தொன்மைச் சிறப்புமிக்க வடமொழி வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நான்காகும். அவற்றின் பொருளை நன்குணர்ந்து பயில்வதற்குத் துணைபுரிவனவாக அமைந்தன அங்கங்கள் என்று கூறப்படும். அவை, சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என்பதாகும். வேதாங்கம் எனவும் ஆறங்கம் (சடாங்கம்) எனவும் அவை குறிப்பிடப்படுகின்றன. வேதப் பொருளை நன்குணர இந்த ஆறு அங்கங்களுக்கும் வேறாக, மேலும் நான்கு அங்கங்கள் கொள்ளப்படுகின்றன. அவை மீமாஞ்சை, நியாயம், புராணம், மிருதி என்பனவாகும். வேதப் பயிற்சிக்குத் துணை அங்கங்களாக இவை அமைவதனால் இவை உபாங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றின் துணையின்றி வேதங்களுக்குப் பொருள் காண முற்படுவது தக்கதன்று; தவறாகவும் கூடும்.