அரங்கு
araṅku
அரங்கு என்பது ஆடல், இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ஆகும்.
அரங்கு என்பது ஆடல், இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ஆகும். நடித்துக் காட்டும் இயல்பு மனித இனத்தின் இயல்பூக்கங்களுள் ஒன்று. காலநிலை மாறுதல்களுக்கும் காலத்தொடு ஒட்டிய தொழில்களுக்கும் ஏற்பப் பண்டைய மக்களின் நடிப்புசார் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. வேட்டையாடுதல், மழைக் காலத்தின் வருகை போன்றவை நடித்துக் காட்டப்பட்டன. பண்டைய மக்களின் இத்தகைய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அனைவரும் ஓரிடத்தில் குழுமியிருந்து பங்கு ஏற்று நடத்துமாறு அமைந்திருந்தன. ஒரு சில பண்டையச் சமூகங்களில் சடங்குகளாகவே கருதப்பட்டு வந்தன.
மிகப் பழைமையான அரங்க நிகழ்ச்சி கி.மு. 19–ஆம் நூற்றாண்டு எகிப்தில் அபிதாசு (Abydos) என்ற இடத்தில் நடத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
கிரேக்க அரங்குகள்
மாபெரும் தயனிசியா (The Great Dionysia) என்று கூறப்பட்ட துன்பியல் நாடகப் போட்டியைப் பிசிசுடிராடசு (Pisistratus) என்னும் ஏதென்சு மன்னன் கி.மு. 534–இல் தொடங்கி வைத்தான். இது தயனிசசு (Dionysus) என்ற கிரேக்க திராட்சை மதுக் கடவுளுக்காக ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட நாடகப் போட்டியாகும். அட்டிகா என்னும் நாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகளில் 10 பழங்குடிகள் பங்கேற்று வந்தனர். ஏதென்சு நகரத்தில் பெரிகிளிசு (Pericles) என்னும் மன்னனின் காலத்தில் கி.மு. 5–ஆம் நூற்றாண்டில் இசுகியசு (Aeschylus), சோபோகிளிசு (Sophocles), யுரிபிடிசு (Eruipides) ஆகிய பழம்பெரும் நாடக ஆசிரியர்கள் திகழ்ந்தார்கள். ஏதென்சு நகரத்தில் இலினே (Lenaca) என்று அழைக்கப்பட்ட இன்பியல் நாடகங்களும் நிகழ்த்தப்பட்டன. அரிசுடோபனிசு (Aristophanes, கி.மு. 450 – கி.மு. 385) என்ற நாடக ஆசிரியரின் 11 நகைச்சுவை நாடகங்கள் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின. ஏதென்சு நகரத்தில் அக்கிராபாலிசு (Acropolis) மலைச் சரிவுகள் இந்நிகழ்ச்சிகளுக்கு இயற்கையாக அமைந்த திறந்த வெளி அரங்காகப் பயன்பட்டது.
கிரேக்க அரங்குகளில் 14,000 மக்கள் அமரக்கூடிய அவையோர் இடமும் (Theatron), நடனம் செய்யும் இடமும் (Dancing Circle) இலைகளுக்கு நடுவில் தைமீல் (Thymele) எனப்பட்ட பீடமும், தைமீலுக்குப் பின்புறம் அமைந்த நடிகர்கள் வேடம் புனைவதற்கான கீன் (Skene) எனப்படும் குடிலும் ஆகிய நான்கு பெரும்பகுதிகள் காணப்பட்டன. கீனுக்கும் அவையோருக்கும் இடையில், இசையணியினர் வருதற்குரிய பரடாசு (Parados) எனப்பட்ட நுழைவாயில் இருந்தது. துன்பியல் நாடகப் போட்டிக்கான விதிகளின்படி ஒவ்வொரு நாடக ஆசிரியனும் மூன்று துன்பியல் நாடகங்களும், அவற்றுக்குப் பின் நிகழ்த்தப்படவேண்டிய நையாண்டி நாடகமும் (Satire play) ஆக நான்கு நாடகங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஒருசில நாடகங்களைத் தவிர, பெரும்பாலான நாடகங்கள் ஈடிபசு, டிராய் படையெடுப்பு அட்டிரியசின் கதை, (Atreus) எர்குலிசு (Hercules) வீரச்செயல்கள் போன்ற கிரேக்கப் பழங்கதைகளையொட்டி அமைந்திருந்தன. இக்கதைகள் பெரும்பாலும் ஒரே வகையான அமைப்பில் நாடகமாக்கப்பட்டன. பயிற்சி பெற்ற நடிகர்கள் இந்நாடகங்களில் பங்கேற்றனர்.
உரோமானிய அரங்குகள்
கி.மு. 55–ஆம் ஆண்டுக்குப்பின் உரோம் நகரத்தில் நிலையான அரங்கு கட்டப்பட்டது. அதற்கு முன் நாடகங்கள் தெருக்களிலும் பொது இடங்களிலும் நிகழ்த்தப்பட்டன. பிளாடசு (Plautus), தெரென்சு (Terence) ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் திறந்தவெளி அரங்குகள் நடைமுறைக்கு வரலாயின (கி.மு. முதல் நூற்றாண்டு). நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் இரண்டடுக்குகள் கொண்டனவாகவும் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடியனவாகவும் இருந்தன. அரங்குகள் பெரும்பாலும் கிரேக்க அரங்குகளைப் போன்றே அமைத்திருந்தன.
இடைக்கால அரங்குகள்
ஐரோப்பாவில் திருச்சபையும் பொதுமக்களும் இணைந்து அரங்குகளை அமைத்தனர். அரங்க நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பழைய புதிய ஏற்பாடுகளில் (Old and New Testaments) காணப்படும் நிகழ்ச்சிகளை ஒட்டியே அமைக்கப்பட்டன. இவைகளைத் தவிர மகான்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நடிகர்கள் ஒருமேடையிலிருந்து மற்றொரு மேடைக்குச் செல்லுவதற்கு ஏற்றாற்போல் வரிசையாக வட்ட வடிவமாக மேடைகள் பல காட்சிகளுக்காக அமைக்கப்பட்டிருந்தன. இங்கிலாந்தில் பெரிய வண்டிகளில் மேடை அமைக்கப்பட்டு வந்தன. ஓர் இடத்தில் நாடகம் முடிந்த பின்னர் இவ்வண்டியை மற்ற இடங்களுக்கு நகர்த்திச் சென்று அங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இத்தகைய மேடை அமைப்புகளும் அரங்குகளும் கி.பி. 16 ஆம்–நூற்றாண்டு வரையில் நீடித்தன.
மறுமலர்ச்சிக்கால அரங்குகள்
ஐரோப்பிய நாடுகளில் இக்காலத்தில் இசை நாடகங்களும் நகைச்சுவை நாடகங்களும் பெரும்பாலும் புகழ்பெற்று வந்தன. அவையோர் அமர்வதற்கென அமைக்கப்பட்ட கொட்டகைகளுடன், நிகழ்ச்சி நடைபெறும் மேடைகளும் இணைந்து அரங்குகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய அரங்குகள் இத்தாலி, பிரான்சு ஆகிய இரு நாடுகளிலும் பரவலாயின. இங்கிலாந்தில் சேக்சுபியர் (Shakespeare) என்னும் புகழ்பெற்ற நாடக ஆசிரியரின் நாடகங்களை நிகழ்த்துவதற்காக மாபெரும் அரங்குகள் உருவாக்கப்பட்டன. இந்த அரங்குகளில் 2500 பேர்களுக்கு மேல் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதிகள் இருந்தன.
தமிழ்நாட்டு அரங்குகள்
பண்டைத் தமிழ்நாட்டில் அரங்குகள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பது பற்றிச் சிலப்பதிகாரத்தில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.
அரங்குகள் நாடக நூலாசிரியர் வகுத்த இயல்புகளினின்று வழுவாத முறையில் அமைக்கப்பட்டன. துவர் வரி, வளை, பொருத்தன் முதலிய நிலக்குற்றங்கள் இல்லாத இடத்தை அரங்கு அமைப்பதற்குத் தேர்ந்தெடுத்தனர். நல்ல வலிமையான மூங்கில்களைத் தேர்ந்தெடுத்துக் கால்கள் அமைத்தனர்.
ஏழுமுழ அகலமும் எட்டுமுழ நீளமும் ஒருமுழ உயரமும் கொண்டு அரங்கின் மேடை அமைக்கப்படும். அரங்கில் தூண்களுக்கு மேல், பலகைகள் வைத்துக் கட்டப்படும். இந்த உத்திரப் பலகைகளுக்கும் அரங்கின் அகலத்துக்கும் இடையே நான்கு முழம் இடைவெளி இருக்கும். அரங்கின் உள்ளே வருதற்கும் அரங்கினின்று வெளியில் செல்வதற்கும் இருபக்கங்களிலும் நுழைவாயில்கள் இருக்கும். அரங்கில் இருக்கும் தூண்களின் நிழல் மேடையின் மீதோ அவையினர் மீதோ படாதவாறு ஒளியமைப்பு இருக்கும். அரங்கின் இடது பக்கத் தூணில் உருவு திரையாக ஒருமுக எழினியும், வலத்தூணில் உருவு திரையாகப் பொருமுக எழினியும், மேற்கட்டும் திரையாகக் கரந்துவரல் எழினியும் அமைக்கப்பட்டிருக்கும். அரங்கின் சித்திர விதானத்தில் ஓவியங்கள் காணப்படும்.
பாரிசு மாநகரத்தில் கி.பி. 1548–ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு நிலையான அரங்கு அமைக்கப்பட்டது. இவ்வரங்கில் அவையோர் மூன்று பக்கங்களிலும் இருந்த படிக்கட்டமைப்புகளில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காண வசதி இருந்தது. நான்காவது பக்கத்தில் மேடை அமைப்பு இருந்தது. இக்காலத்தில் இங்கிலாந்தில் குளோப் (Globe), அன்னப்பறவை ஆசிய அரங்குகள் புகழ்பெற்று விளங்கின.
கிரேக்க அரங்குகளில் பெரியக்டாய் (Periaktoi) என்று அழைக்கப்பட்ட முப்பட்டைக் கண்ணாடி மேடைகள் இருந்தன. இக்கண்ணாடிகளில் வெவ்வேறு காட்சிகள் தீட்டப்பட்டிருந்தன. தேவைக்கு ஏற்ப இக்காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. காட்சிகள் விரைவில் மாறிமாறி அமைக்கப்பட்ட அரங்குகள் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் இத்தாலியிலும் பிரான்சிலும் விளங்கின.
ஐரோப்பிய அரங்குகள் பல புதிய முன்னேற்றங்களைக் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் அடைந்தன. ஒளி ஒலி அமைப்புகள் சிறந்து விளங்கின. பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அமைந்திருப்பது இக்காலத்திய அரங்குகளின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். நியுயார்க்கு இலிங்கன் சதுக்கத்தில் உள்ள விவியன் போமான் அரங்கு (Vivian Beaumont Theater) ஒரு சிறிய பொத்தானை அழுத்தியவுடன் முற்றிலும் வேறு விதமான மேடையைத் தோற்றுவிக்க கூடியதாக இருக்கிறது. பண்டைய சப்பானிய நாட்டில் சிண்டோ வழிபாட்டு முறைக்காக அமைக்கப்பட்ட நோ (No) அரங்குகளில் சமயச்சார்பான நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. பன்ராகு (Bunraku) என்று கூறப்படும் சப்பானியப் பாவைக் கூத்துகளில் நிகழ்ச்சி நடைபெறும்பொழுது கதையை ஒருவர் அவையினருக்கு எடுத்துரைப்பார். இவற்றைத் தவிர கபூகி (Kabuki) எனப்படும் நிகழ்ச்சிகளும் சப்பானில் நிகழ்த்தப்பட்டன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 616)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aed6auwy/
தமிழ்“அரங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aed6auwy/APA
Oliyon Research. (2026). அரங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aed6auwy/MLA
"அரங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aed6auwy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment