அர்த்த சாத்திரம்
artta cāttiram
முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர்கள் நேரிய முறையில் ஆட்சி செய்வதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன.
முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர்கள் நேரிய முறையில் ஆட்சி செய்வதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. அரசியலறிஞர், சமயக் கணக்கர், புலவர் எனப் பல திறத்தவர் அரசனுக்குரிய அதிகாரங்களை வகுத்தும் தொகுத்தும் எழுதியுள்ளனர். திருவள்ளுவர் அரசியல் 25 அதிகாரங்களில் மன்னனுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் கூறி, அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய ஆறு இயல்களில் அவனுடைய அங்கங்கள் பற்றி விவரித்துள்ளார். இத்தகைய பொருள் நூல்களை விரிவாகவும் விளக்கமாகவும் வடமொழியிலும் பலர் இயற்றியுள்ளனர். அவற்றுள் சிறந்ததாகவும் செறிவுடையதாகவும் இன்றுவரை கொள்ளப்படுவது கௌடலியரின் அர்த்த சாத்திரமேயாகும். அரசனின் மேன்மை, அவனது அதிகாரம், ஏனைய நாடுகளை அவன் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைக் கௌடலியர் விரிவாகக் கூறுகிறார். அரசியலை, அரசன், அமைச்சரவை, நாடு, அரண், படை, செல்வம், நட்பு, பகை ஆகிய எட்டு உறுப்புகளாகப் பகுக்கிறார். இவ்வெட்டு உறுப்புகளிலும் பொதுவாக அரசியல் தத்துவம், பொருளியல், அரச தந்திரம், வெளி நாட்டுறவு ஆகியன சிறப்புற மிளிர்கின்றன.
அர்த்த சாத்திர வரலாறு
வட மொழியில் பல அர்த்த சாத்திரங்கள் பல காலங்களில் பலரால் இயற்றப்பெற்றிருக்கின்றன. கௌடலியரே பல பொருள் நூலாசிரியரைத் தம் நூலில் குறித்துள்ளார். மாநவர் (மநு), பார்கசுபத்திவர், ஔசநசர், பாரத்துவாசர், விசாலாக்சர், பராசரர், பிசுநர், கௌணபதந்தர், வாதவியாதி, பாகுதந்தீ புத்திரர் ஆகிய பொருள் நூல் வல்லுநர் பதின்மரைக் கௌடலியர் தம் நூலில் சுட்டியுள்ளார். தேவர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிப் பொருள்நூல் செய்த தேவ குருவாகிய வியாழனின் கொள்கையினையும், அசுரர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிப் பொருள் செய்த அசுர குருவாகிய வெள்ளியின் கொள்கையினையும், இவ்விருவருக்கும் பின் வந்தோரின் கொள்கையினையும் தொகுத்தும் பகுத்தும், அறிந்தும் ஆய்ந்தும் அர்த்த சாத்திரத்தை ஆக்கிருப்பதாகக் கௌடலியர் தம் ஆசிரிய வணக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கௌடலியரின் அர்த்த சாத்திரம், அதற்கு முன் வடமொழியில் அரசியல் குறித்து வழங்கி வந்த கருத்துகளின் நெறிமுறையான தொகுப்பு என்பதே பொருந்தும். வைதிகக் கோட்பாடுகள் பல இந்நூலின் அடிக்கருத்தாகவும் ஆக்கத் துணையாகவும் விளங்குகின்றன. இந்நூலை அரச நீதி அல்லது தண்ட நீதி என்றும் கூறுவர்.
நூலாசிரியர்
இந்நூலாசிரியர் கௌடலியருக்குச் சாணக்கியர், விட்டுணு குப்தர் ஆகிய பெயர்களும் உண்டு. காமந்தகர் தமது நீதி சாத்திரத்தில் இம்மூன்று பெயர்களையும் காரணப் பெயர்களாகக் குறிப்பிடுகிறார். இவர் வட நாட்டில் தக்கசீலத்தில் பிறந்தவர் என்றும், தமிழ் நாட்டில் பிறந்தவர் என்றும் இரு வேறு கருத்துகளை நூல்கள் குறிப்பிடுகின்றன. சந்திர குப்த மௌரியனிடம் (கி.மு. 325–297) இவர் அமைச்சராக இருந்தார் என்று கருதுவதால் அவன் காலத்திலேயே இந்நூல் எழுதப் பெற்றிருக்கலாம் என்பர். இதனால் கௌடலியரின் காலம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டு என்று வரையறுப்பர். ஆனால், சந்திரகுப்தன் காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியரோ, அரசியல் வல்லுநரோ எவரும் இருந்ததில்லையென்றும், சந்திரகுப்தனைப் பற்றியோ அவனது அரசியலைப் பற்றியோ கெளடலியர் தம் நூலில் எதுவும் கூறவில்லை யென்றும், இதனால், அப்பேரரசன் காலத்தில் இவர் வாழ்ந்திருக்க முடியாது என்றும் விண்டர் நிட்சு, சாலி, கீத் ஆகிய மேனாட்டு ஆய்வாளர் கருதுகின்றனர். கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற ‘சுச்சுருத சங்கிதை’ நூல்களுக்குப்பின் இந்நூல் இயற்றப் பெற்றிருக்கலாம் என்பர். ‘யாக்ஞவல்கிய சுமிருதி’யை அர்த்த சாத்திரம் பெரிதும் தழுவியிருத்தலைக் கொண்டும், நடை எளிமையைக் கொண்டும், இதன் காலத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குக் கொண்டு வருவர் சிலர்.
நூல் அமைப்பு
இந்நூல் அதிகரணம், பிரகரணம், அத்தியாயம் ஆகிய மூவகைப் பிரிவினைத் தன்னுட் கொண்டு திகழ்கிறது. ஒன்றோ சிலவோ அமைந்த பிரகரணங்களைத் தன்னுட் கொண்டது அத்தியாயம். பிரகரணங்கள், அத்தியாயங்கள் ஆகியவற்றில் சிலவற்றையோ பலவற்றையோ தன்னுட் கொண்டது அதிகரணமாகும். பத்துக் குறளைக் கொண்டது ஓர் அதிகாரம் என்றும், சில பல அதிகாரங்களைக் கொண்டது ஓர் இயல் என்றும், இவையிரண்டையும் தன்னுட் கொண்டது அறத்துப்பால் அல்லது பொருட்பால் அல்லது காமத்துப்பால் என்றும் திருக்குறள் அமைந்திருப்பதுபோல் இந்நூலின் அமைப்புமுள்ளது. 15 அதிகரணங்களாகச் செறிந்தும், 150 அத்தியாயங்களாக விரிந்தும், 180 பிரகரணங்களாகப் பரந்தும் மொத்தம் 6000 சுலோகங்களில் அர்த்த சாத்திரம் அமைந்துள்ளது. இந்நூலின் முதல் அத்தியாயம் நூற்பொருளைச் சுட்டிக்காட்டும் பதிகம்போல் அமைந்துள்ளது.
பயிற்சி பகர்தல், தொழில்தலைவர் செயல்முறை, அறநிலையாட்சி, சிறுபகை களைதல், வஞ்சித்து ஒறுத்தல், மண்டல யோனி, அறுவகைக் குணங்கள், விதனம் விளம்பல், போர்ச்செலவு மேற்கொள்வோன் செயல், போர் நிகழ்ச்சி, குழுஉச் செயல், ஆற்றலிலான் செயல், பகையரண் எய்தும் வழி, மறைவுச் செயல், தந்திரவுத்தி ஆகிய பதினைந்து பெரும் பிரிவில் அரசியல் நுட்பங்களும் நெறிகளும் விளக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசியல் நெறிகளாய அரசு, அரசமைத்தல், நாடமைத்தல், அமைச்சரை அமைத்தல், படையமைத்தல், ஒற்று, தூது, வழக்குரை வரைதல், இறைப்பொருள் தொகுக்கும் நெறி, வணிகம், தண்ட விதிகள், போர் புரிதல், சந்து செய்தல் ஆகியவற்றை விளக்குகின்றன. அரசியலை நடத்துவதற்கும், அதனை நிலை நிறுத்துதற்கும் ஓர் அரசன் எத்தகைய வழிமுறைகளையும் கையாளலாம் என்- பது கௌடலியரின் அர்த்த சாத்திரத்தில் தொனிப்பதை அறியலாம். ‘இந்நூல் இந்தியாவிற்கு மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் நிருவாகத்துறைக் கலையினையும், அரசியல் சூழ்ச்சித் திறன்களையும் சுட்டிக் காட்டும் மிக அழகான கையேடு’ என்று கூறுகிறார் பிளிட் என்னும் அறிஞர். பிளேட்டோ, அரிசுடாட்டில், மற்றும் ஏனைய மேனாட்டு அறிஞர்களின் நூல்களுடன் இதனை ஒப்பிட்டுக் கூறலாம்.
இந்நூலின் சிறப்பு, பல காலம் மக்களாலும், அரசியல் துறை வல்லுநராலும் அறியப்படாமலேயே இருந்தது. இந்நூற் பொருள் முற்றிலும் மறக்கப்பட்ட சூழ்நிலையில் கி.பி. 1909–ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப் பெற்றுப் புத்துயிர் ஊட்டப் பெற்றது. பல இடங்களில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் திருப்பாப்புலியூர், இடப்பள்ளி போன்ற இடங்களில் கிடைத்த இந்தூற்படிகளை வேறு படிகள் பலவற்றோடு ஒப்பிட்டுச் செவ்விய வடிவில் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 604)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cysbzknd/
தமிழ்“அர்த்த சாத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cysbzknd/APA
Oliyon Research. (2026). அர்த்த சாத்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cysbzknd/MLA
"அர்த்த சாத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cysbzknd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment