மேவாரை ஆண்ட வலிமை வாய்ந்த மன்னர்; 84 கோட்டைகளைக் கட்டியவர். இவர் மாளவத்திலிருந்து படையெடுத்த இசுலாமிய அரசர்களை எதிர்த்து அஞ்சாமல் போரிட்டார்; தலைசிறந்த போர்வீரர்; சிறந்த கவிஞர்; இலக்கிய அறிஞர்; திறமை வாய்ந்த இசைக் கலைஞர். கும்பால்கர் (Kumbhalgarh) என்னும் கோட்டை இவர் கட்டிய கோட்டைகளுள் சிறப்பானதெனக் கருதப்படுகிறது. இராணுவக் கட்டடக் கலை அமைப்பிற்கு இது முதன்மையான எடுத்துக்காட்டாகும். இவர் பல போர்களில் வெற்றி கண்டவர். மேவார் இராச்சியம் இவர் காலத்தில் பெருநிலை எய்தியது. மாளவத்தை ஆண்ட இசுலாமிய மன்னன் மாமூதும், கூர்ச்சர மன்னனும் இணைந்து இராணா கும்பாவின் தலைநகரான சித்தூரைத் தாக்கினர். ஆனால், வெற்றி வீரரான கும்பாவே வென்றார். மாமூது சிறைபிடிக்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாதங்கள் சித்தூரில் வாடினான். பின்னர் அவன் விடுதலையானான். தாம் பெற்ற வெற்றியின் அடையாளமாக இராணா கும்பா சித்தூரில் அழகான வெற்றித் தூண் ஒன்றினை நிறுத்தினார். அதனை இன்றும் சித்தூரில் காணலாம். மாமூதும் கும்பாவும் இறுதியில் நண்பர்களாயினர் என்றும் சில வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். வடநாட்டில் கிருட்டிண பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மீராபாய் இவர்தம் துணைவியாரே என்பது ஒரு சிலரின் கருத்தாகும். இக்கூற்றை ஏற்றுக்கொள்ளாதவர்கள், மீராபாய் போசராசு என்பாரை மணந்தாரென்றும், ஆனால் போசராசு இளம் வயதிலேயே காலமானபோது இந்த அம்மையார் கிருட்டிணபக்தியில் மூழ்கி, கிருட்டிணன் மீது உள்ளத்தை உருக்கும் பாடல்களைப் பாடினார் என்றும் கூறுவர். இராணா கும்பாவின் ஆட்சிக்காலம் கட்டடக் கலையின் பொற்காலமாகும். இவர் கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் போன்றவற்றைப் பெருமளவில் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் கீர்த்திதம்பம் எனப்படும் வெற்றித் தூண். இத்தூண் இந்தியாவின் தலைசிறந்த தூபிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிவப்பு மணற் கற்களாலும் வெண்ணிறப் பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இந்து சமய ஆண், பெண் தெய்வ வடிவங்களும் அவை ஒவ்வொன்றின் கீழ்க் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்து தெய்வ உருவ வடிவுக் கலையியலின் பாட நூலெனக் கொள்ளலாம். இத்தூண் கி.பி. 1442க்கும் 1449க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. சமண தீர்த்தங்கரர் ஆதிநாதரின் நினைவாகச் சித்தூரில் பிறிதொரு தூபியும் இராணா கும்பாவினால் கட்டப்பட்டது. கும்பாவின் கருவூலத்தலைவரான பண்டாரி பேலா என்பார் சிருங்கார சௌரி என்னும் கோயிலைச் சமண தீர்த்தங்கரர் சாந்திநாதரின் நினைவாகக் கட்டினார். இராணா கும்பா ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தம் மகனாலேயே கி.பி. 1469–ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.