இளந்திரையன்
iḷantiraiyaṉ
சங்க காலத் தமிழ் அரசர்களுள் ஒருவன்.
சங்க காலத் தமிழ் அரசர்களுள் ஒருவன். தொண்டை நாட்டினை ஆண்டமையால் இவன் தொண்டைமான் இளந்திரையன் எனவும் வழங்கப் பெற்றான். தொண்டை, பல்லவம் என்பன ஒரு பொருட் சொற்களாதலின் தொண்டையர் என்பது பல்லவரைக் குறிக்கும் என்றும், கிழக்குக் கடற்கரையிலுள்ள தொண்டியிலிருந்து வந்தமையால் தொண்டியோர் என்றும் பெயர் தொண்டையர் என ஆகியிருக்கலாம் என்னும் அறிஞர்கள் கருதுகின்றனர் திரையன் என்பதும் இவனுக்குரிய பெயராகும். திரையன் என்னும் பெயர்க் காரணம் ‘அந்நீர்த் திரைதரு மரபில் உரவோ னும்பல்’ (31) என்னும் பெரும்பாணாற்றுப்படை அடியினால் விளங்கும். திரையன் என்னும் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் நச்சினார்க்கினியர்; நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான் பெற்ற புதல்வனை என்செய்வேன் என்ற பொழுது தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று அவன் கூற அவளும் அவன் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின், திரையன் என வழங்கப்பட்டான். காட்டூர்கிழார் மகனார் கண்ணனார், நக்கீரர் ஆகியோர் பாடிய இரு அகநானூற்றுப் பாடல்களில் (அகம். 85, 340) திரையனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. திரையன் வென்வேல் கொண்டவன் என்றும் வேங்கடமலை இவனுக்குரியதென்றும் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் (அகம். 85–19) கெடாத புகழையும் அழகிய பூண்களையும் கொண்ட இவன், பவத்திரி என்னும் கடற்கரை ஊரினைக் கொண்டிருந்தான் என்று நக்கீரர் (அகம். 340. 6-7) குறிப்பிட்டுள்ளார்.
இவன் கவிஞனாகவும் விளங்கியுள்ளான். இவன் பாடியனவாகப் புறநானூற்றில் ஒன்றும் (185) நற்றிணையில் மூன்றும் (94, 99, 106) இடம்பெற்றுள்ளன. அவற்றுள் புறநானூற்றுப் பாடலும் நற்றிணையில் 106–ஆம் பாடலும் தொண்டைமான் இளந்திரையன் என்னும் பெயரிலும், நற்றிணை 94, 99–ஆம் பாடல்கள் இளந்திரையனார் என்னும் பெயரிலும் அமைந்துள்ளன. இளந்திரையன், தொண்டைமான் இளந்திரையன், இளந்திரையனார் ஆகிய மூன்று பெயர்களும் ஒருவரையே குறிக்கும் என்பது கருதப்படுகிறது. மூன்று பெயர்களும் வெவ்வேறானவர்களைக் குறிக்கும் என்று கருதுபவர்களும் உளர்.
இவன் பாடிய புறநானூற்றுப் பாடல் (185) தன்னையொத்த பிற மன்னர்களுக்கு அரசியல் நுணுக்கத்தை அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வரசன், நாட்டையாளும் அரசன் தெளிந்த அறிவுடையோனாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாட்டை ஊறின்றிக் கொண்டு செல்ல முடியும் என்பதை, ‘காவற் சாகாடுகைப்போன் மாணின், ஊறின்றாகி யாறினிது படுமே’ என்று குறிப்பிட்டுள்ளான். இளந்திரையம் என்னும் நூலையும் இவன் இயற்றியுள்ளான் எனக் கருதுகின்றனர். இவன் பெயரில் திரையனூர் என ஓரூர் இருந்ததாக நன்னூல் மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது. இவன் ‘ஆதொண்டைச் சக்கரவர்த்தி’ எனத் திருமுல்லை வாயிற்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளான்.
இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பட்ட பெரும்பாணாற்றுப்படையின் தலைவனாக விளங்குபவன். மேலும் இவனை ‘ஆழியிழைப்ப’ எனத் தொடங்கும் வெண்பாவால் பொய்கையார் என்னும் புலவர் பாராட்டியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 484)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4fua7uc/
தமிழ்“இளந்திரையன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4fua7uc/APA
Oliyon Research. (2026). இளந்திரையன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d4fua7uc/MLA
"இளந்திரையன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4fua7uc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment