அண்டைப்பள்ளி
aṇṭaippaḷḷi
இது தரமான கல்வி அளிக்க வகை செய்யும் ஒரு திட்டமாகும், பல்வேறு சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, எல்லோரும் சமமென்னும் உணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்பது அண்டைப்பள்ளித் (Neighbourhood School) திட்டத்தின் நோக்கம்.
இது தரமான கல்வி அளிக்க வகை செய்யும் ஒரு திட்டமாகும், பல்வேறு சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, எல்லோரும் சமமென்னும் உணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்பது அண்டைப்பள்ளித் (Neighbourhood School) திட்டத்தின் நோக்கம். இது கோத்தாரி கல்வி ஆய்வுக் குழுவின் (1964-66) பரித்துரைகளுள் ஒன்றாகும்.
கல்வி, சமூக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடிகோலும் ஒரு கருவியாக அமைய வேண்டும். மாறாக, இன்றைய கல்விமுறை பல வகைகளில் சமூக ஒதுக்கத்தையும் (Segregation), வகுப்பு வேறுபாடுகளையும் வலுப்படுத்துவதைக் காணமுடிகிறது. பொதுத் துறையில் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத, பெரும்பாலும் குறைந்த வசதிகளுள்ள பள்ளிகளே உள்ளன. ஆனால், தனியார் துறையில் அதிக வசதிகளுடன் கூடிய அதிகக் கட்டணம் விதிக்கும் பள்ளிகளும் உள்ளன. செல்வர் அதிகப் பணம் செலவிட்டுத் தம் குழந்தைகளுக்கு இத்தகைய அரிய கல்வி வசதிகளைப் பெற்றுத் தர முடிகிறது. ஆனால் திறமை மிக்க ஏழைக் குழந்தைகளுக்கு இவ்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்கள் தம் வீட்டிற்கு அருகிலுள்ள குறைந்த வசதியுள்ள பள்ளிகளிலேயே பயிலமுடிகிறது.
இக்குறையைப் போக்குவதற்கு ஒரு பொதுவான, தரமான பள்ளியமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதில் சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியவற்றை நோக்காது, எல்லாக் குழந்தைகளும் இடம் பெற வேண்டும், சிறந்த கல்வி வாய்ப்புகள் பெற்றோரின் வருவாயின் அடிப்படையில் அன்றி, குழந்தைகள் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்; அனைத்துப் பொதுப் பள்ளிகளும் தரமுள்ளவையாக எளியவரும் அணுகும் முறையில் அமைய வேண்டும். இத்தகைய தரமான பொதுப் பள்ளி அமைப்பே, சோவியத்து உருசியா முதலிய நாடுகள் மிக விரைவில் முன்னேற்றமடையத் துணைபுரிந்தது. அமெரிக்கா, பிரான்சு முதலிய நாடுகளில் வன்மையுள்ள தனியார் துறை இருந்த போதிலும் தரமான பரந்த பொதுப்பள்ளி அமைப்பும் உள்ளது.
கல்வியில் பிளவு, ஒதுக்கம் ஆகிய குறைகளைத் தவிர்ப்பதற்காகக் கல்வி ஆய்வுக்குழு, அண்டைப்பள்ளிகள் அமைப்பை முதலில் தொடக்க நிலையிலும் பின் இடைநிலையிலும் உருவாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன்படி அனைத்துப் பள்னிகளிலும், அண்டையிலுள்ள எல்லாப் பிள்ளைகளும், சாதி, சமய, சமூக–பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முதலிய வேறுபாடின்றிச் சேர்க்கப்பட வேண்டும்.
அண்டைப் பள்ளியமைப்பு, சமூக தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்குத் துணை புரிவது மட்டுமன்றி, வேறு இரண்டு வகைகளிலும் பயன்படுகிறது. (1) இம்முறை, கற்கும் குழந்தை பொது வாழ்க்கையில் பங்கு பெறத் துணை புரிகிறது. பொதுமக்கள் தொடர்பு நற்கல்வியில் ஓர் இன்றியமையாத கூறாகும். (2) இத்தகைய பள்ளியமைப்பு செல்வரையும் சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளோரையும் சமூக ஆற்றல் மிக்கோரையும் பொதுக் கல்வியின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளத் தூண்டும்.
அண்டைப்பள்ளித் திட்டத்தை இரண்டு படிகளில் நடைமுறைப் படுத்தலாம் என்று கல்வி ஆய்வுக்குழு பரித்துரைத்தது. முதல் 10 ஆண்டுகளில் எல்லாத் தொடக்கப்பள்ளிகளையும் ஒரு குறைந்த அளவு தரத்தையாவது எய்துமாறு உயர்த்த வேண்டும். அவற்றுள் 10 விழுக்காட்டுப் பள்ளிகளை மேலும் உயர்ந்த நிலை எய்துமாறு செய்ய வேண்டும். அதே சமயம் அண்டைப் பள்ளித்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயல் திட்டமாகச் சில இடங்களிலாவது நடைமுறைப்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் எல்லா இடங்களிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
கல்வி ஆய்வுக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. தொடக்க கல்விமுறையில் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளபோதிலும், பொதுப் பள்ளிகள் தரம் மனத்தில் குறைந்தவை என்ற எண்ணமே மக்கள் மனதில் பதிந்துள்ளது. இதனால் சிறு பிள்ளைகள் தனிச் சீருடை அணிந்துகொண்டு அண்டையிலுள்ள பள்ளியைப் புறக்கணித்துவிட்டு, நகரின் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை மிகுந்த இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு செல்வதைக் காணலாம். இக்குறையை ஆய்ந்து அதனைக் களைய வேண்டியது இன்றைய கல்வியின் உடனடித் தேவையாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 286)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfduxbtd/
தமிழ்“அண்டைப்பள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bfduxbtd/APA
Oliyon Research. (2026). அண்டைப்பள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfduxbtd/MLA
"அண்டைப்பள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/bfduxbtd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment