என்பார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூரில் வாணிகத்தில் சிறப்புப் பெற்றிருந்த வேளாண் செட்டியார் குலத்தில் தோன்றியவர்; கோவை நகரின் பெருமைக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். இவர்தம் தந்தையார் அங்கப்பச் செட்டியார்; தாயார் மீனாட்சி அம்மையார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டு மே மாதம் 18–ஆம் நாள் பிறந்தார். இளமையில் கோவையில் கல்விபயின்று, கி.பி. 1897–இல் ‘மெட்ரிகுலேசன்’ என்னும் பள்ளியிறுதிப் படிப்பில் தேறினார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியின் வழியாக 1901–இல் பி.ஏ. பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1904–இல் பி.எல். பட்டமும் பெற்றார். சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றபிறகு கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சட்டத்துறையில் இவர் கூர்மையான அறிவும் வாதத்திறமையும் பெற்றிருந்தார். இவர் 1905–முதல் 1936 வரை மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார்; அதே சமயத்தில் அவருடைய பண்பாளுமை வேறுவேறு துறைகளிலும் விரிவடைந்தது. கோவை நகர வளர்ச்சிப் பணிகளில் இவர் ஈடுபடத் தொடங்கினார். அக்காலத்தில் இருந்த ‘கோவை மாவட்டக் கழகம்’ என்னும் நிருவாக அமைப்பின் உறுப்பினராக அமர்ந்தார். அக்கழகத்தின் உதவித் தலைவராக 1914–இல் ஆனார். கோவை நகரசபைத் தலைவராக 1919–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உதவித் தலைவராக இருந்தவர் சர்.ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் ஆவார். கோவை நகராட்சிப் பொறுப்பில் இவர் இருந்த காலத்தில் கோவைப் புறநகர் விரிவுத் திட்டங்கள், புதிய பள்ளிகள், மருத்துவ நிலைவங்கள் அமைத்தல், சாலைகள் விரிவாக்கம் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தினார். இவருடைய பணிகளைப் பாராட்டி அக்காலத்தில் இரான்பகதூர் திவான்பகதூர் ஆகிய பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. நகராட்சிப் பொறுப்புகளோடு, மாநிலச் சட்டமன்றப் பொறுப்புகளிலும் இவர் சீரிய பணியாற்றினார். சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு 1921–இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1939 வரை உறுப்பினராகப் பணியாற்றினார். உழவர் கடன் நீக்கச் சட்டம் 1938–இல் இவருடைய முயற்சியால் உருவாகியது. இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சிச் சார்பில் 1945–ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1951–இல் நாடாளுமன்றத்திற்குப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதி வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். தி.அ. இராமலிங்கம் ஆற்றிய பணிகளுள் தலையாயது. கூட்டுறவு இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டாகும். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடுவர். முதன் முதலில் கோவைக் கல்லூரி ஆசிரியர்கள் தொடங்கிய கூட்டுறவுப் பண்ட சாலையையும், கூட்டுறவு வங்கியையும் தொடங்கி அவற்றின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர்க் கோவை நகரில் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள் இவருடைய முயற்சியால் உருவாயின. கோவை மத்திய கூட்டுறவு வங்கி, கோவை நகர வங்கி, நில அடகு வங்கி, வீட்டு அடகு வங்கி, கோவைக் கூட்டுறவுப் பால் பண்ணைச் சங்கம், கூட்டுறவுச் சங்கம், கோவைக் கூட்டுறவு அச்சகம் ஆகியவை அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கோவை நகரத்தோடு மட்டும் நிற்காமல் மாநில அளவிலும் கூட்டுறவு இயக்க வளர்ச்சிப் பொறுப்புகளில் பங்காற்றினார்; சென்னை மாநிலக் கூட்டுறவு வங்கி, கைத்தறி நெசவுக் கூட்டுறவுச் சங்கம், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளிலும், மாநிலக் கூட்டுறவு மாநாடுகளின் தலைவர், அமைப்பாளர் பொறுப்பு- களிலும் இடம்பெற்று இவர் தொண்டாற்றினார். கூட்டுறவுத் துறையில் பயிற்சியளிக்கக் ‘கூட்டுறவுப் பயிற்சிச் சாலை’ ஒன்றைக் கோவையில் முதன் முதலாகத் தொடங்கினார். அது இன்றும் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது, தம் இறுதிக்காலம் வரையிலும் கூட்டுறவு இயக்கத்தில் இவர் ஈடுபட்டிருந்தார். நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த தி.அ. இராமலிங்கம், கோவைக் கல்லூரியின் செயலராக நீண்ட காலம் பணியாற்றி வந்தார். கோவையில் கிறித்தவ இலண்டன் தொண்டு நிறுவனத்தார் நீண்ட காலம் நடத்தி வந்த ஒரு பள்ளி 1934–இல் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, இவர் பொறுப்பேற்றுத் தொடர்ந்து நடத்தினார். அது இன்றும் சிறப்புற நடைபெறுகிறது. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செயற்குழு உறுப்பினராகவும் இவர் இருந்தார். கல்லூரியில் பயின்ற தாள்களில் தமிழ்மொழியின் மீது இவருக்கு மிகுந்த பற்றும் ஈடுபாடும் இருந்தன. அக்காலத்தில் தமிழுக்காக வழங்கப்பட்ட ‘மூர்எடு’ (Moorhead) பரிசு பெற்றுச் சிறப்படைந்தார். டாக்டர் உ.வே.சா., பரிதிமாற்கலைஞர் ஆகியோருடன் இவர் நெருங்கிப் பழகி வந்தார். ‘தமிழ்ப்பழமை’ (Tamilian Antiquary) இதழில் இவர் எழுதிய தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும் ‘பத்துப்பாட்டு’க் குறித்த கால ஆராய்ச்சிக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. பின்னாள்களில் கலைமகளில் பல இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். திருப்பதியில் கீழ்க்கலை மாநாட்டை இவர் 1939–இல் நடத்தியபோது, வடமொழி, வரலாறு, புதைபொருள் ஆய்வு போன்ற வழக்கமான பகுதிகளுடன், ‘தமிழ்ப்பகுதி’ ஒன்றையும் மாநாட்டில் அமைத்தார். திருப்பதி அறங்காவல் குழு உறுப்பினராக இவர் பணியாற்றிய காலத்தில், மலைப்பாதை அமைப்பு, கோவில் வரலாறு வெளியீடு, வடமொழிக் கல்லூரி அமைப்பு போன்ற பல திட்டங்களைச் செயற்படுத்துவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். கோவைக்கருகில் பெருந்துறையில் மூச்சிருமல் நோய் நிலையம் (T.B. Sanatorium) அமைத்தது இவருடைய சிறப்பான பணியாகும். ஆயிரக்கணக்கான பிணியாளர்களுக்கு வாழ்வு தரும் நலப்பணியில் இன்றும் அது சிறந்து நிற்கிறது. இவர் 1952–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 12–ஆம் நாள் மறைந்தார். இரா.ச.