சிதம்பர இரேவண சித்தரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் புலியூர். எனவே, இவர் புலியூர்ச் சிதம்பர இரேவணதேவர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சைவ வேளாளர். இவர், திருப்பட்டீச்சுரம் புராணம், திருவாஞ்சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இந்நூல், முதல் எழுத்தை அகர வரிசையில் அமைத்துப் பொருள் கூறும் நிகண்டாதலின் ‘அகராதி நிகண்டு’ என்னும் பெயர் பெற்றது. இது சூத்திரத்தால் ஆனது. எனவே, குத்திரவகராதி, இரேவண சூத்திரம், இரேவணாத்திரியார் சூத்திரம் என யாப்பாலும், தன்மையாலும், ஆசிரியர் பெயராலும் இது வழங்கப்பெறும். தமிழ்நிகண்டுகளிற் பல, பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும், சில, ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும் அமைந்துள்ளன. ஆனால், அகராதி நிகண்டு அவ்வாறு இல்லாமல் ஒருசொல் ஒரு பொருளையும் பலபொருளையும் உணர்த்தும் வகையில், அகராதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்கண், பிற நிகண்டுகளில் உள்ள சொற்களும் பொருளும் பெரும் பகுதி காணப்படுகின்றன. அவற்றில் இல்லாத, சங்க மருவிய சான்றோர் செய்யுள்களிலும் அவற்றின் உரைகளிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் சொற்களும், உலக வழக்கில் உள்ள வெளிப்படைச் சொற்களும், தெலுங்கு, கன்னடம் முதலிய பிறமொழித் திரி சொற்களும், ஆங்காங்குச் செந்- தமிழ் நாட்டுள் வழங்கும் திசைச் சொற்களும், மருவியும் திரிந்தும் வழங்கும் வட சொற்களும் பிற சொற்களும் இடையிடையே மலிந்து கிடக்கின்றன. தமிழ் அகராதியியலுக்கு முதன்முதலாக அகரநிரலை அகராதி நிகண்டே அறிமுகம் செய்தது இது, அகரப் பேர்த்தொகுதி முதலாக வகரப் பேர்த் தொகுதி ஈறாகப் பத்துத் தொகுதிகளை உடையது. இதில் அ–ஔ, க–கெள, ச–சௌ, ஞ–ஞௌ, த–தௌ, ந–நெள, ப–பௌ, ம–மெள, ய–யௌ, வ–வௌ எனப் பத்துத் தொகுதிகளிலும் முதல் எழுத்தளவில் அகரநிரலில் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, மேனாட்டு அகராதியியலிலும் தொடக்கக் காலத்தில் முதலெழுத்தளவில் மட்டுமே அகரநிரல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகண்டில் ஒரு சொல்லுக்குரிய பொருளை எளிதில் கண்டறிய இயலாது. ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டின், அந்தச் சொல் எத்தனை பொருள்களை உடையது என முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின், உரிய பொருள் தொகைப் பகுதியில் அச்சொல்லின் முதல் எழுத்தை மனத்திற்கொண்டு தேடி, அச்சொல்லுக்குரிய பொருளைக் கண்டறிய வேண்டும். இந்நிகண்டில் இத்தகைய குறை இருப்பினும், தமிழ் அகராதியியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. ஏனெனில் இதுவே முதன் முதல் சொற் பொருள் விளக்கும் நூல்களுக்கு அகரநிரலை அறிமுகம் செய்தது. இந்நிகண்டின் பெயரில் அடையாக அமைந்த அகராதி என்னும் சொல், பெருக வழங்கிச் சொற் பொருள் கூறும் நூலுக்குரிய கலைச் சொல்லாக நிலைத்துள்ளது குறிக்கத்தக்கது. இந்நிகண்டை நாராயணையங்கார் 1921-இல் மதுரைத் தமிழ்ச்சங்க வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.வ.செ.