சிறுநீரக மாற்றம் பல ஆண்டுகளாகக் கையாளப்பட்டு வருகிறது. திசு, உறுப்பு மாற்று மருத்துவம் கி.மு.1500 இலேயே தொடங்கிற்று. அலெக்சிஸ் காரெல் தொடங்கி வைத்த உறுப்பு மாற்று முறை முன்னேறி வருகிறது. ஆரோக்கியமுள்ள ஒருவரிடம் இருந்து சிறுநீரகத்தை அகற்றி, சிறுநீரக நோய் கண்ட ஒருவருக்குப் பொருத்த வேண்டுமானால், அகற்றப்பட்ட சிறுநீரகம் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். பெல்செர் (Belzer) எனப்படும் பாதுகாக்கும் பொறியில் வைத்து, 8—12°C அல்புமினாலோ, பிளாஸ்மாவாலோ நிரப்ப வேண்டும். ஆக்சிஜன் அளிப்பது குறைந்தாலோ, மிகை மாற்றங்கள் ஏற்பட்டாலோ சிறுநீரகம் பயனற்றதாகி விடும். அண்மைக் காலமாகச் சிறுநீரகத்தை ஒருவரிடமிருந்து அகற்றி, உடனடியாக மற்றவருக்குப் பொருத்துவதால், இத்தகைய பாதுகாப்பு முறைகள் பயன்படுவதில்லை. —அ. கதிரேசன்