தரமான முளைப்புத் திறனுள்ள விதைகளை விதை உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து கிடைக்க வழி வகை செய்கிறது விதைச் சான்றிதழ். விதைச் சான்றிதழில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை: விதை மூலம் (seed source), வயல் ஆய்வு (field inspection), விதைப் பக்குவம் (seed processing), விதை மருந்து கலத்தல் (seed treating), விதைப் பகுப்பாய்வு (seed testing), சான்றட்டை பொருத்துதல் (tagging and sealing) ஆகியன. விதை மூலம். விதை உற்பத்தியில் இனத் தூய்மையைப் (genetic purity) பராமரிக்க, மூன்று தலைமுறை விதைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. முதலாவதாக, பயிர் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மூல விதைகள் ஆதார விதை உற்பத்திக்குப் பயன்படுகின்றன. ஆதார விதைகளிலிருந்து சான்றுரை விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சான்றுரை விதைகள், மீண்டும் ஒருமுறை விதை உற்பத்திக்கு அனுமதிக்கப்படுகின்றன. விதைச் சான்று அலுவலர் விதை மூலத்தை அறிந்த பின்னரே, வயல் ஆய்வுக்கு அனுமதி அளிக்கின்றனர். வயல் ஆய்வு. எந்த அறிவிக்கப்பட்ட வகையையும் (notified varieties) விதைச் சான்றுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். விதை சான்று வகை என்பது தானாக முன் வந்து செய்து கொள்வதாகும். விதைச் சான்று பெற விரும்புவோர், விதைச் சான்று அலுவலர்களுக்கு உரிய படிவத்தில் விதைப்பு அறிக்கையை, நிர்ணயிக்கப்பட்ட வயல் ஆய்வுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும். வயல் ஆய்வு, பயிரின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு, இனத் தூய்மை, புறத் தூய்மை (physical purity), நோயற்ற தன்மை ஆகியன கண்காணிக்கப்படும். வயல் ஆய்வு, பயிர் வகைகளுக்குத் தனித் தனியே பல்வேறு காலக் கட்டங்களில் செய்யப்படுகிறது. வயல் ஆய்வின் போது, வயல் தரம் ஆய்வு செய்யப்பட்டுச் சிறும வயல் தரம் இருந்தால் மட்டுமே, விதைச் சான்றுரைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிறும வயல் தரம் இல்லாத பயிர்கள் விதைக்கு ஒவ்வாதவை என நீக்கப்படுகின்றன. விதைப் பக்குவம். வயல் ஆய்வில் தேறிய விதைகள் உரிய காலத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதை பிரித்தெடுக்கப்பட்டு, சிறும ஈரப் பதத்திற்குக் காய வைக்கப்பட்டு, விதைப் பக்குவம் செய்யப்படுகிறது. விதைப் பக்குவம் செய்யும் போது, களை விதைகள், ஏனைய பயிர் விதைகள், தூசி, கல், நோய் பூச்சி தாக்கிய விதைகள் ஆகியன அப்புறப்படுத்தப்பட்டுச் சீரான பருமனுள்ள, நல்ல முளைப்புத் திறனுள்ள விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. விதைப் பக்குவம், அங்கீகரிக்கப்பட்ட விதைப் பக்குவ நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. விதைத் தரத்தை அறிய, அவ்வப்போது விதை மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. விதைப் பக்குவம் செய்யப்பட்ட விதைகள் பூச்சி நோய் தாக்கா வண்ணம் விதை நேர்த்தி செய்யப்படுகின்றன. விதைப் பகுப்பாய்வு. விதைப் பக்குவம் செய்த பின்னர், எடுக்கப்பட்ட விதை மாதிரி அங்கீகரிக்கப்பட்ட விதை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, ஈரப் பதம், புறத் தூய்மை, இதர பயிர் விதைகள், களை விதைகள், நோயற்ற தன்மை முதலியன சிறும விதைத் தரங்களுக்கு மேற்பட்டு உள்ளனவா என அறியப்படுகிறது. விதை ஆய்வு முடிவுகள் விதை ஆய்வாளரால் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சான்றட்டை பொருத்துதல். விதை ஆய்வு முடிவுகள் சிறும விதைத் தரங்கள் கொண்டிருப்பின், சான்றட்டைகள் பொருத்தப்படுகின்றன. புதிய கலன்களில் விதைகள் அடைக்கப்பட்டு, விதை வகைகளுக்கு ஏற்ப, சான்றட்டைகள் பொருத்தப்பட்டுக் காப்பிடப்படும். இவை அனைத்துமே விதைச் சான்றுரை அலுவலர்களின் முன்னிலையில் செய்யப்படுகின்றன. சான்றட்டைகளின் நிறம், விதை வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். ஆதார விதைகளுக்கு வெள்ளை நிற அட்டைகளும், சான்றுரை விதைகளுக்கு நீல நிற அட்டைகளும் வழங்கப்படுகின்றன. சான்றட்டைகளில் சான்றளிக்கும் நிறுவனத்தின் பெயர், உற்பத்தியாளர் முகவரி, பயிர் வகை, சிறும முளைப்புத் திறன், புறத் தூய்மை, ஏனைய பயிர் விதைகள், களை விதைகள் ஆகியவற்றின் சதவீதம், ஆய்வு செய்த நாள், காலக் கெடு ஆகியன குறிக்கப்பட்டுச் சான்றுரை அலுவலர்களால் கையொப்பமிடப்படுகிறது. இந்திய விதைச் சட்டம் பகுதி 9ன்படி விதைகளுக்குச் சான்று அளிக்கப்படுகிறது. சான்றுரையை மீளப் பெறவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சான்றுரை அலுவலர்க்கு உரிமை உண்டு. —இரா. கேசவன்