செசெக்கித் தட்டு கடலிலும், நன்னீர் நிலைகளிலும் ஒளி ஊடுருவலைக் கணிக்க, இன்றும் பயன்படும் ஓர் எளிய கருவியே செக்கித் தட்டு ஆகும். நிலத்தைப் போன்றே, நீரிலும் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குக் கதிரவன் உச்சியிலிருக்கும் போது, ஒளிக் கதிர்கள் நேராக அதிக ஆழத்திற்கு ஊடுருவிச் செல்லும். கதிரவன் கிழக்கு அல்லது மேற்குப் பக்கமாக உள்ள போது, ஒளிக் கதிர்கள் சாய்வாக ஊடுருவுவதால், அவை அதிக ஆழம் செல்வதில்லை. எனவே, தாவரங்கள் நீரின் மேல் மட்டத்திலிருந்து ஏறக் குறைய, 60–100 மீ. ஆழம் வரையே பரவியுள்ளன. நீரினுள் பல வண்ணக் கதிர்கள் ஊடுருவும் ஆழத்தைக் கணக்கிட, இப்போது ஒளி மின்கலங்களைக் கொண்ட கருவிகள் உள்ளன. ஆனால், தொடக்க காலத்தில் ஓர் எளிய கருவியான செக்கித் தட்டு பயன் பட்டது. இப்போதும், அது சில இடங்களில் பயன்படுகிறது. பியட்ரோ என்ஜெலோ செக்கி என்னும் இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியாரின் பெயர் கொண்ட செக்கித் தட்டு, தற்போது 20 செ.மீ. விட்டத்துடன், வார்ப்பு இரும்பினால் ஆக்கப்பட்ட வட்ட வடிவமாக உள்ளது. இதன் மேற்புறம் நான்கு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு எதிர்ப் பகுதிகள் வெள்ளையாகவும், எஞ்சிய இரண்டு பகுதிகள் கறுப்பாகவும் பூசப்பட்டிருக்கும். இத்தட்டின் மையத்தில் ஒரு வளையமும், நீளத்தைக் குறிக்கக் கயிறும் பிணைக்கப்பட்டிருக்கும். நீரினுள் எளிதில் மூழ்கும் பொருட்டும், நீரோட்டம் அலைக்கழிக்காதவாறும், இதன் அடிப்புறத்தில் ஒரு கனமாக உருண்டை இணைக்கப்பட்டிருக்கும். செக்கித் தட்டுடன் இணைந்த அளவு கோடுடைய கயிறு, நீரில் கீழ் நோக்கிச் செல்லும் போது, அது பார்வையிலிருந்து மறையும் ஆழத்தையும், மீண்டும் மேலுக்குக் கொணரும் போது, பார்வைக்குத் தோன்றும் ஆழத்தையும் சேர்த்து இரண்டால் வகுத்து வரும் ஆழமே ஒளி ஊடுருவல் ஆழமாகக் கருதப் படும். மேலும், ஒரே இடத்தில் வெவ்வேறான நேரங்களில் ஏற்படும் மாறுபாடுகளையும் செக்கித் தட்டினால் அறியக் கூடும். இது ஒரு சிறந்த கருவியாகக் கருதப்படவில்லை. பார்வைக்குத் தோன்றி மறையும் ஆழத்தையே செக்கித் தட்டினால் அளவிட முடியும். அந்த ஆழத்தை உண்மையான ஒளி ஊடுருவல் ஆழம் எனக் கருத முடியாது. ஏனெனில், மனிதருக்குள் பார்வையின் தன்மையில் வேறுபாடு தோன்றக் கூடும். ஒரே இடத்தில் இருவர் எடுக்கும். அளவில் கூட வேறுபாட்டைக் காண முடியும். செக்கித் தட்டைப் பயன்படுத்துவதில் சில பொதுவான வழி முறைகளைக் கையாள வேண்டும். வானம் தெளிவாக உள்ள போதும், கதிரவனை மேகங்கள் சூழ்ந்திராத போதும், கதிரவன் நேர் உச்சியிலிருக்கும் போதும், சிறிய படகிலிருந்து 1 மீ. உயரத்திலிருந்தும், காற்றினால் நீரில் அசைவுகள் இல்லாத போதும் செக்கித் தட்டைக் கையாளுதல் வேண்டும். <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->