அரசியல் உணர்வற்ற கொள்கை என்பது அரசியல் உலகில் இருந்துகொண்டு அரசியலைப் பற்றித் தெரியாமலும், தெரிந்திருந்தாலும் அரசியலில் ஆர்வமோ அக்கறையோ செலுத்தாமலும் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். அரசியல் உணர்வற்ற கொள்கை (Apolitical) புதிதான கொள்கை அன்று மனிதன் அரசியலில் பங்குபெறத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது இது. மனிதன் சமூகமாக வாழ விரும்பியதால் அரசியல் மனிதனுக்குத் தேவைப்பட்டது. சமூகம் என்பது மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு, அச்சமூகத்தை ஒழுங்குப்படுத்தவும் அச்சமூகத்தில் தோன்றும் சிக்கல்கள், தீமைகள் ஆகியவற்றைக் அமைக்கப்பட்டது களையவும் அரசு. இவ்வண்ணம் அமைக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளில் மக்கள் அனைவரும் பங்கு பெற்றால்தான் அரசு சிறப்பாகச் செயற்பட முடியும். மாறாக, அரசு நடவடிக்கைகளை அறிவதற்கு வாய்ப்பில்லாமல் இருப்பது, அரசு நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வதற்குரிய குறைந்த அளவு அறிவுகூட இல்லாமல் இருப்பது, அரசு நடவடிக்கைகளைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி நினைக்காமல் இருப்பது, நினைத்தாலும் ‘நமக்கென்ன’ என்று வாளா இருப்பது ஆகிய இவை போன்ற நிலைகளை அரசியல் உணர்வற்ற கொள்கை என்று குறிப்பிடலாம். மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழக் கூடியவன் எனவும் தனித்து அவனால் வாழ இயலாது எனவும் கருதிச் சமூகத்தை ஏற்படுத்தினான் என்னும்போது, சமூகம் ஏற்பட்ட பின்னர் ஏன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒருவன் இருக்கிறான் என்ற கேள்வி, அரசியல் அறிஞர்களின் குறிப்பாக அரசியல் சமூகவியல் அறிஞர்களின் கவனத்தை மிகுதியாகக் கவர்ந்தது. மனிதனுடைய இயல்பான பண்பு, மனப்பாங்கு, கருத்து ஆகியவற்றை அறிந்து, அவற்றிற்கேற்ப அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்ற புது அணுகுமுறை அரசியல் அறிவியலில் தோன்றியது. கிரகாம் வாலசு (Graham Wallace) என்பாரது ‘அரசியலில் மனித இயல்பு’ (Human nature in Politics) என்னும் நூலும், பென்ட்லியின் (F. Bently's) ‘அரசாங்கச் செயல் முறை’ (The Process of Government) என்னும் நூலும் 1908–ஆம் ஆண்டில் வெளிவந்தன. இந்த நூல்கள் அரசியல் சிக்கல்களைப் புதிய கோணத்தில் அலசி ஆராய்ந்துள்ளன. பின்னர், அரசியலில் வாக்களிப்பவர்களின் நிலையை அறிந்து கொள்ள, வாக்களிக்கும் நடத்தை (Voting Behaviour) என்ற ஆய்வு அரும்பியது. வாக்களிக்கும் நடத்தை ஆய்வு, வேட்பாளர்களின் ஆர்வம். நடத்தை, நம்பிக்கை கருத்து போன்றவற்றை அறிந்து, ஏன் சிலர் வாக்களிப்பதில்லை? வாக்களிக்க ஆர்வங்கொள்வதில்லை என்று ஆராயும் உணர்வைத் தூண்டிற்று, அவ்வாய்வு, மனிதர்கள் அரசியல் முறைமையிலிருந்து அல்லது நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்வதன் காரணங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெளியிட்டது. அரசியல் நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வதால், சமூக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகின்றதென்பதையும் சுட்டிக் காட்டியது, இந்த வாக்களிக்கும் நடத்தை ஆய்வு. வால்டர் லிப்மெனின் (Walter Lippman) “பொதுமக்கள் கருத்து” (Public Opinion) என்னும் நூல் 1922-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் வாக்களிக்கும் நடத்தை பொதுமக்கள் கருத்து ஆகியவை குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளது. அரசியல் உணர்வற்ற கொள்கை கிரேக்க நகர அரசுகளிலேயே இருந்துள்ளது. கிரேக்க நகர அரசுகளின் ஆளுகை எல்லை சிறிய அளவில் இருந்தாலும், அரசுகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்து, அரசியல் அறிவினை உணர்த்தியது என்பதை அறியலாம். அப்படிப்பட்ட கிரேக்க நகர அரசுகளில் ஒன்றான ஆதன்சில் எல்லா மக்களும் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபெறவில்லை. அந்நகர அரசிலுள்ள அடிமைகள், வெளிநாட்டினர், பெண்கள் போன்றோர்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற முடியாது. பங்கு பெறத் தகுதி பெற்ற அனைவரும் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபெறவில்லை என்பதைச் சில எடுத்துக்காட்டுகள் தெரிவிக்கின்றன. 40.000 மக்கள் பங்குபெறக் கூடிய அந்த ஆதன்சு நகர அரசில் 18,000 இருக்கைகள் தாம் கூட்ட அரங்கில் இருந்துள்ளன. தவிர, கூட்டங்களுக்குக் குறைவெண் (Quorum)ணும் நாளடைவில் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மக்கள் கூட்டங்களில் கலந்து கொண்டனரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள அடையாளங்களும் இடப்பட்டுள்ளன. சாயங்கள் தோய வைத்து, கூட்டத்திற்கு வந்தவர்களுக்குச் சாய அடையாளமிட்டனர். தவிர, கூட்டங்களில் கலந்துகொண்ட நாள்களுக்கான படியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் தாமாக விரும்பிப் பங்குபெறுவதை விடுத்து, பங்கு பெறுவதற்குரிய ஊக்குவிப்புகள் செய்யப்பட்டிருந்தன. இவற்றை அரசியல் உணர்வற்ற கொள்கையை நீக்குவதற்குரிய வழிகளாக எடுத்துக் கொள்ளலாம். கிரேக்க நகர அரசுகளில் அரசியலில் பங்கு பெறாதவர்கள்மீது தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாளில், சமூகக் காரணிகள் சில அரசியல் உணர்வற்ற கொள்கைக்கு வித்திடுகின்றன. புதிதாக ஓரிடத்தில் குடியிருப்பவன் அரசியல் நடவடிக்கைகளில் விலகிச் செல்வதாகப் பல ஆய்வுகள் மெய்ப்பித்துள்ளன. ஏனெனில் அவனுடைய தொடர்பு குறைவாக இருப்பதால், அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்துவதில்லை. குடும்பப் பொறுப்பின் காரணமாக 50 வயதிற்கு மேற்பட்டோர்கள் அரசியல் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்துவதில்லை. இவைபோன்றே இனம் (Race), சமயம் (Religion), பால் (Sex), தொழில் (Occupation) போன்ற காரணிகளாலும் அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. வளர்ந்து வரக்கூடிய சமூகச் சூழ்நிலையில் அந்தந்த நாடுகளில் நிலவும் பண்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து, அரசியல் உணர்வற்ற கொள்கை நிலவி வருகிறது. அரசியல் உணர்வற்ற கொள்கை தோன்றுவதற்கு இராபர்ட்டு அ. தால் (Robert A. Dahl) என்பார் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறியுள்ளார். அவை, 1. அரசியல் பங்கேற்பில் கிடைக்கும் நன்மை பிற பங்கேற்புகளைக் காட்டிலும் குறைவாக இருக்கும்போது அரசியல் உணர்வற்ற கொள்கை தோன்றுகிறது. ஒரு மனிதன் அரசியலில் முழுமையாகத் தன் நேரத்தைச் செலவழித்து நல்ல பெயர் வாங்குவதைக் காட்டிலும் சமூகப்பணி, பொருளாதாரச் செயல்கள் ஆகியவற்றில் இறங்கினால் விரைவாக நற்பெயரையும் பொருளையும் திரட்டி விடலாம் என்று எண்ணினால், அது அவனது அரசியல் உணர்வற்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது. 2. அரசியலில் மனிதனுக்கு அனைத்து நடவடிக்கைகளும் ஒன்றுபோல் தோன்றினால், மனிதனிடம் அரசியல் உணர்வற்ற கொள்கை தோன்றுகிறது என்று கருதலாம். எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால், எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தால், எல்லாமே ஒன்றுதான் என்று கட்சியைத் தேர்வு செய்யாமல் விடுவது அரசியல் உணர்வற்ற கொள்கையாகும். 3. தனிமனிதன் முயற்சியால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது என்று எண்ணும் போது, அரசியல் உணர்வற்ற கொள்கை உருவாகிறது. என்னுடைய ஒரு வாக்குத்தான் அரசியல் முடிவினை மாற்றி விடுமா? என்று எண்ணுவது, ஏற்கெனவே ஒரு முடிவினைப் பெரும்பாலோர் வர- வேற்கும்போது தன்னுடைய உதவியை நல்கினாலும், நல்காவிட்டாலும் முடிவு தெரிந்த முடிவுதான் என்று எண்ணுவது அரசியல் உணர்வற்ற கொள்கையாகும். 4. எதிர்பார்க்கக்கூடிய அரசியல் முடிவு தன்னுடைய பங்கேற்பு இல்லாமலேயே மனத்திற்குகந்த நல்ல முடிவாகத்தான் வரும் என்று அளவுக்குமீறிய தன்னம்பிக்கை ஏற்படும்போது அரசியல் உணர்வற்ற கொள்கை ஏற்படும். 5. அரசியல் முறைமையில் தன்னுடைய அரசியல் அறிவு மிகவும் குறைவு என உணரும்போது அரசியல் உணர்வற்ற கொள்கை உருவாகிறது. இந்தியா போன்று பரந்துவிரிந்து பல்வேறு பகுதிகளைக் கொண்ட நாட்டில், ஏராளமான மக்கள் தொகையும் இருப்பதால், அந்நாட்டில் ஒருவரது அரசியல் அறிவு குறைவாக இருத்தல் கூடும். இதனாலும் அரசியல் உணர்வற்ற கொள்கை அமைகிறது. 6. அரசியலில் பங்கேற்றால் பல சிக்கல்களுக்கு இலக்காகலாமென எண்ணும்போது அரசியல் உணர்வற்ற உருவாகிறது. தேர்தல் விதிகள் நியாயமான, சுதந்திரமான தேர்தலுக்கு வழி வகுத்தாலும், அச்சுறுத்தல், வன்முறை போன்றவற்றால் தேர்தல் ஊறுசெய்யப்படுகின்றதென்பது உண்மை, அச்சுறுத்தல், வன்முறை, போராட்டம், தள்ளிவைத்தல் போன்றவற்றாலும் அரசியல் உணர்வற்ற கொள்கை ஏற்படும். அரசியல் அறிஞர்களின் கவனத்தை இருபதாம் நூற்றாண்டில் மிகவும் கவர்ந்து, அரசியல் சமூக ஆராய்ச்சியில் ஓர் உந்து சக்தியாக விளங்குவது அரசியல் உணர்வற்ற கொள்கை எனலாம். எகல் (Hegel) எனும் செருமானிய அறிஞர், மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைகளிலிருந்து மனிதன் விலகியிருத்தலால் தான் இந்நிலை தோன்றுகிறது என்று கூறியிருந்தாலும், சிக்மண்டு பிராய்டு (Sigmond Freuid) போன்ற உளவியலறிஞரும், மாக்சு வீபர் (Max Webre) போன்ற சமூகவியலறிஞரும் இதனைத் திறனற்ற, உதவியற்ற, மற்றவர்களை வெறுக்கிற ஒரு மனநிலையை உணர்த்துவதாகக் குறிப்பிடுகின்றனர். பார்சன்சு (Parsons) போன்ற சமூகவியலர்கள், இக்கொள்கையை, வாழ்வின் செய்கைகளிலிருந்து பிரிந்து இருக்கும் ஓர் உணர்வு என்கிறார்கள். மார்க்சு (Marx) இக்கொள்கையின் பொருளைப் பொருளாதாரத்தால், முதலாளித்துவ முறையின் தீமையாக உழைப்பாளிகளை முதலாளிகள் சுரண்டுவதைக் குறித்துக் கூறுகிறார். காந்தி அடிகள் சர்வோதயம் எனும் கருத்து வாயிலாகவும், இலாசுவெல் (Lasswell) சுதந்திர மனிதர்களின் பொது நல அமைப்பு எனும் கருத்து வாயிலாகவும் இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயற்சி செய்கின்றனர். அற, ஆன்மீக, சமுதாய, பொருளாதார, கல்வி, ஒழுக்க, அரசியல் அம்சங்கள் தனித்தனியாக மனித வாழ்வில் சிதைந்து விடாமல் அவையனைத்தும் ஒன்றியிணைந்து அன்பினால் மனிதர்கள் அனைவரும் வாழ்வில் உண்மையில் பற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமானால், அதிகாரக் குவிப்பு நீங்கி, மனிதன் கூட்டுறவினால் தன்னைத்தானே ஆட்சி செய்து கொள்ளும் முறையைக் காந்தியடிகள் வலியுறுத்துகிறார். அரசியல் உணர்வற்ற கொள்கையை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கினால்தான் அரசியல் முறை சீராகச் செயல்படும். எனவே மக்களுடைய மனப்பாங்குகளை அறிந்து, அவற்றிற்கேற்ற அரசியல் முறைமையை அமைத்தால் அரசாங்கம் செம்மையாகச் செயல்படும். மக்களும் தாங்களாகவே தங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கொடுத்து, நம்முடைய அரசு என்ற சமுதாய உணர்வோடு (Community) உறவு கொண்டாடினால் தான் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படும்.சி.ஞா.