உக்ரேனியன் மொழி
ukrēṉiyaṉ moḻi
சோவியத்து ஒன்றியத்தின் இரண்டாம் பெரிய குடியரசு உக்ரேனியன் குடியரசு.
சோவியத்து ஒன்றியத்தின் இரண்டாம் பெரிய குடியரசு உக்ரேனியன் குடியரசு. இங்குள்ள மக்களின் தாய்மொழி உக்ரேனியன் மொழி, இம்மொழி உக்ரேனியாவிலும் (சுமார் 33,000,000 பேர்) கனடா போன்ற பிற நாடுகளிலுமாக ஏறக்குறைய 38,000,000 பேரால் பேசப்படுகிறது.
சோவியத்து ஒன்றியத்தில் 53.7 விழுக்காடு மக்கள் உருசிய மொழியையும் ஏனையோர் 130க்கு மேற்பட்ட பிற மொழிகளையும் பேசுகின்றனர். உக்ரேனியன் மொழி உருசிய மொழிக்கு அடுத்து மிகுதியான மக்களால் பேசப்படுகிறது.
மொழிச் சிறப்பாலும் இலக்கியச் சிறப்பாலும் பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே உக்ரேனியன் மொழி தனித்தன்மை பெற்றிருந்தது. எனினும், பல அரசியல் காரணங்களால் இதன் தனித்தன்மை புறக்கணிக்கப்பட்டு, இது உருசிய மொழியின் ஒரு கிளை மொழியாகக் கருதப்பட்டு வந்தது. உக்ரேனியர்கள் தம் மொழியின் தனித்தன்மையை நிலைநாட்டப் பன்னூற்றாண்டுக் காலம் போராடினர். ஆனால், உருசியப் புரட்சிக்குப் பின்பே இம்மொழிக்கு ஒரு தனி மொழி என்னும் நிலை கிடைத்தது. இது அமைப்பில் உருசிய மொழியோடும் போலிசு (Polish) மொழியோடும் நெருங்கிய தொடர்பு உடையது.
சிலாவிய மொழிக் குடும்பத்தில் 11 மொழிகள் உள்ளன. இவற்றைத் தெற்கு மொழிகள், கிழக்கு மொழிகள், மேற்கு மொழிகள் என்னும் 3 பிரிவுகளில் வகைப்படுத்துவர். இவற்றில் கிழக்குச் சிலாவியப் பிரிவில் உருசியன், உக்ரேனியன், பைலோ உருசியன் என்னும் மொழிகள் அடங்கும். இவை மூன்றும் பழைய உருசியன் (Old Russian) மொழியிலிருந்து வளர்ச்சி பெற்றுத் தனித்தனி மொழிகளாயின.
உக்ரேனியன் மொழி பழைய உருசிய மொழியின் கிளைமொழியாகப் பிறந்து, நாளடைவில் வேற்று மொழிகளின் கலப்பினைப் பெற்றுப் புதிய தனி மொழியாக வளர்ச்சி பெற்றது. இதனால், இம்மொழி சிறிய உருசியன் (Little Russian) என்றும் குறிக்கப்படுகிறது. உக்ரேனியர்கள் இலித்துவேனியா, போலந்து போன்ற வேற்று நாட்டு அரசுகளின்கீழ் நெடுங்காலம் வாழ்ந்தனர். எனவே, உக்ரேனியன் மொழியில் அந்நாட்டவரின் மொழிகளான இலத்தீன், போலிசு ஆகியவற்றின் இயல்புகள் மிகுதியாகக் கலந்து, இம்மொழி பழைய உருசிய மொழியிலிருந்து வேறுபட்ட தனி மொழியாக வளர்ச்சி பெற்றது; வேற்று நாட்டவர் ஆட்சிக் காலத்துத் தோன்றிய இதன் இலக்கியங்களில் கிறித்தவ சமயம், சமயசீர்திருத்தம், மறுமலர்ச்சி போன்றவற்றின் தாக்கங்கள் பெரிதும் இடம்பெற்றுள்ளன.
உருசிய மன்னன் சாரின் (Orthodox Zar Alexis) துணையுடன் உக்ரேனியர்கள் தம்மை ஆண்ட போலந்தை எதிர்த்துப் போராடி கி.பி. 1648–இல் விடுதலை பெற்றுத் தம் நாட்டை உருசியாவுடன் இணைத்துக் கொண்டனர். உருசிய ஆட்சியில் உருசிய மொழி மட்டுமே ஆட்சி மொழியாகத் திகழ, ஏனைய மொழிகளுக்குத் தனித்தன்மை மறுக்கப்பட்டது. உக்ரேனியன் மொழி தனித்தன்மை பெற்றால் உக்ரேனியா உருசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகிவிடும் என்ற அச்ச உணர்வின் காரணமாக ஆட்சியாளர் இதன் வளர்ச்சிக்கு இடையூறுகள் பல தோற்றுவித்தனர்; இதனை ஒரு தனிமொழியாக ஏற்க மறுத்து உருசிய மொழியின் ஒரு கிளைமொழி என்று குறிப்பிட்டனர். இம்மொழியினைப் பள்ளிகளில் கற்றுத் தருவதற்கும் இதில் நூல்கள் அச்சிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய அடக்கு முறைகளினால் பல அறிஞர்கள் தம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று பிற நாடுகளில் வாழ்ந்தனர். உருசிய அரசு இம்மொழியின் சிறந்த கவிஞரான செவ்சங்கோ (Taraz Shev Chanko, 1814–61) என்பவரைப் பத்தாண்டுகள் எதுவும் எழுதக்கூடாது என்று தடைவிதித்ததோடு, அவரை நாடும் கடத்தியது. தலைமறைவாக இருந்து கொண்டே தம் கவிதைகள் மூலம் இவர் நாட்டு மக்களிடையே மொழிப்பற்றை வளர்த்து வந்தார். சிறந்த கவிஞரும் வரலாற்று ஆசிரியருமான குலிசு (Panteleman Kulish, 1819–97) என்பவரின் விடாமுயற்சியினால் இம்மொழிக்குச் சிரிலிக்கு (Cyrillic) என்னும் எழுத்து முறையும் இலக்கண நூலும் உருவாக்கப்பட்டன.
புதிய சோவியத்து அரசு ஏற்பட்டபின் உக்ரேனிய மொழி தன் மதிப்பையும் சிறப்பையும் நிலைநாட்ட முடிந்தது. கீவ் என்ற நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாகிய உக்ரேன் மாநிலத்தில் உக்ரேனியன் அறிவியற் கழகம் (All–Ukrainian Academy of Science) நிறுவப்பட்டது. உக்ரேனியன்–உருசிய அகராதி வெளியிடப்பட்டது.
மொழியமைப்பு
உக்ரேனியன் திராவிட மொழிகள் போன்று ஒட்டு நிலை (Agglutination) மொழியாகும். திராவிட மொழிகள் போன்று ஆண், பெண், அற்றிணை என்ற மூன்று பகுப்புகள் பாலில் அமைந்துள்ளபோதிலும், எண்ணில் ஒருமை பன்மையுடன் இருமை என்ற பகுப்பும் காணப்படுகிறது. நிலம், எல்லை (ஆண்பால்); தொழிற்சாலை (பெண்பால்) போன்றவற்றைச் சுட்டும் அஃறிணைச் சொற்களிலும் பால் வேறுபாடு குறிக்கப்படுகிறது. திராவிட மொழிகளில் பெயரடை பெயரோடு பால் எண் இயைபு பெறுவதில்லை. (எ–டு) நல்ல பையன், நல்ல பெண். ஆனால், உக்ரேனியனில் இவ்வியைபு காணப்படுகிறது. எழுவாய், ஐ, ஆல், கு, அது, இடம், விளி என்ற வேற்றுமைகள் இம்மொழியில் உள்ளன. தமிழில் போன்று இம்மொழியிலும் உருபுகள் பின்னொட்டுகளாகவே அமைகின்றன.
சான்று:
(வேலைக்காரனை) || ரொபித்நேக்–எவ் (வேலைக்காரர்களை)
இலக்கிய வளர்ச்சி
இம்மொழியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்கள் பெரும்பாலும் கோயில் நூல்களாகவே (வேதாகம மொழிபெயர்ப்புப் போன்ற (Church) நூல்கள்) அதாவது, மெய்ம்மையியல் சார்ந்த இலக்கியங்களாகவே அமைந்துள்ளன. போலிசுக் கிறித்தவச் சமயப் பரப்புநர்கள் இம்மொழியின் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். பிற்கால இலக்கியங்கள் மறுமலர்ச்சிக் கருத்துகளையும் உண்மைக் கொள்கையையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. குவிதா (Hryhony Kvita, 1778–1893) என்பவரின் கதைகளில் மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் கருப்பொருளாக அமைந்துள்ளன. வெளிநாட்டு அரசுகளின் அடக்குமுறையை முனைப்புடன் எதிர்த்து வந்த செவ்சங்கோவின் கொப்சார் (Kobzar) என்ற புகழ் பெற்ற கவிதை நூல், உக்ரேனிய மக்களின் ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது. தொழிலாளர் சிக்கல்கள் போராட்டங்கள் பற்றிய புதிய பொருள்களை இலக்கியத்தின் கருவாக அமைத்துத் தந்தவர் இவன் பிராங்கோ (Ivan Franko, 1856–1916). உக்ரயின்கா (Lesya Ukrainka, 1871–1913) என்பவரும் பிராங்கோவைப் போன்றேபுரட்சி எழுத்தாளர். உருசியப் புரட்சியை ஒட்டித் தோன்றிய இவர்களின் நூல்கள் உக்ரேனிய இலக்கிய வளர்ச்சியின் உச்ச நிலையைக் காட்டுகின்றன. உருசியப் புரட்சிக்குப்பின் தோன்றிய இலக்கியங்களில் மக்கள் தொண்டு, சமுதாய மேம்பாடு பற்றியவை முதன்மைப் பொருளாக அமைகின்றன. இரிசுகி (Maksym Rylsky, 1895–1964), இரிபக்கு (Natan Rybak, 1913) போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கோர். கே.ச
துணை நால்கள்
அகத்தியலிங்கம், ச., உலகமொழிகள் (இரண்டாம் பகுதி), பாரிநிலையம், சென்னை, 1969.
Bernard Comrie, The Languages of the Soviet Union, Cambridge, 1981.
Isaev, M.1., National Languages in the USSR: Problems and Solutions, Moscow, 1977.
Jakobson, R., Slavic Languages– A Condensed Survey, 2nd Edn., New York, 1955.
Mathews, W.K., Languages of the USSR, Cambridge, 1951.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 707)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bnfp8m6g/
தமிழ்“உக்ரேனியன் மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bnfp8m6g/APA
Oliyon Research. (2026). உக்ரேனியன் மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bnfp8m6g/MLA
"உக்ரேனியன் மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bnfp8m6g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment