ஊசியைச் சாயங்களில் தோய்த்துத் தோலில் சிறு துளைகளைப் போடுவதே பச்சை குத்துதல் (tattooing) என்பதாகும். இதற்குப் பயனாகும் சாயங்களாக இண்டிகோ, கோபால், கரி, சின்னப்பர், வெர்மில்லியன் (சாதி லிங்கம்), காட்மியம் செலினைடு, பிரஷ்ஷியன் நீலம், இந்திய மை போன்றவை உள்ளன. பயன் படுத்தப் படும் சாயங்களும் செய்முறைகளும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. நிரந்தரமான படங்கள் அடித் தோலில் குத்தும் போது உண்டாகின்றன. அருகேயுள்ள நிலக் கட்டிகளில், நிறமி படிந்திருப்பது தெரிகிறது. பச்சை குத்தல் பெரும்பாலும் மேற்கை, முன் கை, மார்பு போன்ற பகுதிகளில் செய்யப் படுகின்றது. உடலில் எப்பகுதியிலும் பச்சை குத்தப் படலாம். பச்சை குத்துவதின் ஆழத்தைப் பொறுத்து, நீடிக்கும் காலம் அமைகிறது. இதைக் கொண்டு, குற்றவியல் விசாரணைகளில் பல விபரங்களை அறுதியிடலாம். பச்சை குத்துதலில் சிக்கல். இதனால் சீழ் நிலை அழற்சி, சீழ்க் கட்டி, தோல் சிதைவு, மேக நோய், தொழு நோய், காச நோய் போன்றவை உண்டாகலாம். அகற்றல். அறுவை முறையில் அகற்றித் தோல் ஒட்டு மருத்துவம் அளிக்கலாம். சிவந்த இரும்புக் கம்பி கொண்டு எரித்து விடலாம். அல்லது கீறி விடலாம். மின்னூட்டம் கொண்டு அகற்றலாம். கிளிசரைனில் பாபேயின், துத்தநாகக் குளோரைடு, டானிக் அமிலம் கொண்ட கலவையைத் தோல் மேல் இட்டு அழற்சி எதிர் வினையையும், தழும்பையும் உண்டாக்கிப் பச்சை குத்தலை அழிக்கலாம். லேசர் கற்றை கொண்டு பச்சை குத்தலை நீக்கலாம். சில சமயங்களில், மிகத் தீவிர பெரியம்மையோ, தோல் ஒழுகுபடையோ தோன்றினால், பச்சை குத்தல் மறைந்து விடும். குற்றஞ்சார் மருந்தியலில் பச்சை குத்திய படங்களையும், வடிவங்களையும் கொண்டு, பச்சை குத்தப் பட்டவரின் தன்மையையும், தாய் நாட்டையும் அறிய இயலும். குற்றவாளிகளும், விலை மாதர்களும் பச்சை குத்திக் கொள்வதை விரும்புகின்றனர். —அ. கதிரேசன்