அரிதி
ariti
புத்த சமயத்தவர் வழிபடும் பெண் தெய்வம்.
புத்த சமயத்தவர் வழிபடும் பெண் தெய்வம். அரிதி வழிபாடு இந்தியா, நேபாளம், திபேத்து, சீனா, சாவகம், துருக்கி ஆகிய நாடுகளில் இன்றளவும் சிறப்புற்று விளங்குகிறது. அரிதியைப் பற்றிப் பல்வேறு கதைகள் நிலவி வருகின்றன. இவள் இராசகிருகத்தின் பாதுகாப்பாளராக இருந்த சடகிரி என்பவனின் தங்கை. இவளது உண்மைப் பெயர் அபிரதி. இவள் காந்தார நாட்டுப் பாதுகாவலனான பான்சிகா (Pansika) என்பவனை மணந்தாள். இவர்- களுக்கு 500 குழந்தைகள் பிறந்தன. அபிரதி தனது கடைசிக் குழந்தையான பிரயங்கரன் என்பவனை மிகவும் நேசித்தாள்.
இவளுக்குக் குழந்தைகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் இருந்தது. இதனால், இவள் அரிதி என அழைக்கப்பட்டாள். அரிதி என்பதற்குக் குழந்தைகளைக் திருடுகிறவள் என்பது பொருள். இதன் விளைவாக இராசகிருக மக்களிடம் அச்சம் ஏற்பட்டு எங்கும் அழுகுரல்கள் எழுந்தன. மக்கள் புத்தரிடம் சென்று தம் குறையினை முறையிட்டனர். புத்தர் அரிதியின் செல்லப் பிள்ளையான பிரியங்கரனைத் தூக்கிச் சென்று அரிதிக்குப் பாடம் புகட்டினார். தன் குழந்தைக்காக வேதனைப்பட்ட அரிதியிடம் புத்தர், தம் குழந்தைகளின் பிரிவால் வாடும் பிற பெற்றோர்களின் துயரங்களை எடுத்துக்கூறினார். அரிதி மனம்திருந்தி மனித இறைச்சி உண்ணுவதை விட்டொழித்தாள். அன்று முதல் இராசகிருகத்தைச் சார்ந்த மக்களும் புத்தரின் ஆணைப்படி அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் நல்ல உணவை அளித்து வந்தனர். இன்றும் வட இந்திய, புத்த மடாலயங்களிலும் நேபாள மடாலயங்களிலும் அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் உணவு படைக்கின்றனர். வட இந்திய, புத்த மடாலயங்களில் அரிதிக்கெனப் படையல் மேடைகள் இருந்ததாகச் சீனப் பயணி யுவான்சுவாங் என்பவரும் இட்சிங் என்பவரும் தம் குறிப்புகளில் சுட்டியுள்ளனர்.
அரிதி
சிற்பங்களில் அரிதி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டிருப்பாள். அவளது மடியில் குழந்தை ஒன்று இருக்கும். அவளைச் சுற்றிலும் 5 குழந்தைகள் இருப்பர். இவ்வைந்து குழந்தைகளும் இவளுக்கு 500 குழந்தைகள் உண்டு என்பதைக் காட்டுகின்றன. அரிதியின் ஒரு கையில் மாதுளங்கனி காணப்படும். இது இனப் பெருக்கத்தைக் குறிக்கும் அடையாளமாகும்.
சாவகத்தில் சண்டி மெந்துத்து (Chandi Mendut) என்னும் இடத்தில் காணப்படும் அரிதியின் சிற்பம் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தவண்ணம் தென்படுகிறது. திபெத்தில் காணப்படும் உருவச் சிலையில் அரிதி தாமரையில் அமர்ந்தவாறு உள்ளாள். அரிதி தன் கணவர் பான்சிகாவுடன் இருப்பது போன்றும் சிற்பங்கள் உள்ளன. இவன் குபேரப் படைத் தலைவனாவான். அசந்தா, எல்லோராக் குகைகளில் அரிதி, பான்சிகா சிற்பங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 785)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b283srva/
தமிழ்“அரிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b283srva/APA
Oliyon Research. (2026). அரிதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b283srva/MLA
"அரிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/b283srva/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment