற்புத ராமாயணம், சங்கிரக ராமாயணம், மந்திரராமாயணம், வசிட்டராமாயணம் போன்றனவும் புராண வகையைச் சாந்தனவே. இவற்றுள் ஆனந்தராமாயணம் ஒரு மாறுபட்ட குறிப்பு ஒன்றைத் தருகிறது. கோசலை தசரதனைத் திருமணம் செய்த காலத்து, இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு சென்றதாகவும் இராவணன் சீதை சுயம்வரத்திற்கு மிதிலை வந்ததாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புராணங்களிலும் பல கதை மாறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழில் இராமாயணம் தமிழில் தோன்றிய இராமாயணங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது கம்பராமாயணம். கம்பராமாயணத்திற்கு முன்பு இராமாயண நூல்கள் இருந்து அழிந்ததைப் பல்வேறு இலக்கணநூல் உரைகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இப்பகுதியைக் கம்பனுக்குமுன் இராமாயணம், கம்பராமாயணம், கம்பனுக்குப் பின் இராமாயணம் என்ற நிலையில் பிரித்துக் காணலாம். கம்பனுக்கு முன் இராமாயணம் திருவள்ளுவமாலைச் சிறப்புப் பாயிரம் பாடிய பெருந்தேவனார், தமிழில் பாரதமும் இராமாயணமும் இருந்தமையைச் சுட்டுகிறார். யாப்பருங்கல விருத்தி உரையால் பஃறொடை வெண்பா யாப்பில் இராமாயணம் ஒன்று இருந்ததை அறியமுடிகிறது. வீரசோழிய உரை வெண்பா யாப்பில் அமைந்த இராமாயணத்தையும், புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள ஆசிரியமாலை தொகை நூல் ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயணத்தையும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியப் புறத்திணை இயல் நூற்பாக்களுக்கு நச்சினார்க்கினியர் உரை கூறும்போது, ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயண நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். சீபுராணம் என்னும் நூல் இராமசரித்திரம் விருத்தப்பாவிலும், ஆசிரியப்பாவிலும் இருந்தமையினைக் கூறுகிறது. தமிழில் சமண இராமாயணம் ஒன்று இருந்து அழிந்த குறிப்பும் அதில் சுட்டப்பட்டுள்ளது. இவையேயன்றிச் சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இராமாயண நிகழ்ச்சிகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இராமன் குரங்கினத் தலைவர்களோடு கூடியிருந்து சூழ்ந்தபோது அவர்கள் அமர்ந்த மரத்தின்மீது இடத்திலிருந்த பறவையினங்கள் பேரொலி செய்தன; அப்பொழுது இராமன்தன் கடவுள் தன்மையால் அவற்றின் ஒலியை அடக்கினான் என்று அகநானூற்றுப் பாடலொன்று (70) கூறுகிறது. புறநானூற்றுப்பாடல் ஒன்றில் (378) அரக்கன் கவர்ந்து செல்லும் போது சீதையினால் நழுவவிடப்பட்ட அணிகலன்களைக் குரங்குகள் மாறி மாறி அணிந்துகொண்டு மகிழ்ந்தனவென்பது கூறப்பட்டுள்ளது. பரிபாடல் ஒன்று (19:50–52) அகலிகையின் கதை திருப்பரங்குன்றக் கோயிலில் ஓவியமாக வரையப்பட்டிருந்த செய்தியினைக் கூறுகிறது. கலித்தொகையில் (38) இராவணன் இமயமலை எடுத்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இராமன் அயோத்தியைவிட்டுப் பிரிந்துசென்றது போலக் கோவலன் புகாரை விட்டுச் சென்றான் என்று சிலப்பதிகாரம் (14:46–49) இராமன் கதையை உவமையின் மூலம் எடுத்துரைக்கிறது. இராமன் இராவணனை வெல்லும் பொருட்டுக் கடலை அடைக்க நினைத்தபோது, குரங்குகள் பெருமலைகளை எல்லாம் பெயர்த்து வந்து கடலுள் இட்டன என மணிமேகலை (17:9–12) சுட்டுகிறது. சிலம்பும் மேகலையும் இராமனை முறையே ‘வேத முதல்வோன்’ என்றும் ‘நெடியோன்’ என்றும் குறிப்பிட்டுத் திருமாலின் அவதாரமாகக் காட்டுகின்றன. தேவாரப் பாடல்களிலும் இராமாயணக் குறிப்பு உண்டு. திருஞானசம்பந்தர் தம் பதிகங்களின் எட்டாம் பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்பைத் தந்துள்ளார். திருநாவுக்கரசர் பெரும்பாலான பதிகங்களின் இறுதிச் செய்யுளில் இராவணன் பற்றிய குறிப்பினைத் தந்துள்ளார். மேலும், அவர் திரு இராமேசுவரப் பதிகத்தில் இராமன் சிவனை வழிபட்ட செய்தியைக் கூறியுள்ளார். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் இராமனின் அவதார மகிமையை விளக்கியுள்ளனர். இவர்களுள் பெரியாழ்வார் காகாகரன் கதையையும் (வேலிக்கோல். பா.7) தொண்டாடிப் பொடியாழ்வார் அணில் இராமனுக்கு உதவிய சிறப்பையும் (திருமாலை.27) எடுத்துக்காட்டியுள்ளனர். கம்பராமாயணம் சோழர் காலத்துப் புலவரான கம்பர் தம் இராமாயணத்தை ஆறு காண்டங்களில், 116 படலங்களில், 10436 பாடல்களில் இயற்றியுள்ளார். இராமனைத் திருமாலின் அவதாரமாகப் படைத்த இவர், தம் காப்பியத்திற்கு ‘இராமாவதாரம்’ என்ற பெயரையே நல்கினார். நாடகச்சுவை நோக்கிக் ‘கம்ப நாடகம்’ என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது. இன்றைய நிலையில் கம்பராமாயணம் எண்ணற்ற பாட பேதங்களையும், இடைச்செருகல்களையும் தாங்கி நிற்கிறது. கம்பர் தம் காப்பியத்திற்கு வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டாலும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்பக் கதையில் மாற்றங்களைச் செய்துள்ளார். பாலகாண்டத்தில் மிதிலைக் காட்சிப் படலம், சந்திரசயிலப் படலம், வரைகாட்சிப் படலம், பூக்கொய் படலம் ஆகியனவும், யுத்த காண்டத்தில் இரணிய வதைப் படலம், மாயா சனகப் படலம் ஆகியனவும் கம்பரின் தனிப்படைப்புகளாகும். கம்பனுக்குப் பின் இராமாயணம் கம்பனுக்குப் பின்னும் சிலர் இராமன் கதையைத் தமிழில் வேறுபட்ட இலக்கிய வடிவங்களில் கூறியுள்ளனர். கம்பன் காலத்தவரான ஒட்டக்கூத்தர் ‘உத்தரகாண்டம்’ என்ற நூலை இயற்றியுள்ளார். கம்பருக்குப் பிற்காலத்தவரான அருணாசலக்கவி கீர்த்தனை வடிவில் இராமன் கதையைத் தந்துள்ளார். இது ‘இராம நாடகக் கீர்த்தனை’ என்று வழங்கப்படுகிறது. இராமலிங்க அடிகள் திருவருட்பாவில் ‘சீராம நாம பதிகம்’ பாடியுள்ளார். கோட்டையூர்ச் சுப்பிரமணிய அய்யர் ‘இராமாயண வெண்பா’ என்ற நூலை இயற்றியுள்ளார். இது ஆறு காண்டங்களையும், 9,379 வெண்பாக்களையும் கொண்டுள்ளது. மதுரகவி சீநிவாச ஐயங்காரும் ஒரு ‘இராமாயண வெண்பா’ பாடியுள்ளார். சு. குமாரசாமிப் புலவர் ‘இரமோதந்தம்’ (Ramodantam) என்ற நூலையும், இராமசாமி அய்யர் ‘இராமசாமியம்’ என்ற நூலையும், அரங்கசாமி ரெட்டியார் ‘இராமாயணத் திருப்புகழ்’ என்ற நூலையும், வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் ‘அகலிகை வெண்பா’ என்ற நூலையும். கனகராசு அய்யர் ‘இலங்கைப் பரணி’ என்ற நூலையும், வேம்பு அம்மாள் ‘இராமாயணக் கீர்த்தனை’ என்ற நூலையும், முத்துசாமிக்கவிராயர் ‘இராமாயணம்’ என்ற நூலையும் தி. வேங்கடகிருட்டிணையங்கார் ‘இராகவ காவியம்’ என்ற நூலையும் இராமாயணத்தை ஒட்டிப் படைத்துள்ளனர். இவை தவிர, சங்கிரக ராமாயணம், சிரீராமாவதாராதி கால நிர்ணயம் என்னும் நூல்களின் கையெழுத்துப் படிகளும் கிடைக்கின்றன. இன்றைய கவிதை, நாவல், சிறுகதை, நாடகங்களும் இராமாயண நிகழ்ச்சிகளை அடியொற்றி எழுந்துள்ளன. நாட்டுப்புற வழக்கமாக மயில்ராவணன் கதை, தசகண்டராவணன் கதை, சிரீராமர் அசுவமேத யாகம், வாலி மோட்சம் ஆகிய கதைகளும் வழங்கி வருகின்றன. தெலுங்கு இராமாயணம் தெலுங்கு மொழியில் அரங்கநாதராமாயணம், பாசுகராராமாயணம் எர்ரன (Errana) ராமாயணம், அன்னமாசாரி ராமாயணம், கட்டவரதராசு ராமாயணம். மொல்லா ராமாயணம், கோபிநாதராமாயணம் எனப் பல இராமாயணங்கள் தோன்றியுள்ளன. அரங்கநாத ராமாயணம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது அரங்கநாதரால் எழுதப்பட்டது என்றும், கோனாபுத்தரெட்டி என்பவரால் எழுதப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. இந்நூல் ‘திவிபதா’ யாப்பில் 34,580 அடிகளில் அமைந்துள்ளது. அதனால், இது ‘திவிபதாராமாயணம்’ என்றும் குறிக்கப் பெற்றது. இவ்விராமாயணத்தில் இலக்குவன் கடவுளிடம் இரண்டு வரம் வேண்டிப் பெற்றான் எனக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று, தன் மனைவி ஊர்மிளை 14 ஆண்டுகள் உறங்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது. மற்றொன்று, தான் 14 ஆண்டுகளும் விழித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதாகும். இச்செய்தி பிற இராமாயணங்களில் காணப்படவில்லை. பாசுகராராமாயணம் என்பதே காவியமாக எழுதப்பட்ட முதல் தெலுங்கு இராமாயணம். இது ஆறு காண்டங்களில் 6,081 பாடல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இடையிடையே உரைநடை கலந்து வருகிறது. இக்காப்பியம் ‘பாசுகரா’ என்பவர் உட்பட்ட நால்வரால் எழுதப்பட்டது. எர்ரன ராமாயணம் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது வால்மீகிராமாயணத்தை அடியொற்றியதாகும். இப்போது இந்நூல் கிடைக்கவில்லை. அன்னமாசாரி என்பவரால் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது அன்னமாசாரிராமாயணம் இதற்கு ‘இராமகதா’ என்னும் பெயரும் உண்டு. இந்நூலும் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், இதன் ஏட்டுச்சுவடி ஒன்று தஞ்சைச் சரசுவதி மகால் நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது. கட்டவரதராசு ராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்நூலும் திவிபதா யாப்பில் எழுதப்பட்ட மிகப் பெரிய நூல். அண்மையில் பதிப்பித்து வெளியிடப்பட்டது. இவை தவிர, பீமகவி ‘இராகவ பாண்டவீயம்’, ‘சதகண்டராமாயணம்’ என்ற நூல்களையும், சூரணர் ‘இராகவ பாண்டவீயம்’ என்ற நூலையும் இயற்றியுள்ளனர். கன்னட இராமாயணம் கன்னட மொழியில் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் பொன்னன் என்ற கவிஞர் ‘புவனனக இராமாப்புதயம்’ (இராமகதை) என்ற நூலை எழுதினார். இன்று இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. நாகசந்திரன் என்பவர் கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் இறுதியில் ‘இராமசரித புராணம்’ என்ற பம்பராமாயணத்தை எழுதியுள்ளார். இது சமண ராமாயணமான விமலசூரியின் பவுமசரிதத்தை அடியொற்றியதாக அமைந்துள்ளது. இந்நூல், கிட்கிந்தையில் வாழ்ந்தோர் மக்கள்; குரங்குகள் அல்லர்; குரங்குக் கொடியுடைய நன்மக்கள் என்றும், இராவணன் அரக்கன் அல்லன்; வானவூர்தியில் செல்லும் திறனுடைய, கொலை வேள்வியை எதிர்த்த நல்லரசன் என்றும் கூறுகிறது. குமார வால்மீகி ‘தொரவெராமாயணம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இதன் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டு. வால்மீகிராமாயணம் முழுவதையும் மொழிபெயர்த்த முதல் கன்னட காவியம் இதுவே, கன்னட மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ளது இந்நூல். முத்தணன் என்பவர் கி.பி. 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘அற்புதராமாயணம்’, ‘இராம பட்டாபிசேகம்’, ‘இராமாசுவமேதம்’ என்ற காவியங்களை இவற்றியுள்ளார். இவற்றில் அற்புதராமாயணம் உரைநடை நூலாகும். தூய தெளிவான பழங்கன்னடத்தில் எழுதப்பட்டது. இராம பட்டாபிசேகம் செய்யுள் நூலாகும். இந்நூலில் இராமனை எதிர்பார்க்கும் பரதனின் அன்புநிலை, உற்சாகம், ஆவல் போன்ற குணநலன்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன. ‘இராமாசுவமேதம்’ என்ற நூல் சேசராமாயணத்தை முதல் நூலாகக் கொண்டுள்ளது. சாலி இராமசந்திர ஐயர் ‘இராமசரிதம்’ என்ற காவியப் பகுதியை இந்நூற்றாண்டில் இயற்றியுள்ளார். இவை தவிர கனகதாசனின் ‘இராமதான்ய சரிதம்’ என்ற நூலும், நற்கண்டனின் ‘குமாரராமசரிதம்’ என்ற நூலும், ஆனந்த ராமாயணம், அனுமத் விலாசம், உத்தரராமாயணம் என்ற நூல்களும் இம்மொழியில் காணப்படுகின்றன. மலையாள இராமாயணம் தொடக்க கால மலையாள மொழிக் காப்பியமாகக் கிடைப்பதே ‘இராமசரிதம்’ என்பதுதான். இது 164 படலங்களையும், 1,814 பாடல்களையும் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் சீராமன் என்று சிலரும், வேணாட்டு வீர இராமவர்மா என்று சிலரும் கருதுகின்றனர். இதன் காலம் கி.பி. 12–ஆம் நூற்றாண்டு. கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் இராமபணிக்கர் ‘கணசராமாயணம்’ என்ற காவியத்தையும், எழுத்தச்சன் ‘அத்யாத்ம ராமாயணம்’ என்ற காப்பியத்தையும் படைத்துள்ளனர். இதில் பின்னதே புகழ்பெற்றது. இது வடமொழி அத்யாத்ம ராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதில் சீதை அயோத்திக்குத் திரும்பி வரும்போது குரங்குகளின் மனைவிகளைக்கண்டு அயோத்தியில் நடக்கும் தங்கள் வெற்றிவிழாவில் கலந்து கொள்ளும்படி அழைத்தாள் என்பது கூறப்பட்டுள்ளமை சுவையான சித்திரமாகும். இதில் வாலி சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்து கொண்டதாகக் காட்டப்படவில்லை. மாறாக வாலி சுக்கிரீவன் மீது கொண்ட பகையே பெரிதுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. கேரளவர்மராமாயணம் என்ற நூலும் மலையாளத்தில் காணப்படுகிறது. மராத்தி இராமாயணம் மராத்தி மொழியில் புகழ்பெற்ற நூல் ‘பாலவர்த்தராமாயணம்’. இது கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் ஏகனாத்து என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் வால்மீகிராமாயணம், அத்யாத்ம ராமாயணம், ஆனந்தராமாயணம் என்ற மூன்றையும் அடியொற்றி எழுதப்பட்டது. இந்நூற்றாண்டில் வாமன பண்டிதர் ‘சீதா சுயம்வரம்’ என்னும் காப்பியத்தை இயற்றியுள்ளார். ஒரியமொழி இராமாயணம் ஒரிய மொழியில் புகழ்பெற்றது ‘விசித்திர ராமாயணம்’. இது விசுவநாத சூன்தியா என்பவரால் எழுதப்பட்டது. இந்நூலில் சீதை வேதவதியின் மறுபிறப்பாகக் கூறப்பட்டுள்ளாள். வேதவதியை இராவணன் தன் காமஇச்சைக்கு அடிபணியுமாறு வற்புறுத்தினான். அவள் அதை மறுக்க, இராவணன் அவளைக் கொன்று விடுகிறான். நாடு திரும்பியபின் சிறிது காலம் கழித்து, இராவணனைப் பார்க்க வந்த நாரதர் இறந்த வேதவதியின் உடம்பு கேட்பாரற்றுக் கிடக்கிறது என்று கூறுகிறார். இராவணன் அவ்வுடம்பை எடுத்துவந்து மண்டோதரியிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்கின்றான். சமைத்த அக்கறியை உண்ண விருப்பப்படாத இராவணன் அதைக் கடலில் வீசிட, அது சீதையாக உருவெடுக்கிறது. சனகர் அச்சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தார் என இந்நூல் கூறுகிறது. மேலும், இம்மொழியில் கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் சரளதாசர் என்பவர் விலங்கராமாயணமும், கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் பலராமதாசர் ஓர் இராமாயணமும் இயற்றியுள்ளனர். குசராத்தி இராமாயணம் நர்மத்து என்பவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் ‘இராமாயண சர்’ என்ற நூலை எழுதினார். இதில் சீதை இராவணனை ஓவியமாக வரைந்தாள் என்பது கூறப்பட்டுள்ளது. இதனால் சினம் அடைந்த இராமன் சீதையைக் காட்டிற்கு அனுப்பினான் என்னும் செய்தி அமைந்துள்ளது. இந்தி இராமாயணம் சவுரசேனி அப்பிரம்சம் (Shourseni Apabhramsha) என்ற தொடக்க கால இந்தி மொழியில் சுவயாம்பு தேவர் என்னும் சமணர் ‘பவும சரித’ என்ற நூலை இயற்றினார். இது கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நூல் அவர் மகன் திரிபுவன தேவன் என்பவரால் முழுமைப்படுத்தப்பட்டது. பூபதி என்னும் கவிஞர் கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் ‘இராமசரித ராமாயணம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் இப்போது கிடைக்கவில்லை. கவி சூர்தாசு எழுதிய ‘சூர் சாகர்’ என்ற நூலுள் இராமகதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியை மட்டும் ‘சூர் ராமசமிதம்’ என்று குறிப்பிடுகின்றனர். இது வால்மீகியைப் பின்பற்றி எழுந்த நூலாகும். மேலும் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் முனிவர் என்ற ‘இராம்பிரகாசு’ நூலையும், கேசவதாசு ‘இராமசந்திரிகா’ என்ற நூலையும், சேனாபதி ‘கவிதா ரத்னாகர்’ என்ற நூலையும், துளசிதாசர் ‘இராமசரித மானசு’ என்ற நூலையும் எழுதியுள்ளனர். இவற்றுள் இராமசரித மானசு என்னும் துளசி ராமாயணம் இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடையே வாழும் பல கோடி மக்களைத் தன் பக்தி நலத்தாலும் எளிமையாலும் ஈர்த்த பெருமைக்குரியது. இவ்விராமாயணம் சைவம், வைணவம் என்ற இருபெரு சமயங்களுக்கும் இணைப்புப் பாலமாய் அமைந்துள்ளது. ‘அவதி’ என்று சொல்லப்படும் பேச்சு மொழியில் எழுதப்பட்ட இந்நூலில் இராமனும் அவன் பக்தர்களுமே முதன்மைப்படுத்தப்படுகின்றனர். துளசிராமாயணம் கடல்கடந்தும் தன் பெருமையை நிலை நாட்டியுள்ளது. ‘யுனசுகோ’ நிறுவனச் செய்தி அறிக்கை ஒன்று தெற்காசியாவின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றாகத் துளசிராமாயணத்தைக் குறிப்பிட்டுள்ளது. பஞ்சாபி இராமாயணம் குலோப்சிங் என்பவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணத்தையும், 19–ஆம் நூற்றாண்டில் பக்த காளிதாசர் ஓர் இராமாயணத்தையும் இயற்றியுள்- ளனர். இவ்விரண்டு மட்டுமே பஞ்சாபி மொழியில் இராமன் கதை பேசும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. வங்கமொழி இராமாயணம் இராம கதையை வங்காள மொழியில் கூறியவர்களுள் முதன்மையானவர் கிருத்திவாச பண்டிதர். இவர் எழுதிய நூல் ‘கிருத்திவாசராமாயணம்’ என்று கூறப்படுகிறது. மாலாதரர் என்பவர் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் எழுதிய சீகிருட்டிண விசயம் என்னும் நூல் இராமன் கதையையும் இணைத்துக் கூறுகிறது. மாதவசந்தர் என்பவரால் எழுதப்பட்ட இராமாயணத்துடன் சங்கர தேவர் என்பவர் ‘உத்தர காண்டத்தை’ இயற்றி அதனை முழுமைப்படுத்தியுள்ளார். பவானிநாதர் என்பவர் அத்யாத்மராமாயணத்தை அடியொற்றி ஒரு வரலாற்றுக் காப்பியம் இயற்றினார். நித்யானந்த ஆசாரியார் அற்புதராமாயணத்தை ஒட்டித் தம் இராமாயணத்தை இயற்றினார். இக்காப்பியத்தை இயற்றியதால் இவர் ‘அத்புதாசாரியார்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். காசுமீரி இராமாயணம் திவாகர் பிரகாசு என்பவர் காசுமீர மொழியில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ‘இராமாவதாரசரித்திரம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இவ்விராமாயணம் வால்மீகி ராமாயணத்திலிருந்து மிகுந்த மாறுபாடுகளைக் கொண்டு திகழ்கிறது. இந்நூலிலும் சீதை இராவணனுக்கு மகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். மேலே குறிப்பிட்ட நூல்களைத் தவிர வேறு சில இராமாயணங்களும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. இலகுராமாயணம், பாரத்வாசராமாயணம், போதாயனராமாயணம், யோகவசிட்டராமாயணம், புசுண்டிராமாயணம், யாக்ஞவல்கியராமாயணம், சவனராமாயணம் என்னும் இராமாயணங்களின் வரலாற்றையும் தோற்றத்தையும் சிறப்பாக அறிந்துகொள்ள முடியவில்லை. இந்தியாவிற்கு வெளியே திபெத்தியன் இராமாயணம், இராம்கியான் (சியாம் நாட்டில் வழங்கப்படுவது), யாம் வீ (பர்மிய மொழி இராமாயணம்) போன்ற பல இராமாயண நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும்போது, இராமாயணக்கதை ஒன்றுதான் ஆசியநாட்டு மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இராமன் கதை கேட்கவும் படிக்கவும் நடிக்கவும் சுவையானதாக அமைவதுடன், மிகப்பெரிய காப்பிய இலக்கிய வடிவிலும், சிறிய இலக்கிய வடிவிலும் எழுதுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இந்நெகிழ்வுத் தன்மை இராமாயண நூல் பெருக்கத்திற்கு மற்றொரு காரணமாக அமைகிறது. இரா.பி.