சுற்று வழி இயக்கத் தடுமாற்றம்
cuṟṟu vaḻi iyakkat taṭumāṟṟam
புவி உட்பட ஒன்பது கோள்கள் (planets) (புதன், சுக்கிரன், புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ) சூரியனைச் சுற்றி வருகின்றன.
புவி உட்பட ஒன்பது கோள்கள் (planets) (புதன், சுக்கிரன், புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ) சூரியனைச் சுற்றி வருகின்றன. கெப்ளரின் விதிப் படி, இக்கோள்கள் அனைத்தும் நீள் வட்டப் பாதையில் (elliptic orbit) செல்கின்றன. சூரியனின் ஈர்ப்பாற்றலே, இவற்றின் இயக்கத்தை நிர்ணயிக்கிறது. சூரியனுக்கு மட்டுமே ஈர்ப்பாற்றல் இருந்தால், கோள்களின் சுற்றுப் பாதைசீரான நீள் வட்டமாக இருக்கும். ஆனால் கோள்- களின் பாதைகள் அவ்வாறு சீராக இல்லை. சிறு சிறு தடுமாற்றங்கள் காணப்படுகின்றன, இதையே சுற்று வழி இயக்கத் தடுமாற்றம் (perturbations) என வானியலார் கூறுகின்றனர்.
கோள்களின் இயக்கத்தையும், இயக்கப் பாதையையும் துல்லியமாகக் கணக்கிட, சூரியனின் ஈர்ப்பாற்றலை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்பதை அன்றைய அறிவியலார் அறிந்திருந்தனர். வியாழன், சனி போன்ற கோள்களின் இயக்கம் தன் விதிகளுக்கு முழுமையாக உட்படவில்லை என்பதைக் கெப்ளரே அறிந்திருந்தார். ஆனால், அது எதனால் என்ற கேள்விக்கு அன்று விடை கிடைக்கவில்லை, 1687இல் ஐசக் நியூட்டன் ஈர்ப்பு விதியை (law of gravity) நிறுவிய போதுதான் அக்கேள்விக்கு விடை கிடைத்தது.
ஈர்ப்பு விதியின் படி, விண்வெளியிலுள்ள ஒவ்வொரு பொருளும் அடுத்த பொருளை ஈர்க்கிறது. ஒவ்வொரு கோளும், அடுத்த கோளை ஈர்க்கிறது. எனவே, ஒரு கோளின் இயக்கத்தைச் சூரியனின் ஈர்ப்பாற்றல் மட்டுமன்றி, ஏனைய கோள்களின் ஈர்ப்பாற்றலும் பாதிக்கிறது. இப்பாதிப்பே, கோள்களின் பாதையில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது. இத்தடுமாற்றம் மிகச் சிறிய அளவே எனினும், அறிஞர்கள் அதைக் கூர்ந்து கவனித்து ஆராய்ந்ததன் பயனாகவே, புதிய கோள்கள் (குறிப்பாக நெப்டியூன்) கண்டு பிடிக்கப்பட்டன எனலாம்.
1781 இல் ஹெர்ஷெல் என்பாரால் யுரேனஸ் கோள் கண்டு பிடிக்கப்பட்டது. வானியலார் அதன் சுற்றுப் பாதையை ஆராய்ந்த போது, அது கெப்ளரின் விதிப் படி அமைய வேண்டிய இடத்தில் எப்போதும் காணப்படவில்லை என்பதை அறிந்தனர். அதன் பாதையைப் பின்னோக்கி ஆராய்ந்த போது, 1690-1781 வரை யுரேனஸ் 14 முறை தற்செயலாகக் காணப்பட்டதை பழைய. குறிப்புகளிலிருந்து அறிந்தனர். (அப்போது அதை ஒரு விண் மீன் என்று கருதினர்). வியாழன், சனி போன்ற கோள்களின் ஈர்ப்பால் ஏற்படும் தடுமாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும், யுரேனசின் முந்திய நிலைகள், உரிய இடத்தில் அமையவில்லை என்பதைக் கண்டனர். எனவே கண்ணுக்குப் புலப்படாத மற்றொரு பொருளும் யுரேனசின் பாதையில் தடுமாற்றம் ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தனர்.
கோள்களின் நிறை (Mass), சூரியனுக்கும் ஏனைய கோள்களுக்கும் இடையேயுள்ள தொலைவு, தடுமாற்றத்தின் அளவு ஆகியவற்றைக் கொண்டு யுரேனசின் பாதைத் தடுமாற்றத்திற்குக் காரணமான மற்றொரு கோள், எந்த இடத்தில் எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும் என்பதைக் கணித வல்லுநர் கணித்தனர். வானியலார் விண்வெளியில் அத்திசையில் தொலைநோக்கியைத் திருப்பினர். 1846இல் ஆதம்ஸ், லே வெரியர் ஆகிய இருவரும் தனித் தனியே நெப்டியூன் என்னும் கோளைக் கண்டு பிடித்தனர். இவ்வாறு, யுரேனசின் பாதைத் தடுமாற்றத்தை ஆராய்ந்ததின் பயனாக, நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்ட து. இவ்வாறே, நெப்டியூன் பாதைத் தடுமாற்ற ஆராய்ச்சி 1930இல் புளுட்டோவைக் கண்டு பிடிக்கத் தூண்டுகோலாயிற்று.
கிளாரெட், ஆயிலர், லாக்ராஞ்ச், லாப்லாஸ் போன்ற கணிதவியலார் தம் உழைப்பால் ஒரு கோளின் நிலையை மிக மிகத் துல்லியமாகக் கணித்து, அதன் பாதைத் தடுமாற்றத்தின் அளவையும் தெளிவாகக் கணக்கிட்டனர்.
பிற கோள்கள் மட்டுமின்றி, துணைக் கோள்களின் (satellites) ஈர்ப்பாற்றலும், ஒரு கோளின் பாதையில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்வுண்மைகளைக் கருத்தில் கொண்டால், கோளின் பாதை ஒரு நீள் வளையம் அன்று என்பதையும், பல் வேறு நிலைகளில் பல் வேறு நீள் வளையப் பகுதிகளாக அமையும் என்பதையும் உணரலாம். விண்வெளி இயக்கவியல் (space mechanics) நூல்கள் இதைத் தெளிவாக விளக்கும்.
பாதைத் தடுமாற்றத்தின் அளவைக் கொண்டு கோளின் நிறையைக் கணிக்கலாம். யுரேனஸ், நெப்டியூன் பாதைகளில் ஏற்படுத்தும் தடுமாற்றத்திலிருந்தே புளூட்டோவின் நிறையை முதன் முறையாகக் கணித்தனர்.
கோள்களுள் மிக எடையுள்ள வியாழன் ஏனைய கோள்களின் பாதைகளில் பெரும் தடுமாற்றத்தை உருவாக்குகிறது. சுற்று வழி இயக்கத் தடுமாற்றங்கள் ஒரு கால வட்டத்திற்கு (periodic cycle) உட்பட்டவை . இதனால் சூரியனுக்கும், ஒரு கோளுக்கும் இடையேயுள்ள சராசரி தொலைவு எப்போதும் மாறுவதில்லை என்பதைத் தடுமாற்றங்களை நன்கு ஆராய்ந்த லாக்ராஞ்சஸ் கண்டுபிடித்தார். எனவே, கோள்களின் பாதைத் தடுமாற்றங்கள், சூரிய மண்டலத்தைப் (solar system) பாதிப்பதில்லை என்பது தெளிவாகும். —வி. செல்லமுத்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 591)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cj8yrfzw/
தமிழ்“சுற்று வழி இயக்கத் தடுமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cj8yrfzw/APA
Oliyon Research. (2026). சுற்று வழி இயக்கத் தடுமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cj8yrfzw/MLA
"சுற்று வழி இயக்கத் தடுமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cj8yrfzw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment