தமிழில் பாரத நூலினை இயற்றிய புலவர்களுள் ஒருவர். இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆதி பருவத்தாதிபருவம் என்னும் தம் பாரத நூலை இயற்றினார். வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலுள்ள ஆதிபருவத்தின் முதற் சருக்கத்தை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு அதனை விரித்தும், புதியன புகுத்தியும் இவர் தம் நூலினைச் செய்துள்ளார். சந்த நயம் மிக்க விருத்த யாப்பில் அமைந்த இவரது நூல் 569 பாடல்கள் கொண்டுள்ளது. இவற்றுள் 177 பாடல்கள் வில்லிபுத்தூரார் பாடிய பாடல்களாகும். ‘முன்னோர் மொழிபொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமக்கு முற்பட்ட புலவர்களின் கருத்துகளையேயன்றி அவர்தம் பாடல்கள் பலவற்றையும் அப்படியே மேற்கொண்டு இவர் தம் நூலினை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆதரித்தவர் மடுவை மன்னனாகிய திருமலைராயர் மகனார் திம்மபூபதி ஆவார். அவர் வேண்டுகோளை ஏற்று, இவர் இந்த நூலில் இயற்றிய செய்தி ‘திருமலை பெற்றருளுமணி பண்டகுல விளக்காகும், திம்மபூபன் பரிவோடு பாரதத்து ஆதி பருவத்தாதிதனைப் பகருகென்றான்’ என்று நூலின் முற்பகுதியில் இவரே குறிப்பிட்டுள்ளார். தம்மை ஆதரித்த திம்மபூபதியின் கொடை, படை ஆற்றல், சுற்றம் பேணும் பண்புகளைப் சிறப்பு முதலிய பண்புகளை போற்றி நூலுள் ஏழு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். தமக்கு முந்தியோர் பாடல்களை அப்படியே எடுத்துத் தம் நூலுள் இணைத்து நூலை அமைப்பதில் இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் எனத் தெரிகிறது. காண்க: ஆதிபருவத்தாதிபருவம்.