அண்ணன்மார் சுவாமி கதை
aṇṇaṉmār cuvāmi katai
அண்ணன்மார் சுவாமி கதை என்பது கதையைப் பாடலாகக் கூறும் கதைப்பாடல் வகையினைச் சார்ந்தது.
அண்ணன்மார் சுவாமி கதை என்பது கதையைப் பாடலாகக் கூறும் கதைப்பாடல் வகையினைச் சார்ந்தது. கதைப் பாடல்கள் நாட்டுப்புற மக்களால் பாடப்படுவதற்காகவே அமைந்தனவாகும். தமிழகக் கதைப்பாடல்களைப் புராணக்கதைப் பாடல்கள், வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என மூன்று பிரிவுகளாகப் பகுக்கலாம். இவற்றுள் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ வரலாற்றுக் கதைப்பாடலாகும்.
இக்கதை கொங்கு நாட்டு வாழ்வையும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் ‘குன்றுடையான் கதை’ என்னும் பெயரும் உண்டு. கள்ளழகர் அம்மானை என்னும் நூலும் இதனையே விவரிக்கின்றது. இந்நூல் பெரியக்காண்டி அம்மனைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த வேளாண்குடியில் பிறந்த குன்றுடையானுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் உறவினர் செய்தபல இன்னல்களையும், அவற்றை நீக்கக் குலதெய்வம் அருள் செய்த நிகழ்ச்சியையும் வரலாறாகக் கூறுகிறது.
குன்றுடையானும் அவன் மனைவி தாமரையும் பட்ட இன்னல்களும், அவனை அடுத்துக் கெடுக்க அவனது உறவினர் செய்த கொடுமைகளும் பலப்பலவாகும். ‘பாம்புக்குப் பல்லிலே விடம்; பங்காளிக்கு உடம்பெல்லாம் விடம்’ என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இக்கதைப் பாடல், குன்றுடையானின் உறவினர் அவனொடு உறவாடிக் கொண்டே பல தீங்குகளைச் செய்தனர். அவனது திருமணத்தை நிறுத்த முயன்றனர். விதைப்பதற்கு வறுத்த விதைச் சோளத்தைக் கொடுத்தும் தோட்டத்தைப் புழுதி உழவு செய்தும் பாழாக்கினர். அவர்கள் எண்ணத்திற்கு மாறாகத் தோட்டம் செழித்து வளர்ந்ததைக் கண்டு உறவினர் பொறாமை கொண்டனர். வறுத்த சோளம் கொடுத்தோமே மங்கு மசையனுக்கு ‘வறுத்த சோளப்பயிறு வளர்ந்து வந்து நிற்குது பார்’ என்று கூறி அப்பயிரை அழிக்க உழுதனர். அன்று பெய்த மழையால் உழுத பயிர் இளைத்துச் சோளத் தட்டையில் முத்து விளைந்தது.
குன்றுடையானுக்கும் தாமரைக்கும் பொன்னர், சங்கர், தங்கம் என்ற மூவர் பிறந்தனர். தாய், தான் பட்ட துன்பங்களையும், தான் செய்த சூளுரையையும் குழந்தைகளுக்குக் கூறி, அதனை முடிக்குமாறு பணித்தாள். அவள் சூளுரையின்படி அண்ணன்மார் இருவரும் பங்காளிகளைப் பழிவாங்கினர், பெற்றோர் மறைவிற்குப் பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தாயின் சூளுரையை நிறைவேற்ற மணப்பெண்களைச் சிறை வைத்தனர். இவர்களின் தங்கை தங்கம், நற்குண மிக்கவள்; எதனையும் சிந்தித்துச் செயலாற்றக் கூடியவன்.
வேடுபடைத் தலைவன் தலையூர்க்காளி, அண்ணன்மார் நாட்டைச் சார்ந்த நன்னாட்டைத் தாக்கினான். பச்சனா முதலி மகள் குப்பாயி என்னும் பெண்ணையும் சிறையெடுத்துச் சென்றான். பொன்னர் சங்கருடன் சென்று வேடுபடையைச் சந்தித்துக் குப்பாயியைச் சிறைமீட்டு வந்தனர். வேங்கைபோல் நிற்கும் சங்கர் முன், வேடுபடை வெள்ளாட்டுக் கூட்டமாகியது. உண்மை கூறிப் பொன்னர் தட்டான் பின் போனது, சங்கர் மடிந்து களமானது, அத்தை பிள்ளை, மைத்துனர்கள், சாம்பான் ஆகிய அனைவரும் மடிந்தது ஆகிய அனைத்தும் வேதனைமிக்க நிகழ்ச்சிகளாயின. அண்ணன்மாரைத் தேடிச் செல்ல அண்ணிமார்களைத் துணைக்கழைத்தாள் தங்கம். திருமணம் என்ற சடங்கைத் தவிர எந்தவித இன்பத்தையும் அறியாத அண்ணிமார்கள் அவளுடன் செல்ல மறுத்துக் கதவைச் சாத்தித் தாளிட்டனர்.
அண்ணிமார் வரமறுக்கவே, தங்கை தனியாகக் காட்டினிடையே அண்ணன்மாரைத் தேடிப் புறப்பட்டாள். பெரியக்காண்டி அம்மன் அருள் கிட்டியது. அண்ணன்மாரைப் பார்த்து அழுது புலம்பினாள். பெரியக்காண்டி அம்மன் அவளுக்கு ஆறுதல் கூறி இறந்தவரை எழுப்பி அமரநிலை அளித்து அருள்பாலித்தாள். அதன்பின், அண்ணன்மார் தெய்வமாகி மக்கள் வழிபடும் நிலையெய்தினர். வீரப்பூர், மோழியப்பள்ளி, செம்மடை முதலிய இடங்களில் அண்ணன்மார் தெய்வமாய் நிலை பெற்றிருப்பதாக இக்கதைப் பாடல் கூறுகிறது.
அண்ணன்மார் சுவாமி கதையைப் பாடகன் உடுக்கையடித்துப் பாடுவதும், மக்கள் அதனைக் கேட்டு நெஞ்சுருகி நிற்பதும் கொங்கு நாட்டில் இன்றும் வழக்கமாக இருந்துவருகிறது. இக்கதை கி.பி. 13–ஆம் நூற்றாண்டிலோ அதற்குப் பின்னரோ நடந்ததாகக் கூறப்படுகிறது. கி.பி. 15–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிச்சன் என்னும் கவிஞர் இதனை இயற்றியதாகத் தெரிவிக்கும் குறிப்புகள் காணப்படுகின்றன. கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊராருக்கு அறிவித்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், கனவு காணல், பல்லாங்குழியாடுதல், ஊனான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்துச் சகுனம் பார்த்தல், தாம்பூலம் தரித்தல் போன்ற பல செய்திகள் இக்கதைப்பாடலில் இடம் பெற்றுள்ளன. மேலும், கொங்குநாட்டு மலைகள், ஆறுகள் பற்றிய வருணனைகளும், நாட்டுப்புறக் கலைகளும், அக்கால ஆயுதங்கள் பற்றிய செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூல் கொங்கு நாட்டாரின் விருந்தோம்பற் பண்பினைச் சிறப்புற எடுத்தியம்புகிறது. அந்நாட்டு வட்டார வழக்கினை அறிய இது பெரிதும் பயன்படுகிறது.
கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படும் நிமித்தக் கனவுகள் இந்நூலில் தீமை நிகழப் போவதைச் சுட்டிக் காட்டும் முன் அறிகுறிகளாக அமைந்துள்ளன. அண்ணன்மார் சுவாமி கதையில் பொன்னர், சங்கர், சாம்பான், அத்தை பிள்ளைகள் அனைவரும் உயிர் பெற்று எழுகின்றனர். வாழ்ந்த நாள் போதுமென்று வைகுந்தம் போய்ச் சேருகின்றனர். கதைப் பாடல்களில் இறத்தவர் உயிர் பெற்று மீண்டும் எழல் என்பது, ‘உண்மை என்றும் வெல்லும்; நீதி அழியாது’ என்பதைக் காட்டுவதற்கான உத்தியாக அமைக்கப்படுவதாகும்.
அண்ணன்மார் சுவாமி கதையைச் சக்திக்கனல் 1971–ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். அண்ணன்மார், வீரம் மானம் முதலிய நற்பண்புகளில் மேலோங்கி நின்றதால் கொங்குநாட்டு மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகின்றனர்.சு. சக்தி
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 289)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b9bdcwtp/
தமிழ்“அண்ணன்மார் சுவாமி கதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b9bdcwtp/APA
Oliyon Research. (2026). அண்ணன்மார் சுவாமி கதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b9bdcwtp/MLA
"அண்ணன்மார் சுவாமி கதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b9bdcwtp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment