இது 85% சிமெண்ட்டும், கல்நார் என்ற இழைத் தன்மை கொண்ட சிலிகேட் தாதுவும், நன்கு நீருடன் கலக்கப்பட்ட கலவையாகும். கல்நார் என்பது வேறுபட்ட வேதி இயற்பியல் தன்மைகளையும் ஒத்த இழைத் தன்மைகளையும் உடைய சிலிகேட் தாதுக்களுக்குரிய ஒரு பொதுவான பெயராகும். இவை எளிதில் நெகிழ வல்ல இழைகளாகப் பிரிக்கப்படக் கூடியவை. இவ்வாறு பிரிக்கப்பட்ட இழைகளைப் பருத்தி போன்று துணிகளாக நெய்யவும், கரிம, கனிம ஒட்டுப் பொருள்களுடன் சேர்த்துக் கசடுகளாக வார்க்கவும் இயலும். மேலும், இவற்றின் வெப்பத் தடையும், வேதித் தடையும் இவை வணிகத் துறையில் முக்கிய இடம் பெற உதவுகின்றன. கல்நார் பொதுவாக இருவகையாகப் பிரிக்கப் படுகின்றது. அவை ஆம்பிஃபோல் தாதுக்கள், செர்ப்பன்டைன் அல்லது கிரிசோடைல் தாதுக்கள் ஆகும். இவ்விரண்டில் கிரிசோடைல் தாதுக்களே சிமெண்ட் கல்நார் (asbestos cement) தயாரிக்கப் பயன்படுகின்றன. கிரிசோடைல் அல்லது செர்ப்பன்டைன் பாறைகளினுள்ளே அடுக்குகளாகக் காணப்படும். இத்தாது வேதியியலில் நீர்த்த மக்னீசியாவின் சிலிகேட் 3MgO.2 SiO₂.2H₂O ஆகக் குறிக்கப்படுகிறது. சிலவகைத் தாதுக்களில் மக்னீசியாவிற்குப் பதிலாகச் சிறிதளவு கால்சியம் ஆக்சைடு அல்லது இரும்பு ஆக்சைடு உள்ளது. செர்ப்பன்டைன் பாறைகள் கிழக்குக் கனடா, ரொடீசியா, ஸ்வாஸிலாந்து, தென் ஆஃப்ரிக்காவில் டிரான்ஸ்வால் மற்றும் சோவியத் ஒன்றியக் குடியரசில் உள்ள மலைகளிலும் காணப்படுகின்றன. மேலும் தேவையான அளவு கிரிசோடைல் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, இத்தாலி, வெனிசுலா போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது. கிரிசோடைல் மலினம் மிகுந்த செர்ப்பன்டைன் பாறைகளை உடைத்துப் பிரிக்கப்படுகிறது. கல்நார், பாறை உடைப்பான் (rock breaker), உலர்த்தி (drier), சுழல் நொறுக்கி (rotary crusher), திறப்பி (opener), காற்றாடி, படிவிப்பான் போன்ற எந்திரங்கள் மூலம் சிறிய, தனித்தனி நார்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் 0.9—1.8 செ.மீ., 0.6—1.5 செ.மீ. நீளம் கொண்ட நார்களே சிமெண்ட் கல்நார் தயாரிக்கப் பயன்படுகின்றன. கிரிசோடைல் கல்நார் பின் வரும் வேதிப் பொருள்களைக் கொண்டதாகும். அவை SIO₂—41.5%, Al₂O₃—1.11%, FeO—1.83%, MgO—41.06% இணைந்த நீர் 14.3% ஆகியன. சிமெண்ட் கல்நார் தயாரிக்கும் முறை. 8—15% எடை கல்நாரும், 92—85% எடை சிமெண்ட்டும் நீருடன் கலக்கப்படும். இக்கலவை சுழல் உருளையின் மீது சுற்றப்பட்ட கம்பி வலையில் (wire gauge) படுமாறு வைக்கப்படும். இவ்வாறு அழுத்தப்படும் போது, கம்பி வழியே நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. வலையின் மேற்பரப்பின் மீது நீர் நீக்கப்பட்ட, சிமெண்ட்டால் பூசப்பட்ட கல்நார் ஒட்டிக் கொள்கின்றது. இவ்வாறு ஒட்டிய கல்நார், அதற்கடுத்துக் கீழே பொருத்தப்பட்டுள்ள சுழல் உருளைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, சற்று மேலே பொருத்தப்பட்டுள்ள இரு நெருங்கிய உருளைகளுக்கிடையே இயங்கும் நாடா மூலம் ஏற்றப்படுகிறது. இதனால், கல்நார் கலவையில் எஞ்சியுள்ள நீர் பிழிந்து வெளியேற்றப்பட்டு உறிஞ்சு குழாய் மூலம் நீக்கப்படுகிறது. இதன் பிறகு, கல்நார் ஒரு பளபளப்பான மேற்பரப்புக் கொண்ட வார்ப்பு உருளையில் ஒட்டுமாறு அமைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட, தேவையான தடிமன் கிடைக்கும் வரை உருளை சுற்றப்பட்டு, அதன் பரப்பில் கல்நார் சேர்க்கப்படுகிறது. பின்பு தகடுகளாக வெட்டப்படும். கல்நார் தேவையான அமைப்புக்கு வார்ப்புகளில் அழுத்தப்பட்டு உருவாக்கப்படும். சிமெண்ட் கல்நார்க் குழாய்கள், சுழலும் பிடி தண்டுகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. பயன்கள். சிமெண்ட் கல்நார் தட்டையான மற்றும் நெளி தகடு, ஓடு, வடிகுழாய், அழுத்தக் குழாய், கனப்பு உலை வார்ப்பு ஆகியன தயாரிக்கப் பயன்படுகிறது. சிமெண்ட் கல்நாரில் பிணைக்கப் பட்டுள்ள கல்நார், சிமெண்ட் கற்காரையை விட அதிக இழு வலிவைத் தர உதவுகிறது. சிமெண்ட் கல்நார் குறைந்த செறிவைக் கொண்டதால், சிமெண்ட் கற்காரையை விடக் குறைந்த தடிமனுடனும், எடையுடனும் இதை உருவாக்க இயலும். சிமெண்ட் கல்நார் தொழிற்சாலைகளில், ஆஸ்பெஸ்டாசிஸ் என்ற நோயினால், தொழிலாளர்கள் துன்பமடையக் கல்நார் காரணமாகிறது. கல்நாரின் சிறிய துகள்கள் மூச்சிழுக்கும் போது, மூச்சுக் குழாய் வழியாக உள்ளே சென்று நுரையீரலின் தந்துகிகளை அடைத்து விடும். இத்துகள்கள் எதிர்ப்படும் மெல்லிய திசுக்களில் ஒரு வகை எரிச்சலை உண்டாக்குகின்றன. இதனால், நுரையீரலில் குருதி விம்மல் ஏற்பட்டு, எளிதில் மரணம் நிகழ்கிறது. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Geoffrey Martin, Industrial Chemistry (Inorganic). The Technical Press Ltd., London, 1954.