வேதத்தை ஓதும் முறைக்கு அத்யயனம் என்பது பெயர். அத்யயனம் செய்வதில் ஐந்து முறை உண்டு. அவை சம்கிதை, பதம், கிரமம், சடை, கனம் என்பனவாம். மந்திரங்கள் மட்டும் சம்கிதை எனப்படும். ‘சம்கிதா பாடம்’ என்றும் சொல்லுவதுண்டு. இதில் சந்தி சேர்ந்த சொற்களைத் தனித்தனியாகப் பிரித்து ஓதுவது பதபாடம். பதபாடத்தில் அடுத்தடுத்து வரும் சொற்களை 1, 2; 2, 3; 3, 4; இப்படி சந்தி விதிப்படி சேர்த்துப் பாடுதல் கிரமபாடம். ஈரிரு சொற்களைச் சடைபோல் (1), 2, 2, 2, 1, 1, 2; (2), 3, 3, 2, 2, 3; (3), 4, 4, 3, 3, 4; 5, 5, 4, 4, 5; (5), 6, 6, 5, 5, 6 என்று அமைத்துச் சந்தி சேர்த்துக் கொத்துக் கொத்தாக ஓதுவது சடாபாடம். இதையே புரட்டிப் புரட்டி 1, 2, 2, 1, 1, 2, 3, 3, 2, 1, 1, 2, 3; 2, 3, 3, 2, 2, 3, 4, 4, 3, 2, 2, 3, 4; 3, 4, 4, 3, 3, 4, 5, 5, 4, 3, 3, 4, 5; 4, 5, 5, 4, 4, 5, 6, 6, 5, 4, 4, 5, 6, இப்படிச் சேர்த்துச் சொல்வது கனபாடம், எழுத்தெழுத்தாகப் பிரித்து அதனதன் இலக்கணத்தைச் சொல்லுவது இலட்சணம், சடாபாடம் ஓதவல்லவர் சடாவல்லவர். கனபாடம் சொல்லவல்லவர் கனபாடி. இலட்சணம் சொல்ல வல்லவர் இலட்சணாதிகாரி. இவ்வைந்து முறைகளில் ஓதுகையில், இதுதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதால் இடைச்செருகல் நிகழ வழியில்லை. ஆசிரியர் ஓர் அடியை ஓதுவார். மாணவர் அதை இருமுறை இசைப்பார். பாடல் முடிந்தபின் அதைப் பத்து உரு ஓதுவர். இதுதான் அத்யயனம். அத்யயனத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ‘அரிஓம்’ என்பது முறை.த.கோ.