அய்கொளே
aykoḷē
கருநாடக மாநிலம் பீசப்பூர் மாவட்டத்தில் பாதாமி வட்டத்தில் உள்ள சிற்றூர்.
கருநாடக மாநிலம் பீசப்பூர் மாவட்டத்தில் பாதாமி வட்டத்தில் உள்ள சிற்றூர். சாளுக்கியரின் தலைநகரமாக விளங்கிய பாதாமி அல்லது வாதாபியிலிருந்து கிழக்காக, 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாதாபிச் சாளுக்கியர்கள் காலத்திலிருந்து (கி.பி. 7–ஆம் நூற்றாண்டு) 14–ஆம் நூற்றாண்டு வரை அய்கொளே (Aihole) பெருநகரமாக விளங்கியது. இவ்வூர் அய்யாவொளே, அய்யாவொளி என்று பழங்கன்னடத்திலும், ஆரியபுரா என்று வடமொழியிலும் குறிக்கப்படும். நானாதேடு திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுக்கள் இவ்விடத்திலிருந்து பணியாற்றின. அவர்தம் சிறப்புத் தெய்வமான அய்யாப் பொழில் நாச்சியார் எனும் தேவியின் முதல் உறைவிடமாக இவ்வூர் திகழ்ந்தது. இவ்வூர் மிகப் பழங்காலத்திலிருந்தே மக்களின் உறைவிடமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை அய்கொளேவிலுள்ள மேகுடி மலைமீது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பழைமைச் சின்னங்களான கல் திட்டைகள் (Dolmens) ஆகும். இக்கல் திட்டைகள் கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டவை. இப்போது இவ்வூரில் அழிந்துபட்ட நிலையிலுள்ள கோட்டை மதிலும் ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட கற்கோயில்களும் சான்றுகளாக உள்ளன.
மேகுடிக் கோயில்
இக்கோயில் ஒரு குன்றின்மீது அமைந்துள்ள சமணக் கோயிலாகும். மேகுடிக் கோயில் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. கருவறை சதுரவடிவமானது. கருவறையின் முன், மண்டபம் உள்ளது. கருவறையினைச் சுற்றி நடைபாதையும் அதன் வெளிச் சுவர்களில் சாளரங்களும் உள்ளன. கருவறையில் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுகிறது. இக்கோயில் சிற்பங்களில் சிறப்பு வாய்ந்தது இயக்கி அம்பிகைச் சிற்பமாகும். சிங்கத்தின்மீது இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்துள்ள வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அம்பிகையின் மடியில் அமர்ந்துள்ளது. இச்சிற்பம் மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின்மீது ஒரு மாடிக் கருவறையும் உள்ளது. இது பிற்காலத்தில் கட்டப்பட்டது. கனத்த தூண்களை இக்கோயில் கொண்டுள்ளது.
இலாட்கான் கோயில்
இக்கோயில் இவ்வூரிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் மிகப் பழைமையானதாகும். சதுரமான கருவறையுடன் 12 தூண்களுடன் கூடிய முக மண்டபத்தைக் கொண்டது. இம்முகமண்டபம் கைப்பிடிச்சுவருடன் அமைந்துள்ளது. கோயிலின் வெளிச்சுவரில் கலை வேலைப்பாடு கொண்ட சாளரங்கள் தூண்களுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ளன. திருமாலுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் மேற்குப் பார்த்தவண்ணம் கட்டப்பட்டுள்ளது. மேற்கு முகப்பில் கருடனின் உருவம் காணப்படுகிறது. ஆனால், இப்பொழுது கருவறையில் சிவலிங்கம் உள்ளது. தூண்களமைந்த மண்டபத்தின் நடுவில் சிவலிங்கத்தைப் பார்த்தவாறு நந்தி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின்மீது சற்றுப் பிற்பட்ட காலத்தில் கட்டப்பெற்ற மாடிக் கருவறை உள்ளது.
கோண்டுகுடிக் கோயில்
இக்கோயிலின் கூரை, மையப்பகுதி சமதளமாகவும் ஓரங்கள் சரிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சமதளக் கூரையின்மீது சிகரம் கட்டப்பட்டுள்ளது. சிகரத்தின் நான்கு பக்கங்களிலும் நடராசர், வராகர், பைரவர், வாமனர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. சிகரத்தின் கீழேயுள்ள எட்டு மூலைகளில் காவல் வீரர்களின் சிற்பங்களும் அவற்றிற்கு நடுவில் பிரம்மாளின் சிற்பமும் உள்ளன. கோயிலின் முகப்பிலுள்ள வாயிற்படியின் உத்தரத்தில் கருடனின் உருவமுள்ளது. இக்கருடனின் உருவத்திலிருந்து இக்கோயில் திருமால் கோயில் என்பது புலனாகும். ஆனால், இப்பொழுது சிவனுடைய கோயிலாகவே இதுவும் காட்சியளிக்கிறது. கருவறையின் அருகில் இருக்கும் கூரைகளில் சிவன், அவரது தேவி, தாமரையின் மேலுள்ள பிரமன், பாம்பணையில் படுத்திருக்கும் பரந்தாமன் ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன.
துர்க்கை கோயில்
இலாட்கான் கோயில்
துர்க்கை கோயில்-தரைப்படம்
இலாட்கான் கோயில்-தரைப்படம்
துர்க்கை கோயில்
கோயிற் கட்டடக் கலையில், மிகவும் சிறந்து விளங்குவது இந்த ஊரிலுள்ள
துர்க்கை கோயிலாகும். இக்கோயில் தூங்கானை மாட அமைப்பைப் பெற்றுள்ளது. இரு வரிசையாக அமைக்கப்பட்ட தூண்கள் இக்கோயிலின் மையப் பகுதியையும் புறப்பகுதியையும் பிரிக்கின்றன. சதுர வடிவத்தில் அழகுடன் அமைந்த புடைப்புச் சிற்பங்களைக் கொண்டு தூண்கள் திகழ்கின்றன. இக்கோயில் உயர்ந்த பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. பீடப்பகுதிகளில் குள்ளமான உருவமுடைய பொதிகைச் சிற்பங்- கள், வேடிக்கைத் தோத்றங்களுடன் காட்சியளிக்கின்றன. தூண்களின் தலைப்புப் பகுதிகளிலும் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் பழைய மேற்கட்டு அழிந்து போய் அவ்விடத்தில் சற்றும் பொருத்தமில்லாத நாகரம் என்னும் ஒருவகைக் கலைப்பாணியிலமைந்த சிறிய சதுரச் சிகரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வட இந்தியக் கலைப்பாணியான நாகரமும், தென்னிந்தியக் கலைப்பாணியான திராவிடமும் ஒருங்கே இணைத்துக்கட்டப்பட்ட கோயிலாகக் காட்சி அளிக்கிறது. கோயிலின் நுழைவு வாயில் உத்திரத்தில் கருடனின் உருவமுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில், கருவறையின் வெளிச் சுவர்களில் நரசிம்மர், மகிடாசுரமர்த்தினி, வராகர், திருமால், அர்த்தநாரி, சிவன் ஆகியோவின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
உச்சிமல்லிகுடி கோயில்
இக்கோயில் கருவறையும் சிகரமும் வட இந்தியப் பாணியைச் சார்ந்து காட்சியளிக்கிறது. இக்கோயிலின் முகப்பிலுள்ள அரைவட்டக் கூட்டில் நடனமாடும் நடராசர் உள்ளார். முகமண்டபத் தூண்கள் சிற்பங்களெவையுமின்றி உள்ளன. முக மண்டபத்தை அடுத்துத் தூண்களுடன் கூடிய மற்றொரு மண்டபம் சுற்றுச் சுவர்களுடன் உள்ளது. இது கருவறையைச் சுற்றிச் செல்கிறது. முகமண்டபக் கூரையில் கார்த்திகேயனின் சிற்பம் உள்ளது. அவர் மயில்வாகனத்தில் அமர்ந்துள்ளார்.
உச்சகப்பய்யாக் கோயில்
அய்கொளேயிலிருந்து தென்மேற்காகச் சற்றுத் தூரத்தில் உச்சகப்பய்யாக் கோயிலமைந்துள்ளது. இது மிகப் பெரிய கோயிலாகும். கோயில் கலைப் பாணி முறையில் அமைக்கப்பட்டது. இதன் சிகரம் வடஇந்தியக் கருவறையின் வெளிப்பக்கமுள்ள மூன்று மாடக் குழிகளில் இரண்டில் மட்டும் நரசிம்மரின் சிற்பமும் பைரவரின் சிற்பமும் உள்ளன. மற்றொரு மாடக்குழியில் எந்தச் சிற்பமும் இல்லை. இக்கோயிலின் மண்டபக்கூரை சமதளங்களுடன் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூரையினைப் பெரிய தூண்கள் தாங்குகின்றன. தூண்களில் கணங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சுவருடன் ஒட்டிய தூண்களில் சிவனுடைய சூலமும் பாம்பும் இருக்கின்றன. கூரையில் சிவன், பார்வதி, பாம்புப் படுக்கையில் திருமால், பிரமன் அவர்களைச் சுற்றி வழிபடும் மக்கள் ஆகியோரின் உருவங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுது இச்சிற்பங்கள் அமைந்த தொகுதி (Panel) பம்பாய் வேல்சு இளவரசர் அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்சிற்பங்கள் சாளுக்கியரின் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாம்.
இக்கற்றளிகளை யடுத்து மேலும் இரண்டு சிறப்பு மிக்க குடைதளிகள் உள்ளன. இக்குடைதளிகள் வாதாபியிலுள்ள குடைதளிகளைவிட அளவில் சிறியனவாகவும் வேலைப்பாடு குறைந்தும் காணப்படுகின்றன. இவ்விரண்டு குடைதளிகளுள் சிவனுக்குரிய இராவுலகுடி அல்லது இராவுல்பாடி குடைதளி, மற்றொரு குடைதளியைக் காட்டிலும் மேம்பட்டது. இராவுலகுடி குடைதளி, இரண்டு தூண்களுடன்கூடிய பெரிய அறைகளையும், குகையின் இறுதியிலும் இரு பக்கங்களிலும் தெய்வங்கள் உள்ள சிறு அறைகளையும் கொண்டுள்ளது. குடைதளியின் மூலைகளிலுள்ள சுவர்களில் அர்த்தநாரீசுவரர், கங்காதரர், பகீரதர் சிற்பங்கள் உள்ளன. குடைதளியின் உட்கூரையில் அமைந்துள்ள தாமரைப் பூவின் அமைப்பு, காண்பவரின் கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. குடைதளியிலுள்ள கருவறை இடைக் கூடத்துடன் அமைந்துள்ளது. இவ்விடைக் கூடத்தின் நுழைவு வாயில் அழிந்துபட்டிருக்கிறது. இக்கோயில் சுவரின் இடப் பக்கத்தில் பத்துக் கைகளுடைய நடனமாடும் சிவனும் தேவி பார்வதியும் கணபதியும் ஏழு பெண் தெய்வங்களும் சிற்ப வடிவிலுள்ளன. இச்சிற்பங்கள் அணிந்துள்ள ஆடைகளும் அணிகளும் உயர்ந்த தலையணிகளும் மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளன.
சமணர் குகைக்கோயில்
இக்குகைக்கோயில் அய்கொளேயின் தென்மேற்கே அமைந்துள்ளது; தாழ்வாரமும் அதையடுத்து மண்டபமும் கொண்டமைந்துள்ளது. கூரைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. குடைதளியின் உள்ளே உள்ள கருவறையில் அமர்ந்த நிலையிலுள்ள தீர்த்தங்கரரின் உருவம் உள்ளது. காவல் தெய்வங்களும் குள்ளமான உருவமுடைய பணியாளர் சிற்பங்களும் நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தாழ்வாரத்தின் சுவர்களில் பார்சுவநாதர் உள்ளார். பாம்புத் தலை அவரது தலைக்கு மேலே உள்ளது. தவத்துடன் இருக்கும் கோமதீசுவரர் தம் சகோதர்களுக்கிடையே நின்ற வண்ணம் காட்சியளிக்கின்றார்.
அய்கொளேயில் உள்ள கோயில்கள் யாவும், தென்னகத்தின் கோயிற் கட்டடக் கலையான திராவிடப் பாணியைக் கொண்டுள்ளன. விமானங்கள் உண்ணாழிகையின் மேற்கட்டுகளாக மேலே போகப் போகக் குறுகி அமைந்துள்ளன. பிரத்தரம் என்று கூறப்படும் கூடங்களைச் சுற்றிலும் சாலை, பஞ்சரம் ஆகியவை கொண்ட ஆரங்களைக் கொண்ட தளங்களையும் மேல் உச்சியில் கிரிவம், சிகரம், தூபி அமைப்புகளையும் பெற்று விளங்குகின்றன. உண்ணாழிகையின் பிரத்தரத்தின்மேல் சிறு விமான வடிவங்களைக் கொண்ட ஆரம் இக்கோயில்களின் தனிச்சிறப்பாகும். இக்கோயில்களில் பிற சிறப்புக் கூறுகள் சுகநாசி அல்லது கிளிமூக்கு என்ற உறுப்பாகும். இவ்வுறுப்பு அர்த்தமண்டபம் அல்லது மேல் கட்டின் முன்புள்ள அந்தராளத்தின்மீது மூக்குப் போன்று நீண்டிருக்கும். இவ்வுறுப்பு வடநாட்டுக் கோயில்களில் பொதுவாகக் காணப்படுகிறது. வட நாட்டுக் கோயிற்கலைப் பாணியான நாகரக் கலைப்பாணியையும் இங்குள்ள கோயில்கள் கொண்டுள்ளன. தளங்களின் மேலே படிப்படியாகக் குறுகி உயர்ந்து செல்லும் தளங்களைக் கொண்டு இங்குள்ள கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. நெல்லிக்கனி (ஆமலகம்) போன்ற வடிவமுள்ள உறுப்பினை ஒவ்வொரு தளத்தின் நான்கு மூலைகளிலும், மேல் தளத்தின் உச்சியிலும் பெற்றுத் திகழ்கின்றன. இங்குள்ள கோயில்களனைத்தும் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. நுட்பமாகச் செதுக்கத்தக்க முறையில் இக்கோயில்கள் செம்மணற் கல் (Red Sandstone) கொண்டு கட்டப்பட்டுள்ளன.
துணை நூல்கள்
Sivaramamurti, C., “The Art of India”, Harry N. Abrams, Incorporated, 1977.
“Archaeological Remains Monument and Museums, Archaeological Survey of India,” Part I, 1964.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 543)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bstrgzna/
தமிழ்“அய்கொளே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bstrgzna/APA
Oliyon Research. (2026). அய்கொளே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bstrgzna/MLA
"அய்கொளே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bstrgzna/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment