ஊனுண்ணிகளில் மிக அழகிய விலங்கான சிறுத்தை, பாலூட்டி வகுப்பில் ஊனுண்ணி வரிசையில் அடங்கும். தன் முழு உருவத்தையும் சிறுத்தையால் மறைத்துக் கொள்ள இயலும்; சிறுத்தை மரத்திலிருந்து தாவ வல்லது என்றும், புலியோ, சிங்கமோ ஒரு போதும் மரம் ஏறா என்றும் கூறுவர். இது பெரும்பாலும் மனிதனை வேட்டையாடுவதில்லை. சில சிறுத்தைகள் எளிதாக மனிதர்களைக் கொன்று விடும். முதுமை, இயலாமை காரணமாகச் சிறுத்தை மனிதரைத் தாக்க முற்படுவதுண்டு. சிறுத்தைகளின் தோல், அமைப்பிலோ, புள்ளிகளிலோ ஒத்திருப்பதில்லை. வைக்கோல் நிறச் சிறுத்தை கரும்புள்ளியிலிருந்து பழுப்பு நிறம் வரை வேறுபடுகிறது. ஆஃப்ரிக்கச் சிறுத்தை ஆசிய இனத்திலிருந்து 'சிறிய நெருங்கிய புள்ளிகளால் வேறுபடுகின்றது. இந்தியச் சிறுத்தை மிகப் பெரியது. இதன் உடலில் சில புள்ளிகளே காணப்படும். ஆண் சிறுத்தை சராசரியாக 60 கி.கி. எடையும் 2 மீ. நீளமும் உடையது. ஆனால், சில இனங்கள் 100 கி.கி. எடையும் 2.5 மீ. நீளமும் கொண்டிருக்கும். வால் 1 மீ. நீளமுடையதால், இச்சிறுத்தை மிகப் பெரியதாகத் தோன்றும். கன்னத்தில் உள்ள மீசையும், முகங்களில் உள்ள மயிர்க் கற்றையும், மின்னல் வேகத்தில் மூளைக்குச் செய்தியை அறிவிக்கின்றன. செங்குத்தான காதுகள் எத்திசையிலிருந்தும் வரும் மிக மெல்லிய ஒலிகளையும் கூடக் கேட்க வல்லவை. உலர்ந்த காடுகளிலும் ஒலியின்றி நடக்க வல்லவை. சிறுத்தையின் முதன்மையான ஆயுதம் அதனுடைய கூரிய நகங்கள் ஆகும். சாதாரண நிலையில் நகங்கள் மடிக்கப்பட்டு, தரையில் படாமல் தோலால் மூடப்பட்டிருக்கும். சிறுத்தை தாக்க முயலும் போது, தசைகளால் இழுக்கப்பட்ட கூரிய நகங்கள் முன்னோக்கி வெளி வருகின்றன. சிறுத்தையின் புள்ளியிட்ட நிறம் எந்த இயற்கைச் சூழ்நிலையையும் ஒத்துள்ளது, சிறுத்தையின் கண்டறியும் தன்மை அதன் வியக்கத் தக்க உடலமைப்பை விட உயர்ந்து விளங்குகிறது. பல விலங்கினங்கள் பொறியில் சிக்கும் போது, ஊளையிடும். ஆனால், சிறுத்தையோ எவ்வித ஒலியும் செய்யாமல், தப்பவே முயலும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சிறுத்தை ஒரே ஒரு துணையுடன் வாழும். ஒன்றுக்கொன்று பேரன்பைச் செலுத்தும். பெண் சிறுத்தைக்கு 2—4 கண் திறவாத குட்டிகள் மூன்று மாதப் பேறு காலத்திற்குப் பிறகு பிறக்கின்றன. மறைவான பாறைச் சந்து, குகை, மரப் பொந்து ஆகியவை சிறுத்தையின் வாழிடமாகவுள்ளன. தாய் தன் குட்டிகளுக்கு வாலின் மூலமாகத் தாக்கப் பயிற்சியளிக்கிறது. நன்கு வளர்ந்து விட்ட குட்டியை, பெண் சிறுத்தை தன்னுடன் வேட்டையாட அழைத்துச் செல்கிறது. எதிரிகள் எதிர்ப்படும் போது, குட்டிகள் ஓடாமலும், தங்களைக் காட்டிக் கொள்ளாமலும், தரையில் பதுங்குகின்றன. இவ்வரிய சிறுத்தைகள் எண்ணிக்கையில் மிகக் குறைந்து, இன்று அழியும் நிலையில் உள்ளன. அவற்றின் தோல் விலை மிக்கது. தற்போது ஆஃப்ரிக்காவிலும் பிற நாடுகளிலும் கடும் பாதுகாப்பின் கீழ்ச் சிறுத்தைகள் பேணப்படுகின்றன. —எஸ். பழனிச்சாமி