கழிப்பறைக் கழிவுகள், இல்லங்கள், தெருக்கள் கழுவப்பட்ட நீர், தொழிற்சாலைக் கழிவு நீர், மழை நீர், தூய்மையற்ற மண் சேர்ந்த நீர் ஆகியவை சாக்கடைக் கழிவு நீர் (sewage) எனப்படும். சாக்கடைக் கழிவு நீரை முக்கியமாக நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அவை கழிப்பறைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நிலத்தடிக் கசிவு நீர்க் கழிவுகள், மழை நீர்க் கழிவுகள் ஆகும். நிலத்தின் மேற்புறம் அமைக்கப்பட்டுத் திறந்த வெளியில் சாக்கடைக் கழிவு நீரை எடுத்துச் செல்லும் பாதை, வாய்க்கால் சாக்கடைக் குழி எனப்படுகிறது. நிலத்தின் அடியில் குழாய்கள் அமைக்கப்பட்டுச் சாக்கடைக் கழிவு நீரை எடுத்துச் செல்லும் பாதை, பாதாளச் சாக்கடை அல்லது சாக்கடை எனப்படுகிறது. இச்சாக்கடைகளை இணைத்துத் தேவையான கருவிகளுடன் கட்டப்படுவது சாக்கடை அமைப்பு எனப்படும். சாக்கடைகளைச் சேகரித்து எடுத்துச் செல்லும் முறைகளை இரண்டு வகையாகச் செய்வது உண்டு. அவை ஊழியர் எடுத்துச் செல்லும் உலர் முறை, நீரினால் எடுத்துச் செல்லும் முறை என்பன. நவீன நீர் வசதிகளும், பாதாளச் சாக்கடை வசதிகளும் இல்லாத இடங்களில் கழிவறைக் கழிவுகள் வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியில் எடுத்துச் செல்லப்படும். வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், சாக்கடைத் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். பின்னர் வண்டிகள் மூலம் கழிவு அகற்றும் ஊழியர்களால் அப்புறப்படுத்தப்படும். இரண்டாம் வகையில் நீர் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு, திண்மக் கழிவுப் பொருள்கள் கழிவு நீரில் கரைக்கப்பட்டு 99%க்கு மேல் நீராகவே எடுத்துச் செல்லப்படும். இம்முறையில் மிகுந்த நீர் செல்வதால் நீரியல் விதிகளுக்குட்பட்டுச் செயல்படக் கூடியது. வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் வகையே பயன்படுகிறது. உலர் முறையில் பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கழிப்பறைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் ஊழியருக்கு நலவாழ்வுக் குறைவு ஏற்படக் கூடும்; கழிவறைக் கழிவுகள் சேமிக்கப்படும் இடங்கள் கெடுநாற்றத்தை உண்டாக்கும். கழிவறைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் போது வீதிகளும், மக்கள் பயன்படுத்தும் இடங்களும் தூய்மை இழக்கும். கவனமின்றி, முறையற்ற வகையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டால் நோய் பெருகும் தீமை உண்டு. கழிவு நீர்த் தொட்டிகள் திறந்த வெளியில் இருப்பதால் தூய்மைக் கேடு ஏற்படலாம். நீர் எடுத்துச் செல்லும் முறையால் பல நன்மைகள் உண்டு. முழுதும் மூடப்பட்ட குழாய்கள் தூய்மை உடையன. இவை, அருவெறுப்பு ஏற்படுத்தா வண்ணம் சிறந்த முறையில் இயங்கக் கூடியவையாக உள்ளன. இறுதியாக வெளியேற்று முன்பு தூய்மைப் படுத்தப்படுவதால், நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதன் மூலம் மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படுகிறது. குழாய்களை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் மிகுந்த செலவானாலும், நகரத்தின் நலவாழ்வு நிலைக்கும், மக்களின் பொது நலத்திற்கும் குழாய்கள் மிகவும் இன்றியமையாதவை. சாக்கடைக் குழாய்கள் பயன்படும் பணிகள், இடங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அவை பல வகைப் பெயர்களில் குறிப்பிடப்படும். துப்புரவுச் சாக்கடை எனப்படுவது இல்லங்களிலிருந்து கழிவுகளை எடுத்துச் செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். தனிப்பட்ட சாக்கடை எனப்படுவது இல்லக் கழிவுகளும், கோடைக் காலத்தில் சாதாரணமாகச் செல்லக் கூடிய கழிவு நீரும் இணைந்து செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். ஒருங்கிணைந்த சாக்கடை எனப்படுவது இல்லக் கழிவுகளுடன் மழை நீரையும் சேர்த்து எடுத்துச் செல்லக் கூடிய சாக்கடைக் குழாய் ஆகும். வீட்டுச் சாக்கடை எனப்படுவது இல்லங்களிலிருந்து வீதி சாக்கடைக்கு எடுத்துச் செல்லும் சாக்கடைக் குழாய் ஆகும். பக்கவாட்டுச் சாக்கடை எனப்படுவது நேரிடையாக இல்லங்களிலோ, வீதிகளிலோ கழிவு நீர் பெறும் சாக்கடைக் குழாய் ஆகும். முக்கிய துணைச் சாக்கடை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கவாட்டுச் சாக்கடைகளிலிருந்து கழிவு நீர் பெறும் சாக்கடைக் குழாய் ஆகும். முக்கிய சாக்கடை எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய துணைச் சாக்கடைக் குழாய்களிலிருந்து கழிவு நீர் பெறும் குழாய் ஆகும். குறுக்கீட்டுச் சாக்கடை எனப்படுவது பல தனிப்பட்ட சாக்கடைகளை இணைத்துப் பெறப்படும் கழிவு நீர், ஒரு தனிக் குழாயில் எடுத்துச் செல்லப்பட்டுத் தேவையான இடத்தில் மிகப் பெரிய சாக்கடையுடன் இணைக்கப்படுவதாகும். வெளியேறும் சாக்கடை எனப்படுவது சேகரிக்கப்பட்ட கழிவு நீரை இறுதியாக வெளியேற்றும் சாக்கடைக் குழாய் ஆகும். பெரிய சாக்கடை அமைப்புகளை ஒருங்கிணைந்த அமைப்பு, தனிப்பட்ட அமைப்பு, ஓரளவு தனிப்பட்ட அமைப்பு என மூவகைப்படுத்தலாம். ஒருங்கிணைந்த அமைப்பு, பெரிய சாக்கடையாகவும் அனைத்துக் கழிவு நீரையும் எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கும். தனிப்பட்ட அமைப்பில் இல்லக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் ஒரு தனிச் சாக்கடைக் குழாய் மூலமாகவும், மழைக் காலக் கழிவு நீர் ஏனைய கழிவு நீர், ஒரு தனிச் சாக்கடைக் குழாய் மூலமாகவும் எடுத்துச் செல்லும் அமைப்பாக இருக்கும். ஓரளவு தனிப்பட்ட, சற்று விரிவுபடுத்தப்பட்ட அமைப்பு, மழைக் காலக் கூரைக் கழிவு நீர் தரையிலிருந்து வந்து சேரும் கழிவு நீர் ஆகியவற்றையும் சேர்ந்து எடுத்துச் செல்லும் அமைப்பாக இருக்கும். படம் 1. வலிவூட்டப்பட்ட வட்ட வடிவ நெகிழிக் குழாய் தனிப்பட்ட அமைப்பு, கீழ்க்காணும் இடங்களில் மிகப் பொருத்தமான அமைப்பாக இருக்கும். மழை சீராக விழாத இடங்கள், மழை நீர், ஏனைய கழிவு நீர் செல்ல முன்னரே சாக்கடை உள்ள இடங்கள், இறைப்பான்கள் (lift), இல்லக் கழிவுகளை வெளியேற்றும் எக்கி (pump) உள்ள இடங்கள், தாழ்வான இடங்கள் முதலியவையாகும். தனிப்பட்ட அமைப்பு முறை சிக்கனமானது; வடிவமைப்புச் செய்ய எளிது; குப்பைகளால் அடைப்பு ஏற்படாதது; குறைந்த அளவே இருப்பதால் தூய்மைப்படுத்துவதும், வெளியேற்றுவதும் எளிது; இந்த அமைப்பு முறையைச் சரிவு இல்லாவிடில் அமைக்க முடியாது. ஏனெனில் கழிவு நீர் தானாக ஓடும் வகையில் சரிவாகக் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். பழுது ஏற்பட்டால், கவனமாகச் சீர்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு முறையில் மழை நீர் மிகுதியாகச் செல்லும் போது அதுவே தூய்மைப்படுத்தி விடும்; தூய்மைப்படுத்தும் செலவு குறைவு; மிகப் பெரிய அளவில் இருப்பதால் சீர் செய்யும் பணிக்கு வசதியாக இருக்கும்; இம்முறையை அமைக்கும் போது மிகப் பெரிய அளவில் குழிகள் வெட்ட வேண்டி யிருக்கும். பெரிய அளவில் இருப்பதால் சகதியும், சேறும் தங்கிக் கழிவு நீர் செல்லும் திசை வேகத்தைக் குறைக்கும்; பழுதடையும் போது மக்கள் பொது நலம் பெரிதும் பாதிப்படையும். ஓரளவு தனிப்பட்ட முறை பெரும்பாலும் சிக்கனமானது; தேவையான போது மழை நீரும் எடுத்துச் செல்லக் கூடியது; சேறு தங்காதது. திசை வேகம் குறைவாகத் தரக் கூடியது. இடையிடையே மழை நீர் செல்லாவிடில், தூய்மை அடையாது. சாக்கடை வடிவமைப்பின் போது கீழ்க் காண்பவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாக்கடையின் அளவை முடிவு செய்ய மொத்தக் கழிவு நீர் அளவைக் கணக்கிட வேண்டும். அதற்கு அவ்விடத்தில் வசிக்கும் மக்கள் தொகையையும், அவர்கள் மூலம் உருவாகும் கழிவு நீரின் அளவையும் கணக்கிட வேண்டும். மேலும் எதிர் கால விரிவாக்கத்திற்கும் சேர்த்துக் கணக்கிட வேண்டும். கழிவு நீர் ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் எனக் குறிப்பிடப்படும். கழிவு நீரின் மொத்த அளவு, மக்கள் தொகை. கழிவு நீர் பெறப்படும் இடங்களின் நிலை, குடி நீர்ப் பங்கீடு, நிலத்தடியில் கசிந்து செல்லும் நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். மக்கள் தொகை கணக்கிடும் போது குடிநீர்ப் பங்கீட்டிற்குக் கணக்கிடும் முறையை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். கழிவு நீர் பெறப்படும் இடங்களின் நிலையைக் கணக்கிடும் போது வசிப்பிடங்கள், தொழிற்சாலைகள், வணிகம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றைத் தனித்தனியே கணக்கிட வேண்டும். பொதுவாக, குடிநீர்ப் பங்கீட்டிற்குத் தரப்படும் நீரை, கழிவு நீர் அளவிற்குச் சமமாகக் கருதுவதுண்டு. நிலத்தடியில் கசிந்து செல்லும் நீரின் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு இத்தனை லிட்டர் என்னும் அளவில் குறிக்கப்படும். அது நிலத்தின் வகை, நிலத்தடி நீரோட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்துக் கணக்கிடப்படும். படம் 2. தூண்களால் தாங்கப்பட்ட சாக்கடைக் குழாய்கள் சாக்கடைப் பாய்வு, நீரியல் முறைக்குக் கணக்கிடுவது போலவே கணக்கிடப்படும். அதற்குப் பயன்படும் வாய்பாடே இதற்கும் பயன்படும். சாக்கடைப் பாய்வு, திசை வேகம், கன அளவு முதலியவற்றைக் கணக்கிட, செஸ்ஸி, மேனிங், கட்டர், கிரிம்ப் மற்றும் பர்கஸ், காசன் வில்லியம் வாய்பாடுகள் பயன்படுகின்றன. செஸ்ஸி வாய்ப்பாடு திசைவேகம் = =c\sqrt{mi} c—மாறி; சொரசொரப்புத் தன்மையைப் பொறுத்தது m—சராசரி நீர் ஆழம் i—நீர் புறச் சரிவு கட்டர் வாய்ப்பாடு c=\frac{23+\frac{1}{n}+\frac{0.00155}{i{1+(23+\frac{0.00155}{i})\frac{n}{\sqrt{m} n—நீர் செல்லும் பரப்பின் சொரசொரப்புத் தன்மைக் குணகம் மேனிங் வாய்ப்பாடு திசை வேகம்=\frac{1}{n}m^\frac{2}{3}i^\frac{1}{2} கிரிம்ப் மற்றும் பாக்ஸ் வாய்ப்பாடு திசை வேகம்=83.5m^\frac{2}{3}i^\frac{1}{2} காசன் வில்லியம் வாய்ப்பாடு திசை வேகம்=0.85 c m^{0.63}i^{0.54} சாக்கடையில் செல்லும் கழிவு நீரின் திசை வேகம் மிகக் குறைந்த அளவு, நொடிக்கு 0.6 மீட்டரும், மிக அதிக அளவு நொடிக்கு 2.25 மீட்டரும் இருக்க வேண்டும். நிலத்தின் சரிவு, கழிவு நீரின் திசை வேகம், சாக்கடைக் குழாயின் விட்டம், கழிவு நீரின் மொத்த அளவு ஆகியவற்றைப் பொறுத்துச் சாக்கடைக் குழாயின் சரிவு மாறுபடக் கூடும். சாக்கடைக் குழாயின் குறுக்கு வெட்டுப் பரப்பு, கழிவு நீர்ப் பாய்வு, கட்டுமானத்தின் நிலைப்புத் தன்மை, செலவு, இயக்கம், பராமரிப்பு, உள் அழுத்தம், வெளி அழுத்தம், தேய்மானம் மற்றும் அரிப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். குறுக்கு வெட்டுப் பரப்பு வட்டம், செவ்வகம், முட்டை வடிவம், அரை நீள் வட்டம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்படும். பொதுவாக வடிவம் அமைக்கப்படும் போது, அளவைக் கருத்தில் கொண்டு இரு மடங்கு இடம்இருப்பது போல் அமைக்க வேண்டும். வரைபடங்கள் மூலம் அனைத்துக் கணக்கீடுகளையும் இணைத்துத் தேவையான இட வசதியைக் கண்டறிய வேண்டும். ஒன்றிற்கு ஒன்று உள்ள விகித முறைகளைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். திசை வேகம் சீராகப் பராமரிக்கப்பட வேண்டும். படம் 3. சாக்கடை இணைப்புகளின் வெட்டுமுகம் சாக்கடைக் குழாய்களில் தீமை விளைவிக்கக் கூடிய நச்சு வளிமங்கள் சேர்ந்து விடாமல் இருக்க, காற்று வெளியேற்றும் குழாய்களைப் பொருத்து அழுத்தம் குழாயினுள் குறையும்; விபத்துகள் தவிர்க்கப்படும்; சாக்கடைக் குழாயினுள் உள்ள கெட்ட வளிமங்கள் வெளியேற, தூண் போன்ற நீண்ட உயரமான குழாய்களைப் பயன்படுத்தலாம்; இடையிடையே சாக்கடை மூடிகளைப் போட்டு அவற்றில் துளைகள் ஏற்படுத்தி வைக்கலாம்; இடையில், வெளியேற்றும் திறந்த வெளிக் குழாய் இணைப்புகளைப் பொருத்தலாம்; தேவையான இடங்களில் காற்று வெளியேற்றும் காற்றாடிகளையும் வீடுகளுக்கு அருகில் காற்று வெளியேற்றும் குழாய்களையும் பொருத்தலாம். ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி. E.W. Steel and Terence J. McGhee, Water Supply and Sewerage, Fifth Edition, Mc- Graw-Hill International Book Company, London, 1981.