இராபாத்து என்பது வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் தலைநகரம். இந்த நகரம் அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சிப்ரால்டர் நீர்ப் பிரிவிலிருந்து ஏறத்தாழ 274 கி.மீ. தெற்காக ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ளது. இதன் தென்பக்கத்தில் உள்ள சலே (Sale) என்னும் நகரத்தை நோக்கியுள்ளது இது. காசாபிளாங்கா (Casablanca) என்னும் ஊர் இந்நகரத்திற்கு 97 கி.மீ. தென்மேற்கில் உள்ளது. இராபாத்து (Rabat) இராபாத்து (Rabat) மொராக்கோ மன்னரின் அரசாங்கத் தலைநகரமாகவும், தேசிய சட்டமன்றம் கூடும் இடமாகவும் அரசர் வாழும் இடமாகவும் உள்ளது. இந்த அடிப்படைகளிலேயே இந்நகரின் பொருளாதாரம் அமைந்துள்ளது. அதனால் அரசாங்கப் பணியாளர்கள் இப்பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு போன்று அமைகிறார்கள். ஒருசில தொழிற்சாலைகளும் இங்குள்ளன. நெசவாலைகள், கம்பள ஆலைகள், கல்நார் ஆலைகள், பழப்பாதுகாப்பு ஆலைகள் போன்றவை அவற்றுள் சில. அலைகள் கொணரும் மண் அடிக்கடி மூடிவிடுவதால் இங்குள்ள துறைமுகம் அவ்வளவாகப் பயன்படுவதில்லை. சிறு படகுகள் மட்டும் வந்து செல்லுகின்றன. இங்கு ஐந்தாம் முகமது பல்கலைக் கழகம் 1957–இல் தோன்றியது. இராபாத்து உரோமானியர் காலத்திலிருந்தே இருப்பதாகக் கூறுகிறார்கள். மூர் இன இசுலாமியரின் இராணுவ–சமய முகாம் ஒன்று கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் இங்கு உருவாக்கப்பட்டிருந்தது. இம்முகாம் சிறப்புப் பெற்று கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் படைவீரர்கள் கூடும் மையமாயிற்று. அப்போது அப்தல் மூமின் (Abd–al–Mumin) என்பார் சுல்தானாக இருந்தார். அவர் பேரர் யாகூப் அல்–மன்சூர் என்பார் இங்குள்ள பெரும் மதிற்சுவர்களைக் கட்டினார். அச்சுவர்கள் ‘மதீனா’ எனப்படும் பழைய நகரைச் சுற்றிலும் இன்னும் காணப்படுகின்றன. அவர் இங்குப் பெரிய மசூதியொன்றையும் கட்டி, அதற்குத் தம் பெயரைச் சூட்டினார். இம்மசூதி இன்று அழிந்த நிலையிலுள்ளது. இம்மசூதியில் அழகான தூபி (Minaret) ஒன்று உள்ளது. அக்காலத்தைச் சார்ந்த இந்தத் தூபியை ‘ஆசன் கோபுரம்’ (Tower of Hassan) என்பர். இதனைக் காணப் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவ்வரண்மனையிருந்த இடத்தில் சிறப்பு மணற் கல்லினால் கட்டப்பட்டுள்ள நுழைவாயில் ஒன்று அப்தல் மூமின் காலக் கட்டடக் கலையைச் சித்திரிக்கிறது. இதனுல் அழகான தோட்டமொன்றையும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டுக் கட்டடத்தில் வைக்கப்பெற்றுள்ள இசுலாமியக் கலை அருங்காட்சியகம் ஒன்றையும், பழைய நகருக்குள் யூதர்களின் முன்னாளைய தங்குமிடம் ஒன்றையும் காணலாம். நகரத்தின் இக்காலப் பகுதியில் இன்றைய அரசரின் மாளிகையும், எண்ணற்ற அரசாங்கக் கட்டடங்களும், பிரெஞ்சுத் தூதரின் அலுவலகமும் உள்ளன. இங்குள்ள ஐந்து நுழை வாயில்களும் ஒன்றைப் பாபல்–இரோவுவா (Babel–Rouah) என்பர். இதனைக் காற்றுகளின் நுழைவாயில் என்றும் கூறுவர். இராபாத்து கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் பெருகி வளர்ச்சியுற்றிருந்தாலும், பின்னர் 17–ஆம் நூற்றாண்டுவரை நலிந்து சிறப்பிழந்து காணப்பட்டது. இசுபெயினிலிருந்து வந்த இசுலாமியர்கள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இங்குக் குடியேறினர். இங்கிருந்துகொண்டு இசுபானியக் கப்பல்களுக்கு அவர்கள் சொல்லொணாத் தொல்லைகளைக் கொடுத்தனர். இது கடற்கொள்ளைக் கூட்டத்தாரின் சுதந்திர நாடுபோல் விளங்கியது. பிரெஞ்சியரின் பாதுகாவலில் இடம் பெற்றிருந்த இராபாத்து 1912–இலிருந்து மொராக்கோவின் தலைநகராயிற்று, இராபாத்தின் மக்கள் தொகை 3,67,620 (1971).