நுண்ணோக்கி என்பது மிகச் சிறிய பொருள்களைப் பெரிதாக்கிக் காட்டும் ஒரு கருவியாகும். நுண்ணோக்கியைக் கண்டு பிடிப்பதற்கு முன்பே, வில்லைகளைப் பற்றிய அறிவு சீனர்களுக்கு இருந்தது. கிபி 1590ல் ஹாலந்து நாட்டில், சக்காரியாஸ் ஜான்சன் என்பாரால், கூட்டு நுண்ணோக்கி அமைக்கப் பட்டது. அது 2.54 செ.மீ விட்டமும், 15.24 செமீ. நீளமும் உடையது. அதற்குப் பிறகு, நுண்ணோக்கி அமைப்பில் படிப் படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. கி.பி.1610இல் கலிலீயோ திருகு கருவியைக் கொண்ட, குவியச் சீரமைப்புடன் கூடிய, நுண்ணோக்கியை வடிவமைத்தார். கெம்பனி என்பார், முதன் முதலாகக் கண்ணாடிகளைக் கடைந்து, வில்லைகளைத் தேவையான வடிவமைப்புக்கு அமைத்தார். அண்டன் வான் லிவஹாக் என்பார், இவ்வாறு கடைந்தெடுத்த வில்லைகளைக் கொண்ட தனி நுண்ணோக்கிகளைப் பயன் படுத்திப் பல நுண்ணாய்வுகளை நிகழ்த்தினார். இதன் மூலம் பாக்டீரியா, குருதிச் சிவப்பணுக்கள் போன்றவை கண்டு பிடிக்கப் பட்டன. கி.பி.1700க்குச் சற்று முன்னர், ராபர்ட் ஹக் என்பார், ஒரு திருத்தப்பட்ட எளிதாகப் பயன் படுத்தக் கூடிய நுண்ணோக்கியை அமைத்தார். கி.பி.1759இல் ஜான் டாலண்ட் என்பார், நிறப் பிறழ்ச்சியற்ற அமைப்பைப் பயன் படுத்திக் கூட்டு நுண்ணோக்கி ஒன்றை அமைத்தார். கி.பி.1873இல் எர்ன்ஸ்ட அப்பே என்பார், நுண்ணோக்கியின் பிம்பம் அமைதல் பற்றிய கொள்கையை வெளியிட்டார். இது தற்போது பயன் படுத்தப் படும் நுண்ணோக்கி அமைப்புகளுக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக இருக்கிறது. பொருளருகு வில்லை. தனி நுண்ணோக்கி என்பது கண்ணருகில் வைக்கப் படும் குவி வில்லையாகும். தனி நுண்ணோக்கியின் உருப் பெருக்கு திறனை அதிகரிக்க வேண்டுமாயின், அதன் குவியத் தொலைவைக் குறைக்க வேண்டும். குவி வில்லைத் தயாரிப்பில் ஏற்படும் சில தவிர்க்க முடியாத இடையூறுகளால், வில்லையின் குவியத் தொலைவை ஒரு குறிப்பிட்ட அளவை விடக் குறைக்க முடியாது. எனவே, இரு குவி வில்லைகளின் தொகுப்பு ஒன்றைப் பயன் படுத்தி, உருப் பெருக்கு திறனை அதிகரிக்கலாம். வில்லைகளின் இந்தத் தொகுப்பு, கூட்டு நுண்ணோக்கி எனப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொருளருகு வில்லைகள் தயாரிப்பில், நிறப் பிறழ்ச்சி, கோளகப் பிறழ்ச்சி ஆகிய இரண்டு குறைகள் உள்ளன. வெள்ளை ஒளி, ஓர் ஊடகத்திலிருந்து மற்ற ஊடகத்திற்குச் செல்லும் போது, நிறப் பிரிகை உண்டாவதால், பிம்பம் பல நிறங்களுடன் தோன்றும். இதற்கு நிறப் பிறழ்ச்சி என்று பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> வில்லை ஓரப் பகுதிகளின் வழியே செல்லும் ஒளிக் கற்றைகளும், வில்லையின் மையப் பகுதி வழியே செல்லும் ஒளிக் கற்றைகளும், ஒரே புள்ளியில் பிம்பத்தை ஏற்படுத்தாமல், ஒரு கோட்டு வடிவத்தில் பிம்பத்தை உண்டாக்கும். இதற்குக் கோளகப் பிறழ்ச்சி (spherical aberration) என்று பெயர். நுண்ணோக்கியில் உள்ள பொருளருகு வில்லை, இப்பிழைகள் நீக்கப் பெற்றிருக்க வேண்டும். நிறப் பிறழ்ச்சியை நீக்கி, தக்க ஒளி விலகல் எண், பிரி திறன்களைக் கொண்ட வில்லைகளைப் பொருளருகு வில்லைகளாகப் பயன் படுத்த வேண்டும். கோளகப் பிறழ்ச்சியை நீக்க, வில்லைக்கு முன்பு, ஒரு சிறிய இடைத் திரை வைக்கப் பட வேண்டும். நிறப் பிறழ்ச்சியற்ற வகை, ஃபுளோரைட் வகை, அப்போ குரோமேட்டிக் வகை என மூவகையான பொருளருகு வில்லைகள் உள்ளன. நிறப் பிறழ்ச்சியற்ற வகையில் சிவப்பு, பச்சை ஆகிய இரு நிறங்களுக்குப் பிறழ்ச்சியை நீக்கவும், ஒரு நிறத்திற்குக் கோளப் பிறழ்ச்சியை நீக்கவும் முடியும். ஃபுளோரைட் வகையில், மணலற்ற கண்ணாடி வில்லைகள் பயன் படுத்தப் படுகின்றன. இது முதல் வகையை விடச் சிறந்தது. அப்போகுரோமேட்டிக் வகையில், மூன்று நிறங்களுக்கு நிறப் பிறழ்ச்சியை நீக்கவும், இரு நிறங்களுக்குக் கோளகப் பிறழ்ச்சியை நீக்கவும் முடியும். கண்ணருகு கருவிகள். கண்ணருகு கருவி என்பது தொலை நோக்கி போன்று செயல் படுகிறது. இது பொருளருகு வில்லை ஏற்படுத்திய பிம்பத்தை, மீண்டும் உருப் பெருக்கிக் காட்டுகிறது. இதற்கும், நுண்ணோக்கியின் பகு திறனுக்கும் தொடர்பில்லை. ராம்ஸ்டன், ஹைஜன், கெல்னர் என மூவகை கண்ணருகு கருவிகள் உள்ளன. இக்கருவிகள், நுண்ணோக்கியின் பார்வைப் புலத்தினை அதிகரிக்கவே பயன் படுகின்றன. இக்காலத்தில், மிக அதிக பார்வைப் புலம் தரும் கண்ணருகு கருவிகள் கையாளப் படுகின்றன. குவிப்பான். இவ்வமைப்பின் ஒரு வில்லையும், ஓர் இடைத் திரையும் உள்ளன. பொருளைப் பொலிவூட்டுவதற்கு இவ்வமைப்பு பயன் படுகிறது. ஒளியூட்டி. இது நுண்ணோக்கியின் மிக இன்றியமையா உறுப்பாகும். இதைச் சரி செய்து பயன் படுத்துவதன் மூலம், நல்ல பகு திறன் கொண்ட தெளிவான பிம்பத்தைப் பெறலாம். நுண்ணோக்கி வகை. பல வகை நுண்ணோக்கிகள் இருந்தாலும், அவை அமைக்கப் பட்டுள்ள கொள்கை களுக்கேற்ப அவை பின் வருமாறு மூவகைப்படும். கட்ட மாறுபட்டு நுண்ணோக்கி. இது பிம்பத்தின் பல்வேறு பகுதிகளை மிகத் தெளிவாக வேறு படுத்திக் காட்டும். இருட்புல நுண்ணோக்கி. இருண்ட பின் புலத்தில் மிகவும் ஒளியூட்டப்பட்ட ஒரு பொருள் வைக்கப் படுகிறது. பொலிவுப் புல நுண்ணோக்கிகளால் காண முடியாத, சிறிய பொருள்களைக் கூட இருட்புல நுண்ணோக்கியால், மிகத் தெளிவாகக் காண முடியும். முனைவாக்க நுண்ணோக்கி. இவ்வகை நுண்ணோக்கியில், சாதாரண நுண்ணோக்கியின் உறுப்புகளுடன் ஒரு முனைவாக்கியும் (polariser) ஒரு பகுப்பானும் (analyser) இடம் பெறும். பிம்பங்களின் தன்மையை ஆராய்ந்தறிய இந்நுண்ணோக்கி பயன் படுகிறது. முப்பரிமாண நுண்ணோக்கி. இதில் இரு கண்களுக்குமாக, இரு தனித் தனி நுண்ணோக்கிகள், ஒரே பெட்டியில் அமைக்கப் பட்டுள்ளன. இரு கண்களும், ஒரே பொருளைச் சிறிது வேறு பட்ட கோணங்களில் பார்ப்பதால், பிம்பத்தின் முப்பரிமாண விளைவு தோன்றுகிறது. உயிரியல் செய்முறைகளில் இவ்வகை நுண்ணோக்கி பயன் படுகிறது. —ரெ. ஆறுமுகம் துணை நூல் . E.J.Spitta, Microscopy, Third Edition, London John Murry, 1920; Belling, The use of the Microscope, McGraw-Hill Book Company, New york, 1930.