மலையமான் நாட்டு வேந்தர்களுள் பெருவலிமை படைத்தவன். பிற்பட்ட சோழர் காலத்து மலையமானான இவனது முழுப்பெயர் கிளியூர் மலையமான் பெரிய உடையான்இறையூரானான இராசராசச் சேதிராயன். இவனுக்கு வன்னியர் நாயன், சற்றுங் கொடாதான் முதலான விருதுப்பெயர்களும் உண்டு. இவ்வேந்தன் ஐப்பசி மாதம் திருவாதிரை நாளில் பிறந்தவன்; இரண்டாம் இராசராசன் கால முதற்கொண்டு மூன்றாம் இராசராசன் கால முற்பகுதி வரையில் தொடர்ந்து 73 ஆண்டுகள் (கி.பி. 1148–1221) மலைய நாட்டினை ஆட்சிபுரிந்த பெருமைக்குரியவன். ஆட்சிப்பரப்பு பெருவலி படைத்த இச்சேதிராயன் வாணகப்பாடி, செங்குன்றநாடு, மலாடு, உடைக்காட்டு நாடு முதலான பகுதிகளைக் கொண்ட பெரு நாட்டினை ஆண்டுவந்தான். இவனது தலைநகர் இறையூர் (இன்றைய எறையூர்) ஆகும். இது திருக்கோவலூர்க்குத் தெற்கே ஆசனூர்ப் பெருவழியில் ஏறத்தாழ 22 கி.மீ. தொலைவில் உள்ளது. மண உறவும் பாதுகாப்பு உடன்பாடும் அரசியல் திறனில் கைதேர்ந்த இவன், தன்னைப் போன்று பெருவலி படைத்து விளங்கிய பல்லவர் குலத் தோன்றலான இராசராசக் காடவராயன் என்னும் சிற்றரசனின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, தனது வலிமையைப் பெருக்கினான். இவன் இராசராசக் காடவராயனுடன் கி.பி. 1162–இல் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றினையும் செய்து கொண்டான். இவ்வேந்தனுக்கு அம்மச்சிக்குடி உய்யவந்தாள், பூமாழ்வி என்னும் இரு அரசியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. முதலாமவள் காடவராயனின் மகளாக இருத்தல் கூடும். பூமாழ்வி என்னும் அழகி பொன்பரப்பின வாணகோவரையனின் மகள். இவ்வாணகோவரையனுடனும் இவ்வேந்தன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது மேலாண்மையை அண்டைப் பகுதிகளில் நிலைநாட்டினான். இவன் கி.பி. 1198 ஆம் ஆண்டில் எரியப்பன் மருந்தனான மூவேந்தரையனுடனும் கி.பி. 1206–இல் இராசகெம்பீரச் சேதிராயனுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டான், இவ்வாறு பல வேந்தர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு, தனது வலிமையைப் பெருக்கிக் கொண்ட இவன், தனது பாதுகாப்பிற்காக வேளைக்காரப் படையினரையும் அமர்த்திக் கொண்டான். இவனது வேளைக்காரப் படையினருள் 47 பேர் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் பெயர்களைக் கொல்லூர், அறையணி நல்லூர்ச் சிவன் கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். இறைவர்க்கு அறக்கொடைகள் இவ்வேந்தன் பல சிவன்கோயில்களுக்கும் திருமால் கோயில்களுக்கும் பெருமளவில் அறக்கொடைகள் அளித்துள்ளான். கிருக்கோவலூர் இடைக்கழி எம்பெருமானுக்கு விளக்குகள் எரிக்க நிலக் கொடையும் திருப்பள்ளித்தாமம் அமைக்க நந்தவனமும், திருவிழாக்காலங்களில் வைணவர்களை உண்பிக்க நிலக்கொடையும் இவன் அளித்துள்ளான். திருக்கோவலூர் வீரட்டானமுடைய பரமசுவாமிக்குப் பல அறக்கட்டளைகளையும், அறையணிநல்லூர் ஒப்பொருவருமில்லா நாயனார்க்கு ஐப்பசி மாதத்தில் திருவாதிரை நாளில் விழா நடத்த நிலக்கொடையையும், ஆமூர் அகத்தீசுவரமுடையார்க்கு வழிபாடுகள் நிகழ்த்த நிலக்கொடையையும் இவன் அளித்துள்ளமை கல்வெட்டுகளால் புலனாகிறது. பெருவலியும் பெரும்புகழும் பெற்று விளங்கிய இவ்வேந்தன், தனக்கு உதவிபுரியப் பல அரசியல் அதிகாரிகளையும் படைத்தலைவர்களையும் பெற்றிருந்தான். இவர்களுள் இராமன் பொற்குடம் கொடுத்தானான வன்னிய தேவேந்திர மலையமான் என்பான் குறிப்பிடத்தக்கவன். இவன் திருக்கோவலூர்க்கு அருகில் உள்ள நெற்குணம் என்னும் ஊர்ச் சிவன் கோயிலில் மண்டபம் ஒன்றினை எடுப்பித்துள்ளான். அதிவீரசூரமலையமான், காமன் சேதிராயன் ஆகியோர் இவ்வேந்தனது அரசியல் அதிகாரிகளாவர். இவ்வேந்தனுக்குப் பெரிய உடையான் இராசராசக் கோவலராயன் என்னும் மகன் இருந்தான் இவன் பூமாழ்விக்குப் பிறந்தவனாவான். ம.இரா.த.