அருணாசலம் பொன்னம்பலம் சர்
aruṇācalam poṉṉampalam car
கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வாழ்ந்த தமிழறிஞரும் புரவலரும் நீதிபதியுமாவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வாழ்ந்த தமிழறிஞரும் புரவலரும் நீதிபதியுமாவர். இலங்கையிலுள்ள மானிப்பாய் என்பது இவருடைய ஊர். பெற்றோர் கொழும்பில் வாழ்ந்த பொன்னம்பலம் என்பாரும் செல்லாச்சி அம்மையாரும் ஆவார்கள். சர் பொன்னம்பலம் இராமநாதன் இவர்தம் இளவல். கி.பி. 1853 இல் பிறந்த இவர் தம் கல்லூரிக் கல்வியை இராயல் கல்லூரரியிலும் முதுகலைச் கல்வியை இங்கிலாந்திலும் பெற்றார். அங்குச் சட்டக் கல்வி கற்றுப் பாரிசுடர் (Barrister) பட்டம் பெற்றார். கற்குங்கால் கல்வியில் சிறந்து விளங்கியமையால் கல்விக்குரிய உதவித் தொகைகள் கிடைத்தன. இங்கிலாந்து நாட்டில் உயர் கல்வியும் சட்டக் கல்வியும் பெற்ற இவர், தஞ்சையைச் சேர்ந்த அருட்புரானந்த தேசிகர் எனப்பட்ட இலக்கணம் இராமசாமிப்பிள்ளையிடம் தமிழும் சமய நூற்கல்வியும் பெற்றார்.
சர் அருணாசலம் பொன்னம்பலம்
இலங்கை அரசாங்கத்தில் காவல்துறை நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர்த் தலைமைப் பதிவாளராகவும், குருணாகல் என்னுமிடத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் நடுவராகவும் பணியாற்றினார். இலங்கை நிருவாகப்பணித் (Ceylon Civil Service) தேர்வில் முதன் முதலாகத் தேர்வடைந்த இலங்கையர் என்னும் சிறப்பு இவருக்கு உண்டு. இலங்கைச்சட்ட நிரூபண அவையிலும் (1906) சட்ட நிருவாக அவையிலும் (1912) உறுப்பினராக அமர்த்தப்பெற்றுச் சிறப்புறப் பணியாற்றினார்.
இலங்கைத் தேசிய காங்கிரசு தோற்றுவிக்கப் பெற்ற காலத்தில் (1919) அதன் முதல் தலைவராக விளங்கினார். இவர் அவ்வாண்டில் இலங்கையில் தொழிற்சங்கத்தை உருவாக்கித் தொழிளாளர் நலத்திற்குப் பணிபுரிந்தார். இலங்கையில் தாய்மொழிக் கல்விக்கு அடிப்படை அமைத்தவரும் இவரே. இவர் இலங்கைப் பல்கலைக் கழகம் தோன்றுதற்குப் பெரிதும் முயன்றார்; இராயல் ஆசிய சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்; இலங்கைச் சைவ பரிபாலன சபையின் முதல் தலைவராக இருந்து, அதன் வாயிலாகச் சைவசமய கருத்துகள் பரவுவதற்கு வேண்டிய தொண்டுகளை ஆற்றினார்.
இவர் ஆற்றிய பல்துறைப் பணிகளையும் பாராட்டும் வகையில் அன்றைய ஆங்கில அரசு இவருக்குச் சர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலங்கையில் பல்கலைக் கழகம் அமைவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகளைப் போற்றும் வகையில், பேராதனையில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில், இவர் பெயரால் ‘அருணாசல மண்டபம்’ என்ற ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு இவர் ஆற்றிய தொண்டினை மதித்துப் போற்றும்வகையில் இலங்கைப் பாராளுமன்றக் கட்டிட முற்றத்தில் இவர்தம் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு போற்ற வாழ்ந்த இவர் 1924–இல் காலமானார், ‘இலங்கைச் சரித்திரக் குறிப்புகள்’ என்னும் கட்டுரை எழுதிச் ‘சித்தாந்த தீபிகை’ எனப் பெயரிய இதழில் வெளியிட்டார். திருமுருகாற்றுப்படையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். புறநானூறு, திருவாசகம், திருக்கோவையார், கல்லாடம், தாயுமானவர் பாடல்கள் ஆகிய நூல்களிலிருந்து பல செய்யுள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய மொழி பெயர்ப்புகளையும் ஆங்கிலக் கட்டுரைகளையும் தொகுத்து, ஆராய்ச்சியும் மொழிபெயர்ப்பும் (Studies and Translations) எனப்பெயரிய நூலாக வெளியிட்டுள்ளனர். இவருடைய மற்றொரு நூலின் பெயர் “கீழை நாட்டு ஒளி” என்னும் (Light from the East) கருத்தில் அமைந்ததாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 816)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b8echdvr/
தமிழ்“அருணாசலம் பொன்னம்பலம் சர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b8echdvr/APA
Oliyon Research. (2026). அருணாசலம் பொன்னம்பலம் சர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b8echdvr/MLA
"அருணாசலம் பொன்னம்பலம் சர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b8echdvr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment