இலக்கிய நடை
ilakkiya naṭai
நீண்டகாலமாக எழுத்து வழக்கில் உள்ள மொழிகளில் பொதுவாக இலக்கிய நடை என்ற ஒன்றும், மனைச்சூழல் நடை என்ற வேறொன்றும் காணப்படுகின்றன.
நீண்டகாலமாக எழுத்து வழக்கில் உள்ள மொழிகளில் பொதுவாக இலக்கிய நடை என்ற ஒன்றும், மனைச்சூழல் நடை என்ற வேறொன்றும் காணப்படுகின்றன. எழுத்து வழக்கு அற்ற மொழிகளில் இந்த நடை வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படுவதில்லை.
எழுத்து வழக்கினைப் பெற்று விளங்கும் பெரும்பாலான மொழிகளில் மனைச்சூழல் நடை (Informal style) பேச்சு மொழியிலும் இலக்கிய நடை (Formal style) எழுத்து மொழியிலும் இடம் பெறுகின்றன. எழுதப் படிக்க நாம் பயன்படுத்தும் மொழிநடையை இலக்கியநடை எனலாம். ஒவ்வொரு துறையிலும் நூல்கள் எழுதப் பெறுவது பொதுவாக இந்த நடையில்தான். இலக்கியநடை, பெரும்பாலும் படித்தவர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது.
மனைச்சூழல் நடை படிக்காதவர்கள், படித்தவர்கள் ஆகிய இருசாராராலும் பயன்படுத்தப்படுகிறது. மனைச்சூழல் நடை நெருக்கமானவர்கள், அயலார்கள் என எல்லோருடனும் உரையாடுவதற்காகப் பேச்சு மொழியில் அமைந்த ஒன்றாகும். படித்தவர்களது மனைச்சூழல் நடை படிக்காதவர்களுடைய மனைச்சூழல் நடையிலிருந்து வேறுபட்டுக் காணப்படும். படிக்காதவர்தம் மனைச்சூழல் நடை வட்டார, சமூகக் கிளைமொழிக் கூறுகளை மிகுதியும் தாங்கிக் கொச்சையாகக் காணப்படலாம்.
தமிழ், சிங்களம், அரேபியம், கிரேக்கம் போன்ற இருநிலை மொழிகளில் (Diglossic Languages), இலக்கியநடை, மனச்சூழல் நடை ஆகியவற்றிற்கிடையே காணக்கிடக்கும் வேறுபாடுகள், மற்ற இருநிலை அல்லாத மொழிகளில் (Non Diglossic Languages) உள்ள வேறுபாடுகளைவிட மிகுந்தே காணப்படுகின்றன. இருநிலை மொழிகளில் இந்நடை வேறுபாடு பொதுவாகச் சொல்வடிவம், உருபனியல் நிலை, தொடரியல் நிலை எனப் பல்வேறு மொழிநிலைகளில் காணப்படுகிறது.
இலக்கியநடை பல மொழிகளில் சில சமூகச் சூழல்களுக்கு மட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. இருநிலை மொழியான தமிழில் உள்ள இலக்கிய நடை கல்வி கற்க, நூல் எழுத மாத்திரமல்லாமல் வேறு சில சமூகச் சூழல்களான அரசியல் இலக்கிய மேடைச் சொற்பொழிவு, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகள் (Announcements), வரலாற்றுக் கதை கொண்ட திரைப்படம், நாடகம் ஆகியவற்றிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. வி.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 291)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/anefcqgv/
தமிழ்“இலக்கிய நடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/anefcqgv/APA
Oliyon Research. (2026). இலக்கிய நடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/anefcqgv/MLA
"இலக்கிய நடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/anefcqgv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment