இறையிலி
iṟaiyili
இறையிலி என்பது வரி நீக்கம் செய்யப் பெற்ற நிலங்களைக் குறிக்கும்.
இறையிலி என்பது வரி நீக்கம் செய்யப் பெற்ற நிலங்களைக் குறிக்கும். இவ்வகை நிலங்கள் யாவும் கோயில்கள், மடங்கள், அறநிலையங்கள், மருத்துவச் சாலைகள் போன்றவற்றிற்குக் கொடையாக வழங்கப் பட்டவையாகும். சில காலங்களில் அரசு அலுவலர்களுக்கு ஊதியத்திற்குப் பதிலாக வழங்கப்பட்ட நிலமும், கோயிற் பணியாளர்கள், தேவரடியார்கள், நாட்டிய, இசைக் கலைஞர்கள் தேவார ஓதுவார்கள் போன்ற பல பிரிவினர்களுக்கும் வரிநீக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட நிலமும் இறையிலி எனப்பட்டது.
கோயில்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களுள் தேவதானம் என்பது சிவன்கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தையும், திருவிடையாட்டம் என்பது திருமால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும், பள்ளிச் சந்தம் என்பது சமண, பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் குறிக்கும், மடங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் மடப்புறம் எனவும், அந்தணர்கள், சிவனடியார்கள் போன்றோர்க்கு உணவளிக்கும் அறச்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் சாலாபோகம் எனவும் பெயர் பெற்றன. இறையிலியாக நிலம் பெற்றவர்கள் அரசனுக்கோ ஊர்ச்சபைகளுக்கோ எவ்வித வரியும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், இவர்களிடமிருந்தும், ‘இறையிலிக்காக’ என்னும் சிறுவரி ஒன்றை அரசு வசூலித்தது என்பதைச் சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றறன.
அரசர், அரசியல் தலைவர், ஊர்ச்சபையார் தவிர பிற தனிப்பட்ட செல்வர்கள் தானமாக வழங்கும் நிலங்களுக்கு இறை உண்டு. இத்தகைய செல்வர்களிடம் அரசிறை செலுத்துவதற்காக ஊர்ச் சபையார் முதற்பொருள் பெற்று அதில் வரும் வட்டியைக் கொண்டு ஆண்டு தோறும் சபையோரே இறை செலுத்துவர். இங்ஙனம் சபையாரால் பெறப்படுவது இறைகாவல் எனப்படும். தேவதான, பிரமதேய நிலங்களுக்குப் பொதுமக்கள் தம் ஊரில் தமக்கு உரிய பங்கின்படி அரசிறை செலுத்துவதாக ஒத்துக் கொண்டு ஆண்டு தோறும் செலுத்தி வருதல் உண்டு. இத்தகைய தேவதான, பிரமதேய நிலங்கள் ‘ஊர்க்கீழ் இறையிலி’ என்று கூறப்பட்டு வந்தன. சொ.சா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 544)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as7kg8av/
தமிழ்“இறையிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/as7kg8av/APA
Oliyon Research. (2026). இறையிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as7kg8av/MLA
"இறையிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/as7kg8av/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment