மகாராட்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து 85 கி.மீ. தொலைவில், பீமா நதியின் துணைநதியான கோடு (Ghod) நதியின் கரையில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூர் கல்–செப்புக்காலத்தில் (Chalolithic) பெருஞ்சிறப்புப் பெற்றிருந்தது. இங்கு ஆறுமுறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வுகளின் மூலம் தக்காணத்தின் கல்–செப்புக்காலப் பண்பாட்டை ஓரளவு அறிய முடிகிறது. அகழாய்வின் மூலம் மூன்று பண்பாட்டுக் காலங்கள் இனாம்கானில் (Inamgaon) இருந்ததாகத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். முதற்காலம் மாள்வா பண்பாடு (Malwa Culture, கி.மு. 1600–1400) என்றும், இரண்டாம் காலம் தொடக்கச் சோர்வே பண்பாடு (Early Jorwe Culture, கி.மு. 1400–1000) என்றும், மூன்றாம் காலம் கடைச் சோர்வே பண்பாடு (Late Jorwe Culture, கி.மு. 1000–700) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அகழாய்வில் 600க்கும் மேற்பட்ட வீடுகளின் அழிவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வீடுகள் மூன்று காலப் பண்பாடுகளையும் சேர்ந்தவை. பெரும்பாலான வீடுகள் மூன்றாம் பண்பாடான கடைச் சோர்வே பண்பாட்டு மக்கள் வசித்தவை. முதலாம், இரண்டாம் பண்பாட்டுக் கால வீடுகள் செவ்வக வடிவில் கட்டப்பட்டவை. இவற்றின் சுவர்கள் மூங்கில்கள் பிளந்து கட்டப்பட்டு அதன்மேல் களிமண்ணும் சாணமும் பூசப்பட்டிருந்தன. கூரைகள் கூம்பு வடிவினைக் கொண்டவை. மூன்றாம் கால பண்பாட்டு மக்கள் சிறிய வட்ட வடிவமான வீடுகளில் வசித்தனர். கைவினைஞர்களான குயவர்களும், தட்டார்களும் நகரின் மேற்கு எல்லைப் புறங்களில் வசித்தனர். இவர்கள் வசித்த வீடுகளில் பதனக்குழிகள் (Pit Silos) பல காணப்பட்டன. நகரின் மையப் பகுதியில் இருந்த வீடுகளில் நான்கு கால்களுடைய சாடிகள் கிடைத்தன. இப்பகுதியில் வசித்த மக்கள் இச்சாடிகளில் தானியங்களைச் சேமித்து வைத்தனர். ஒரு வீட்டிற்குப் பக்கத்தில் தானியச் சேமிப்புக் களஞ்சியம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட கரை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூழாங்கற்களினால் கட்டப்பட்டுச் சுண்ணாம்பு, களிமண் ஆகியவை கொண்டு பூசப்பட்டிருந்தது. இதன் நீளம் 240 மீ. அகலம் 2.25 மீ. இதற்கு இணையாக ஒரு கால்வாய் 4 மீ. அகலமும், 3.50 மீ. ஆழமும் கொண்டிருந்தது. இக்கால்வாயில் பெருவெள்ளத்தில் வரும் நீரைச் சேமித்து வைத்தனர். இந்நீர் அருகிலுள்ள நிலங்களுக்கு பயன்பட்டது. மீதமிருந்த நீர் கால்வாயின் தென்புறமாக இருந்த ஓடையின் மூலம் வெளியேற்றப்பட்டது. இங்கு வசித்த மக்கள் சோர்வே மட்கலன் எனத் தொல்லியல் அறிஞர்களால் குறிக்கப்படும் கருப்பு வண்ணம் பூசப்பட்ட சிவப்பு மட்கலன்களைப் பயன்படுத்தினர். பெரும்பாலான மட்கலன்களில் குறிப்பிடத்தக்கவை கிண்ணங்கள் ஆகும். இவை வெவ்வேறு வடிவில் செய்யப்பட்டவை. இம்மட்கலன்களைச் சுடும் சூளை ஒன்றும் இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சூளை கருங்கல்லினால் கட்டப்பட்டுச் சூளையின் அடிப்பாகம் தீ எரியும் பகுதியையும் கொண்டு விளங்கியது. இந்தச் சூளை இரண்டாம் காலப் பண்பாட்டைச் சார்ந்தது. இங்கு வாழ்ந்த கல்–செப்புக்கால மக்கள் தாய்த் தெய்வத்தை வழிபட்டனர். அகழாய்வில் தாய்த் தெய்வத்தின் உருவம் ஒன்று மண்ணால் செய்யப்பட்ட பெட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது மாபாரதத்தில் குறிக்கப்படும் விசிரா (Visira) என்னும் பெண் தெய்வமாகும். இம்மக்கள் இறப்பிற்குப் பின்பும் வாழ்வு உண்டு என்று கருதினர். இறந்தவர்களை வீட்டிற்குள் புதைத்தனர். அவர்களின் அருகில் உணவும் நீரும் மட்கலன்களில் வைத்திருந்தனர். இந்நகரத்திலிருந்த நாகரிகம் கி.மு. 700–ஆம் ஆண்டில் அழிவற்றது.