கல்வியிலும், பொருளாதார நிலையிலும் தாழ்ந்தும் சமூக நிலையில் தனியாக ஒதுக்கப்பட்டும் இருந்த மக்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று 1931–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்வரை குறித்து வந்தனர். அத்தொடரை மக்கள் வெறுத்ததால் 1935–ஆம் ஆண்டு அரசுச் சட்டப்படி, 1936–ஆம் ஆண்டு முதல் அம்மக்கள் அட்டவணை வகுப்பினர் (Scheduled Castes) என அழைக்கப்பட்டனர். இவ்வகுப்பினர் கல்வி வாய்ப்புகளின்றி, சமூகத்தில் பிறருக்குத் தொண்டு செய்து கொண்டு கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். தத்தம் சாதிக்குரிய வேலைகளையே பின்பற்றி வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியோடு இணைத்து இந்திய நாட்டுக்கு வந்த கிறித்துவ சமயத்தினர் சமயப் பணியோடு கல்விப் பணியையும் ஆற்றினர். அட்டவணை வகுப்பினரில் பலர் மதம் மாறியதுடன் கல்வியும் பெற்று உயர்நிலை அடைந்தனர். இதைக் கண்ட இராசாராம் மோகன்ராய், சுவாமி தயானந்தர் போன்ற இந்துமதச் சீர்திருத்தவாதிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக இரவுப் பள்ளிகள் நடத்தத் தொடங்கியதுடன் தங்கள் பள்ளிகளில் அட்டவணை வகுப்பினர் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டனர். கி.பி. 1879–ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தினரான (Theosophical Society) கர்னல் ஆல்காட்டும் (Col. Alcot) தாழ்த்தப்பட்டோரின் இழிநிலை கண்டு மனம் நெகிழ்ந்து, தமிழ்நாட்டில் பஞ்சமப் பள்ளிகள் (Panchama Schools) பலவற்றைத் தொடங்கினார். பின்னர், சென்னை அரசு அப்பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோருக்கான மாதிரிப் பள்ளிகளாக ஏற்றது. 1902–ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற தேசிய சமூக மாநாடு தாழ்த்தப்பட்டோர் கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மக்கள் வாழ்க்கை முறையில் காலப்போக்கில் உண்டான முன்னேற்றங்களும் தாழ்த்தப்பட்டோர் கல்விக்கு அடிகோலின. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இந்தியச் சங்கம், 1917–ஆம் ஆண்டுத் தீர்மானம் ஒன்றின் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கட்டாயக் கல்வியை இலவசமாக அளிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், எம்.சி. இராசா ஆகியோரும் அரசியல் நிலையிலும் கல்வி நிலையிலும் தாழ்த்தப்பட்டோர் நலத்துக்காகப் பெரும்பாடுபட்டனர், எரவாடா ஒப்பந்தத்தின் (1932) ஒன்பதாம் பிரிவு, ஒவ்வொரு மாநிலத்திலும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதி தாழ்த்தப்பட்டோர் கல்வி நலனுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. 1947-ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்றது. மாநிலங்களை நெறிப்படுத்தும் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் கல்வி பொருளாதாரம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு வழிகோலியது. விடுதலைக்குப்பின் இந்திய அரசினர் வருத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் கல்விக்காக மிகுந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்- திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும், அங்குள்ள தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்பத் திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியது. பள்ளிப் படிப்பில் இவ்வகுப்பைச் சார்ந்த பிள்ளைகளுக்குப் பெற்றோர் வருவாயைக் கவனிக்காமல் இலைசமாகப் புத்தகங்களும் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. பள்ளிக்குக் கொடுக்கப்படும் சிறப்புக் கட்டணமும் (Special Fees) தேர்வுக் கட்டணமும் (Examination Fees) இவர்களிடம் வாங்குவதில்லை. மேலும், பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு உரூ. 6,000/–க்கு உட்பட்டதாயின் விடுதிச் செலவுக்காக உரூ. 280/– முதல் உரூ. 350/– வரை உதவியளிக்கப்படுகிறது. இவ்வுதவிகளைத் தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெறும் அட்டவணை வகுப்பு மாணவருக்குச் சிறப்பான படிப்புதவித் தொகையும் காந்தி நினைவு உதவித் தொகையும் சிறப்புத் தகுதிக்கான உதவித் தொகையும் வழங்கப்படுகின்றன. கல்லூரிப் படிப்பு, முதுகலைப்படிப்புப் பெற விரும்பும் அட்டவணை வகுப்பு மாணவர்க்கு விடுதியில் தங்கிப் படிக்க 1971–72 முதல் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதற்குப் பெற்றோரின் வருவாய் எல்லை குறிக்கப்படவில்லை. இதனால் இவ்வகுப்பினரின் கல்விநிலை சீராக வளர்ந்து வருகிறது. உயர்வு || || 1961 || || 1971 || || விழுக்காடு உயர்வு அட்டவணைப் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றமின்றி, கல்வியறிவின்றிக் காடுகளிலும் மலைகளிலும் தனிக்கூட்டமாகவும் சில பகுதிகளில் நாடோடிகளாகவும் வாழ்ந்த மக்களை மலை வாசியினர் என்றும் பழங்குடியினர் (Scheduled Tribes) என்றும் 1931–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னர்க் குறித்து வந்தனர். ஆனால் 1935–ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளின்படி வரன்முறைப்படுத்தி, அட்டவணையில் அவர்கள் பெயர்களைக் குறித்தனர். அது முதல் அம்மக்கள் அட்டவணைப் பழங்குடியினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற பள்ளிகள் இவர்கள் வாழும் இடத்தில் அமையவில்லை. மலைப் பகுதிகளில் ஆங்காங்கே சிற்றூர்களில் கூட்டமாக வாழ்ந்ததால் ஓரிடத்தில் இருக்கும் பள்ளிக்குக் குழந்தைகள் வந்து சேர்தல் அரிதாக இருந்தது. இக்குடியினரின் பொருளாதார நிலையும் மிகவும் தாழ்வாக இருந்தமையால், தங்கள் குழந்தைகளை இவர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைகளில் ஈடுபடுத்தினர். மேலும், இவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசியதால் இவர்கள் மொழிகளில் பாடநூல்களும் இல்லை. இவர்கள் அறியாத அயல் மொழி மூலம் கற்றல் மிகவும் கடினமானதால், இவர்களது மொழியைக் கற்ற ஆசிரியர் கற்பிக்க வேண்டியதாயிருந்தது. இத்தகைய திறனும் ஈடுபாடும் உள்ள ஆசிரியர் மிகச் சிலரே உளர். இவை தவிர, கல்வியறிவு பெற்றால், சிறுவர்கள் பெரியோரை மதிக்கமாட்டார்கள் என்றும், இவர்களின் சிற்றூர் வாழ்க்கை சிதையும் என்றும் இக்குடியினர் கருதினர், ஆதலால், கல்வியறிவு பெறுவதில் இவர்கள் ஆர்வம் காட்டலில்லை. இவ்வகையான சிக்கல்கள் இருந்தமையால் இவர்கள் நீண்ட காலமாகக் கல்வியறிவு பெறாமலேயே இருந்தனர். 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிறித்தவச் சங்கத்தினரும் சமூகத் தொண்டாற்றும் நிறுவனத்தாரும் இக்குடியினருக்குக் கல்வியறிவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அரசும் இவர்களுக்குக் கல்வி வழங்குவது பற்றிக் கருதத் தொடங்கியது. கி.பி. 1882–ஆம் ஆண்டு கல்வித்திட்டக்குழு இந்தியாவின் கல்வி நிலை பற்றி ஆய்ந்து கூறிய அறிக்கையில், அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. நாடு உரிமை பெற்ற பின்னர் இந்தியக் குடியரசுச் சட்டம் 46-ஆம் பிரிவு, அட்டவணைக் குடியினருக்குக் கல்வி வழங்குதல் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான பொறுப்பென வலியுறுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்களில், இவர்கட்குக் கல்வி வசதிகளும் வாய்ப்புகளும் வழங்க உதவும் வகையில் பெருநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப அட்டவணைக் குடியினரின் கல்விக்கு ஏற்பாடு செய்தது. தமிழ்நாடு அரசு, அரிசன நலத்துறை (ஆதிதிராவிடர் நலத்துறை) என்னும் பெயருடன் தனியாக ஒரு துறையமைத்து, அதன்மூலம் அட்டவணை வகுப்பினர், அட்டவணைக் குடியினர் ஆகியோர் நலன்களைக் கவனித்து வருகிறது. பள்ளிகள் நடத்துதல், சம்பள உதவித் தொகையளித்தல், மாணவர் விடுதிகள் கட்டப் பொருள் உதவி செய்தல், புத்தகம், சீருடைகள் வாங்கப் பொருள் உதவி செய்தல், விடுதிகள் நடத்துதல், கல்லூரி மாணவர்கட்குத் தனிப் பயிற்சியளித்தல், கலைக் கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகளில் பயிலக் குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்குதல் (அட்டவணைக் குடியினருக்கும், பழங்குடியினருக்கும் 18%) ஆகிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்டவணைக் குடியினரும் பழங்குடியினரும் இவ்வாய்ப்புகளைப் பெற்றுக் கல்வி கற்கத் தொடங்கினர். 1961–இல் இவர்களுள் 5.91% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1971–இல் 9.81 விழுக்காட்டினரும், 1981–இல் 20.45 விழுக்காட்டினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர். அட்டவணைக் குடியினருள் கல்வியறிவு பெற்ற பெண்கள் தொகையும் பெருகி வருகிறது. 1971–இல் தமிழகத்தில் 6,800 பேர் கற்றிருந்தனர். ஆனால், 1981–இல் 35,829 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். மத்திய அரசும் மாநில அரசும் சில செலவினங்களைச் சமமாகப் பங்கிட்டும் சில செலவினங்களை மாநில அரசு தனியாக மேற்கொண்டும் அட்டவணைக் குடியினரின் கல்வி நிலையை உயர்த்தி வருகின்றன. வி.க.