சிறப்புக் கயிற்று, இழை நாண் அமைப்புகள்
ciṟappuk kayiṟṟu, iḻai nāṇ amaippukaḷ
இவை சாதாரண நெசவின் பாவு அல்லது ஊடை அமைப்பில், சன்ன நூல்களை முரட்டு நூல்களுடனோ, ஒற்றை நூல்களை இரட்டை நூல்களுடனோ மாற்றி, மாற்றி அமைத்துத்தோற்றுவிக்கப்பட்ட புடைப்புருவத் துணிகளாகும்.
இவை சாதாரண நெசவின் பாவு அல்லது ஊடை அமைப்பில், சன்ன நூல்களை முரட்டு நூல்களுடனோ, ஒற்றை நூல்களை இரட்டை நூல்களுடனோ மாற்றி, மாற்றி அமைத்துத்தோற்றுவிக்கப்பட்ட புடைப்புருவத் துணிகளாகும்.
இக்கயிற்றுத் தோற்றங்கள் பெரிதும் விரும்பப் படுகின்றன. என்றாலும், சில துணிகளில் நாண் அமைப்புக்கு மலிவான, தரம் குறைந்த நூல்கள் பயன்படுகின்றன. துணியின் தடிமனில் நாண் உறை நூல்கள் மறைந்து விடுவதால், துணியின் இரு புறமும் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால், மிகச் சிறிய வெட்டிழைகளோ. முழுமையாக முறுக்கப்படாத இழைகளோ பயன்பட வாய்ப்பு உண்டு. கயிறுகள் மிகையாகப் புடைத்திருப்பின், துணியின் வலிமை குன்றி விடும். ஏனெனில், புடைப்புக்குக் காரணமான முரட்டு நூல்கள் அண்மையிலுள்ள சன்ன நூல்களிலிருந்து விடுபட்டு விடும். அடுக்கிடைக் கோடுகளில் (தையல்களில்) இழுவிசை கூடுதலாகத் தாக்குவதால், இங்கு நூல் நழுவுதல் (slippage) நிகழும். மேலும், கயிற்று அமைப்புகளில் ஒரு நூல் முழுதும் உராய்வுக்குள்ளாவதால், துணியின் வலிமை குறைகிறது.
திறந்த நெசவு முறையில் தயாரிக்கப்பட்ட சிராய்ப்புத் துணிகளில் (sheer fabrics) ஒரு கோலத்தை உருவாக்கும் பொருட்டு, கயிற்று அமைப்பைப் புகுத்தலாம். திரைச் சீலைகள், ரவிக்கைகள் ஆகியவற்றின் தயாரிப்புக்குப் பயனாகும் டிமிட்டி (dimity) எனும் துணி இவ்வகையில் தயாரிக்கப்படுகிறது.
பெரும்பாலான கயிற்று அமைப்புகள் ஓரளவு எடையுயர்வையே தருகின்றன. சாதா நெசவுத் துணியை விடப் புடைப்புருவத் துணி உடலை ஒட்டும் துவளுமை மிக்கது. நூலையும், சீர்செய்தல் முறையையும் பொறுத்து, துணியின் மென்மையும், வழவழப்பும் அமையும். நிரப்பு நூலின் திசையில் கயிற்று அமைவு கொண்ட துணிகளுள் அகலத் துணி (broad cloth), ஃபெய்லி (faille), பாப்ளின் (poplin), டஃபேட்டா (taffeta) ஆகியன குறிப்பிடத் தக்கவை. வெட்டிழைகளாலான கனமான நிரப்பு (ஊடை) நூல்களையும், குறை முறுக்கேறிய பாவு நூல்களையும் பயன்படுத்தி, இறுக்கமான இழை நாண் துணிகளை உருவாக்கலாம். பெங்காலைன் (bengaline), ஆட்டோமன், ரெப் ஆகியன இவ்வகையைச் சார்ந்தவை.
இழை நாண் அமைப்புகள் பின் வருமாறு உருவாக்கப்படுகின்றன. பல்புரி நூல்களை (ply yarns) சேர்த்து முறுக்கி, இறுதி முறுக்கு, பல்புரி நூலின் முறுக்குத் திசையின் எதிர்த் திசையில் அமையுமாறு கவனித்துக் கொண்டால், கிடைப்பது இழை நாண் நூலாகும். கம்பி வடங்களில் SZS எனும் இடம் புரி—வலம் புரி—இடம் புரி முறுக்குச் சேர்க்கை இடம் பெறுகிறது. இடம் புரியாக முறுக்கப்பட்ட ஒற்றைப் புரிகள், வலம் புரியாக முறுக்கப்பட்ட பல்புரியாக்கப்பட்ட நூல்கள் மீண்டும் பல பல்புரி நூல்களுடன் இடம் புரியாகச் சேர்த்து முறுக்கப்படுகின்றன. ZSZ எனும் வரிசையிலும் முறுக்கப்படலாம். SSZ, ZZS எனும் வரிசையில் முறுக்கினால், விளையும் இழை நாண் அமைப்பு ஹாசர் வடம் (hauser cord) எனப்படுகிறது. இழை நாண் நூல்கள் கட்டுக் கயிறுகளாகவும், சுற்று நூல்களாகவும் (twines) பயனாகின்றன. தொழிலக முரட்டுத் துணிகளிலிருந்து திறந்த நெசவு அமைப்புகளான சிராய்ப்புத் துணிகள் வரை இந்நூல்களைக் கொண்டு தயாரிக்கலாம். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B. P. Corbman, Textiles—Fibre to Fabric, Sixth Edition, McGraw—Hill Book Company, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 321)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bkaz5nvr/
தமிழ்“சிறப்புக் கயிற்று, இழை நாண் அமைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bkaz5nvr/APA
Oliyon Research. (2026). சிறப்புக் கயிற்று, இழை நாண் அமைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bkaz5nvr/MLA
"சிறப்புக் கயிற்று, இழை நாண் அமைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bkaz5nvr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment