இராமசாமி ரெட்டியார், ஓ.பி
irāmacāmi reṭṭiyār, ō.pi
, இவர் தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகேயுள்ள ஓமந்தூர் என்னும் சிற்றூரில் முத்துராம ரெட்டியாருக்கும் அரங்கநாயகி அம்மாளுக்கும் மூத்தமகனாக கி.பி.
, இவர் தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகேயுள்ள ஓமந்தூர் என்னும் சிற்றூரில் முத்துராம ரெட்டியாருக்கும் அரங்கநாயகி அம்மாளுக்கும் மூத்தமகனாக கி.பி. 1895–இல் பிறந்தார். தந்தையார் இறந்ததால் இவருடைய பள்ளிப் படிப்பு எட்டாம் வகுப்புடன் முடிந்தது. சிறிய தந்தையாருடைய வற்புறுத்தலால் சென்னைக்குச் சென்று ஓராண்டு படித்தார். பின்னர்த் தாயார் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பப் பொறுப்புகளை ஏற்றார்.
இவருக்கு 1910–இல் திருமணம் நடைபெற்றது. மனைவி 1920–இல் இறந்தார். இவர்கள்தம் மகன் சுந்தரம் 12–ஆம் வயதிலும் மற்றொரு பெண் குழந்தை பிறந்த சில நாட்களிலும் காலமாயினர். இவர் 1920 முதல் ஒரு துறவியாகவே வாழ்ந்து வந்தார்.
இவர் 1918–இல் அரசிலியல் நுழைந்தார். பொது வாழ்வில் இவருக்கு ஈடுபாடு ஏற்படச் செய்தவர்கள் ஆர்.கே. சண்முகம் செட்டியார், வெங்கந்தூர் கணபதி சாத்திரி, பாலகங்காதர திலகர், இலாலா இலசபதிராய், சுரேந்திரநாத பானர்சி ஆகியோர். இவர் 1920–இல் நாகபுரி காங்கிரசுக்குச் சென்றார்; அன்னி பெசண்டை 1921–இல் சந்தித்தார்.
இராசேந்திர பிரசாத்து
இவருடைய முயற்சியால் 1920–இல் தென்னார்க்காடு மாவட்டத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவர் 1924–இல் கதர்த் துணிகளைச் சுமந்து மாவட்டமெங்கும் விற்றார். கள்ளுக்கடை, சாராயக் கடைகள்முன் மறியல் செய்தார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து திண்டிவனத்தில் தேசியப் பாடசாலை தொடங்கினார். இவர் 1920–இல் வேதாரணியம் உப்புச் சத்தியாக்கிரக இயக்கத்தில் கைது செய்யப் பெற்றார். மொத்தம் நான்கு முறை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இவர் தம்முடைய தமிழ், ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். தெலுங்கு மொழியில் நீதி நூல்களைக் கற்றுப் பயனடைந்தார்.
தமிழ்நாட்டில் 1937–இல் எல்லா நகராண்மைக் கழகங்களையும் காங்கிரசுக் கட்சி கைப்பற்றியது. அவற்றில் பதவி வகித்தவர்களுக்குக் கருத்துரை வழங்கவும் அவர்களைக் கண்காணிக்கவும் தமிழ்நாடு காங்கிரசு நியமித்த மூவர் குழுவில் இவர் இடம் பெற்றார். (ஏனையோர் குமாரசாமி ராசா, திரு. பக்தவத்சலம் ஆகியோர்.) இம்மூவரும் பிற்காலத்தில் முதல் அமைச்சர் ஆயினர்.
இராமசாமி ரெட்டியார் 1932–இல் தமிழ்நாடு காங்கிரசின் துணைத் தலைவராகவும் 1938–இல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். காங்கிரசுக் கட்சிக்குள் இவர் மகாத்மாவின் தலைமையை ஏற்றுச் செயற்பட்டார். தனிப்பட்ட முறையில் சர்தார் வல்லபாய் பட்டேல், நேத்தாசி சுபாசு சந்திர போசு ஆகியேரிடம் இவர் பெரு மரியாதை காட்டி வந்தார்.
தமிழ் நாட்டில் 1. வேதாரணியம் சர்தார் அ. வேதரத்தினம், 2. மதுரை திரு ந.ம.ரா. சுப்பராமன், 3. கோவை திரு. தி.சு. அவினாசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து பல செயல்களில் ஓமந்தூரார் முன் நின்றார். இந்த நால்வருக்கும் அண்ணாச்சிமார் என்ற பெயர் வழங்கி வந்தது. நால்வரும் செல்வக் குடும்பங்களில் பிறந்து சொந்தப் பணத்தைப் பொதுப் பணிகளுக்குச் செலவிட்டவர்கள்; வாழ்நாள் முழுவதும் ஒரே கட்சியில் இருந்தவர்கள்; கட்சிக்குப் புகழ் சேர்த்தவர்கள்.
இவர் 1947 மார்ச்சு 23–இல் (ஆந்திரம், கேரளம் ஆகியவற்றின் பகுதிகள் உட்பட்ட) சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று 1949 ஏப்பிரல் 6–இல் அப்பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
ஐதராபாத்து சமத்தானம் இந்தியாவுடன் இணைவதற்கு இவருடைய இராசதந்திரம் சர்தார் பட்டேலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.
இளமையில் இரமண முனிவரிடமும், பிற்காலத்தில் வள்ளலாரிடமும் இவருக்கு அளவற்ற பற்றுதல் இருந்தது.
இவர் 1950–இல் வடலூரில் நிலம் வாங்கினார்; அங்கேயே போய்த் தங்கினார்; ஞான சபைக்குக் குடமுழுக்குச் செய்தார்; சுத்த சன்மார்க்க நிலையம் நிறுவினார்; நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திலிருந்து வடலூர்ப்பகுதிக்கு விலக்குப் பெற்றார்.
புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்கக் கிளர்ச்சி நடத்தியவர்களுக்கு ஆதரவாக இருந்து ஆலோசனைகள் கூறினார். தம்முடைய வடலூர் நிறுவனங்களை 1961 இல் தொழிலதிபர் பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இவர் 1971 ஆகசுட்டு 25–ஆம் நாள் சென்னையில் காலமானார். சோமலெ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 117)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahweamyq/
தமிழ்“இராமசாமி ரெட்டியார், ஓ.பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ahweamyq/APA
Oliyon Research. (2026). இராமசாமி ரெட்டியார், ஓ.பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ahweamyq/MLA
"இராமசாமி ரெட்டியார், ஓ.பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ahweamyq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment