கருத்தடுப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்கு உண்டு. ஆண்கள், ஆண் குறி உறையைக் கலவிக்கு முன்பு அணிந்து கொள்ள வேண்டும். இந்த உறை இரண்டு வகைப்படும். காண்டம் (condom) என்பது மெல்லியதாக இருக்கும். இவ்வுறையை ஒரு முறையே பயன்படுத்த முடியும், இரண்டாம் வகையான உறை சிறிது கடினமாக இருக்கும். இதை எளிதில் கழுவி, மீண்டும் பயன்படுத்தலாம். இதை அணிவதால் வெளிப்படும் விந்து, இந்த உறையுள் தங்கி யோனிக்குள் செல்லாது. உறையில் துளை எதுவும் இராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அண்மைக் காலமாக, விந்தை அழிக்கும் மருந்துகள் கொண்ட உறை தயாரிக்கப்படுகிறது. தடை செய்யப்படும் புணர்ச்சி. கலவியின் போது ஆண் விந்து வெளிப்படும் நேரமறிந்து, ஆண் குறியை யோனியிலிருந்து வெளியே எடுத்து, விந்தை வெளியே விட்டு விட வேண்டும். இது பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. விந்து நாள துண்டிப்பு. இது ஆண்களுக்கான அறுவை முறையாகும். விந்து வெளிப்படும் நாளத்தை இறுகக் கட்டி விட்டாலோ, துண்டித்தாலோ விந்து யோனிக்குள் செல்ல முடியாது. ஆனால், ஆணுக்கு முழுமையாகப் புணர்ந்த உணர்ச்சி இருக்கும். தல உணர்வு நீக்கம் மூலம் இவ்வறுவையைக் கையாளலாம். மிகவும் எளிதான இவ்வறுவைக்குப் பிறகு, சில நாள் விந்தணு உயிரோடு உள்ளமையால், விந்தை ஆய்ந்து, அணு இல்லையென்று தெரிந்த பின்னர் புணரலாம் அல்லது அதுவரை கருத்தடை மருந்துகளைக் கையாளலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பெண்களின் மாத விடாய் வட்டத்தில் பாதுகாப்பான காலத்தில் கருத்தரிக்க இயலாது. அடுத்த மாத விடாய் வருவதற்கு 14 நாளுக்கு முன்பு, முட்டை வெளிப்படுகிறது. இக்காலத்திற்கு 5 நாள் முன்பும், 2 நாள் பின்பும் கருத்தரிப்பு ஏற்படலாம். இதைக் கணக்கில் கொண்டு, மாத விடாய் வட்டத்தின் 10–11 நாள்களில் புணர்ச்சியைத் தவிர்ப்பது நல்லது. இதைப் பின்பற்றுவது மிகவும் கடினம். உடல் வெப்ப முறை, கருப்பைக் கழுத்திலிருந்து மிகையாகச் சளி, மாத விடாய் வட்டத்தின் 12 மாத முறை ஆகியவற்றால், பாதுகாப்புக் காலத்தைக் கணக்கிடலாம். கருப்பைக் கழுத்து அடைப்பான். இந்த அடைப்பானை உள்ளே பொருத்துவதால், விந்தணு உட்செல்ல முடியாது. டுயூமாஸ் அடைப்பான் மிகு பயன் அளிக்கிறது. இது போன்ற பல வகை அடைப்பான்கள் உண்டு. வேதிக் கருத்தடைக் கருவிகள். ஜெல்லி, கிரீம், களிம்பு போன்றவை விந்தணுவைச் செயலற்றதாக்கும் தன்மை கொண்டுள்ளன. இதைப் பொருத்தும் முறையை நன்கு தெரிந்து கொண்டு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தியும் பயன் பெறலாம். கருப்பையுள் பொருத்தப்படும் கருவிகள். இந்த நெகிழிக் கருவி உட்செலுத்துங் கருவி கொண்டு பொருத்தப்படும். இது இரண்டு வகைப்படும். முதல் வகையான லிப்பின் வளையம், சாஃப்-டி-வளையம் ஆகியவற்றில் தாமிரம் இல்லை. இரண்டாம் வகையான தாமிரம் 7. தாமிரம் டி, பல வகையான எடை ஆகியவற்றில் தாமிரம் உள்ளது. இவை பணி புரியும் விதம் பற்றிப் பல கருத்துகள் உண்டு. கருப்பையகத்தில் மாற்றங்கள் உண்டாக்குவனவாகவும், புரோஸ்டோகிளாண்டின் உற்பத்தியை அதிகரிப்பனவாகவும் கருதப்படுகிறது. இவ்வகைக் கருவி மாத விடாயின் போதோ, மாத விடாய்க்குப் பிறகோ உள்ளே பொருத்தப்படலாம். வேண்டிய நேரத்தில் அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில சமயத்தில் கருப்பைக்குக் காயம் ஏற்படலாம். பொருத்தியிருந்த போது, சூல் உண்டானால் கருச் சிதைவு ஏற்படலாம். இவற்றைப் பல ஆண்டுகள் வரை வைத்துக் கொள்ளலாம். கருத்தடை மருந்துகள். 30–50 மைக்ரோ கிராம் கொண்ட ஈஸ்ட்ரோஜனும், புரொஜெஸ்ட்ரானும் கலந்த மாத்திரை, முன் பிட்யூட்டரியைத் தூண்டி, முட்டை வெளிப்படுவதைத் தடுக்கிறது. கருப்பைக் கழுத்தின் சளித் தன்மை மாறுகிறது. கருவகக் குழலின் அசைவு மந்தமடைகிறது. கருப்பையகத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், கருத்தரிப்பு ஏற்படுவதில்லை. மாத விடாய் தொடங்கியதிலிருந்து 5ஆம் நாள் இம்மாத்திரையை நாளும் ஒன்றாக 21 நாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இம் மாத்திரைகளால் குருதி உறை கட்டி, மார்பகப் புற்று, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு ஆகியன உண்டாகலாம். குருதி அழுத்தம், இதய நோய், கால் கை வலிப்பு, கொழுத்த உடல் கொண்டோருக்கு இம் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. டிப்போ–புரோவரா எனும் புரோஜெஸ்ட்ரான் 150 மி.கி. அலகில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஊசியாகத் தரலாம். அறுவை முறைகள், கருவகக் குழலைக் கட்டி விடுதல் அல்லது துண்டித்து விடுதலைச் செய்யலாம். வயிற்றைத் திறந்தோ, யோனி வழியாகவோ செய்யப் படும் இது, நிலைத்த அறுவை முறையாகும். —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. H.S. Kaplan, The New Sex Therapy, Vol. II, Bailliere Tindall, London, 1980.