சிறகிறகு, வானூர்தி
ciṟakiṟaku, vāṉūrti
வானூர்தியின் பறப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஊர்தியின் இரு புறச் சிறகுகளிலும் தனித் தனியாக நகர்த்தக் கூடிய சிறகின் பின்புறம் கீலிடப்பட்ட சிறு பகுதியே சிறகிறகு (aileron) எனப்படும்.
வானூர்தியின் பறப்பைக் கட்டுப்படுத்துவதற்காக ஊர்தியின் இரு புறச் சிறகுகளிலும் தனித் தனியாக நகர்த்தக் கூடிய சிறகின் பின்புறம் கீலிடப்பட்ட சிறு பகுதியே சிறகிறகு (aileron) எனப்படும். சிறகிறகின் கோண நிலை தானியங்கி அல்லது விமான ஓட்டியின் மூலம் மாற்றப்படுகிறது. சில சிறகிறகுகள் ஒரே நீள் தகடாக இருக்கும்; வேறு சில சிறு சிறு துண்டுகளாக இணைக்கப்பட்டிருக்கும்.
இயங்கு தத்துவம். சிறகிறகின் தத்துவம் ஏனைய கீலிடப்பட்ட பின்பகுதிக் கருவிகளின் தத்துவத்தையே ஒத்துள்ளது. சிறகிறகின் விலக்கம் (நகர்வு) காற்றைப் பொறுத்த வரை, சிறகிறகிற்கு முன்புறமுள்ள சிறகுப் பகுதிகளின் வளைதோற்றத்தை முழுமையாக மாற்றி விடுகிறது. சிறகிறகு மேல் நோக்கி நகர்த்தப்படும் போது, சிறகின் மேற்புறம் காற்றின் வேகம் குறைந்து கீழ்ப்புறம் அதிகரிக்கிறது. பெர்னோலி தத்துவப்படி இந்தக் காற்று வேகமாற்றம் சிறகிறகிலும், அதற்கு முன்புறமாக உள்ள சிறகின் பரப்பிலும், ஏற்றத்தைப் பெருமளவில் குறைக்கிறது. இதே தத்துவப்படி சிறகிறகு கீழ் நோக்கி நகர்த்தப்பட்டால், சிறகின் கீழ்ப் பரப்பில் ஏற்றம் அதிகரிக்கிறது. இவ்வாறு சிறகின் வெவ்வேறு பகுதிகளில் உருவாக்கப்படும் வெவ்வேறு வகையான ஏற்றத்தின் பொருண்மைப் பகுப்பை அதிகரிக்கும் பொருட்டுச் சிறகிறகுகள் சிறகின் நுனிப் புறமாகவே (கட்டகத்திலிருந்து விலக்கி) வைக்கப்படுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சிறுசிறு துண்டுகளாக அமைக்கப்பட்ட சிறகிறகில் ஏதேனும் ஒரு புறம் (இடப்புறம்) சிறகிறகு மேல் நோக்கி நகர்த்தப்பட்டு, மறு புறச் சிறகிறகு (வலப் புறம்) கீழ் நோக்கி அதே அளவு நகர்த்தப்பட்டால், இடப் புறச் சிறகில் உருவான ஏற்றக் குறைவும் வலப் புறச் சிறகில் உருவான ஏற்ற அதிகரிப்பும் ஒன்றையொன்று சமப்படுத்தி விடும். முழுமையான சிறகின் மொத்த ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் கட்டக அச்சில் விமானத்தைச் சுழற்றக் கூடிய ஒரு சுழல் விசை உருவாகிறது. இதன் நிகழ்வைப் படத்தில் காணலாம்.
சிறகிறகுகள் சிறகின் பரப்பில் ஒலியின் வேகத்தில் அழுத்தத்தை (ஏற்றத்தை) அதிகரிக்கின்றன. காற்று நகர்வு வேகம் ஒலி வேகத்தை விட அதிகரித்தால், அழுத்தத்தைப் பரப்பச் சிறகிறகுகளால் முடிவதில்லை. எனவே, மீஒலிவேக விமானங்களில் சிறகிறகுகளின் பயன்பாடு குறைந்து விடுகிறது.
பறப்புத் திசை மாற்றங்கள். உருளல் மற்றும் கரையிடல் நிகழ்த்த, சிறகிறகுகள் பயன்படுகின்றன. ஒரு சிறகு கீழ் நோக்கியும் மறு சிறகு மேல் நோக்கியும் அமைந்து நிகழ்த்தப்படுகிற கரையிட்டுத் திரும்புதல் விமானத்தின் திசையை மாற்றப் பயன்படுகிறது. மேலும், காற்றியங்கு நிலை மாற்றம், கிடைநிலை நிலை மாற்றம், தள்ளு விசை மாற்றம் போன்றவற்றால் நிகழும் தடுமாற்றத்தைப் போக்கவும், காற்றுத் திசைக்குக் குறுக்காக நிகழ்த்தப்படும் எழுதல், இறங்கல் போன்றவற்றை நன்றாக நிகழ்த்தவும் சிறகிறகுகள் பயன்படுகின்றன.
சிறு துண்டுகளாலான சிறகிறகு. சிறகிறகை ஒரே நீள் தகடாக அமைப்பதை விடப் பல சிறு துண்டுகளாக அமைத்தல், பல நன்மைகளை உருவாக்குகிறது. சிறகின் முழு நீளத்திற்கும் சிறகிறகை அமைப்பதால், எழுதல், இறங்கல் ஆகியவற்றை மிகக் குறைந்த வேகத்திலேயே நிகழ்த்த முடியும்.
சிறு சிறு துண்டுகளாக இருப்பதால், காற்றுத் திசைக் கோட்டிற்கேற்ப, ஏதேனும் ஒரு சிறகிறகுத் துண்டை மட்டும் உயர்த்தவோ, தாழ்த்தவோ முடிவதால், சிறகில் உருவாகும் முறுக்கு விசை பெரிதும் குறைகிறது. எனவே, மீஒலிவேக விமானங்களிலும் இவ்வகைச் சிறகிறகுகளை நன்முறையில் பயன்படுத்த முடிகிறது. —வயி. அண்ணாமலை நூலோதி. Baumeister, A. Avallone and Baumeister III, Marks standard Hand book for Mechanical Engineers, Eighth Edition, McGraw—Hill Book Company, New York, 1978.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 315)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/apgkapd9/
தமிழ்“சிறகிறகு, வானூர்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/apgkapd9/APA
Oliyon Research. (2026). சிறகிறகு, வானூர்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/apgkapd9/MLA
"சிறகிறகு, வானூர்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/apgkapd9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment