சங்க காலத்துப் புலவர்களுள் ஒருவர். குன்றநாடன் என்பது இயற்பெயராகவும், இறங்குகுடி என்பது புலவர்தம் ஊர்ப் பெயராகவும் கருதப்படுகின்றன. இவரது ஒரே பாடல் அகநானூறு 215–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்துள்ள அப்பாடல் பிரிந்து செல்லும் தலைவனைச் செலவு அழுங்குவித்துத் தோழி கூறும் பாங்கில் அமைந்துள்ளது. பாலை நிலத்தில் வேட்டுவர் தாம் தொடுத்த அம்பு குறி தவறி விடுமாயின், அதனைச் செலுத்திய தம் கைவிரலைச் சினந்து பல்லாற் கடித்துக் கொள்ளும் இயல்பு நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. தலைவன் செல்லவிருக்கும் பாலைநிலத்தே, கொடிய மறவர் அம்பு விடுதலால் இறந்துபட்ட வழிப்போவார் உடலங்களை மூடிய கற்குவியலின் மேல், ஆண் கழுகுகள் அமர்ந்து, தம் விரல் நகத்தால் இறந்தோரின் கண்களைக் குடைந்து எடுத்துச் சென்று. தம் பெண் பருந்துகளுக்கு ஊட்டும் கொடுமை மிக்க காட்சியினைப் புலவர் அப்பாடலில் அழகுறக் காட்டியுள்ளார்.