இறைவனின் திருவருட்பேற்றினால் தவநலத்திற் சிறந்த ஆன்மாக்கள் அடைகின்ற சித்திகள் அளவில்லாதவை. “எண்ணிலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவதாகாதே” என்பது மணிவாசகர் அருளிய திருவாசசுத்தில் ‘திருப்படையாட்சி’ என்னும் திருப்பதிகத்தில் வரும் வரியாரும் எட்டு வகையான சித்திகளை மிகவும் சிறப்பாக எடுத்து நூல்கள் விதந்து கூறும். “அட்டமா சித்தி அணைதரு காளத்தி” என்பது சம்பந்தர் தேவாரம், “பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு, அட்டமா சித்தி அருளிய செயலும்” என்று திருவாசகத்தில், கீர்த்தித் திருவகவலில் வருகிறது. பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலும் ‘அட்டமா சித்தி உபதேசித்த படலம்’ என்று ஒன்று அமைந்திருக்கிறது. திருமூலர் திருமந்திரத்திலும் மூன்றாம் தந்திரத்தில் ‘அட்டா சித்தி’ என்னும் தலைப்பில் 72 பாடல்கள் அமைந்திருக்கின்றன. எட்டு வகையான சித்திகள் வருமாறு: :: அணிமா: அணுவிலும் சிறிய அணுவாக நுணுகி விளங்கக்கூடிய தன்மை. :: மகிமா: மிகவும் உயர்ந்த பெரிய மேரு மலையைப்போல உயர்ந்த பெரிய நிலையிற் பிறங்கும் பெற்றிமை. :: இலகிமா: மிகப்பெரிய மேரு மலையைப் போன்று விளங்கினாலும் எடுத்தற்கு இலகுவாக-எளிதாக-இருக்கும் இயல்பு. :: கரிமா: அணுவைப்போல நுணுகிச் சிறிய நிலையில் இருந்தாலும் மேருவைப் போல எடுத்தற்கரிய நிலையில் கனத்திருக்கும் பண்பு. :: பிராப்தி: நினைத்த அளவில் எல்லாவுவகங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று உலவி வரக்கூடிய ஆற்றல். :: பிரகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல், விரும்பிய போகங்களை நுகர்தல், முக்காலத்து நிகழ்ச்சிகளையும் உணரப் பெறுதல் போன்ற ஆற்றல்களைப் பெற்றுத் திகழ்தல். :: ஈசத்துவம்: இறைவனைப்போலத் தாம் விரும்பி நினைத்தால் ஆக்கல் அளித்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்ய வல்லவராதல். :: வசித்துவம்: தேவர்கள் முதலிய யாவரையும் எல்லா உலகத்து உயிர்களையும் தம்முடைய ஏவல்களுக்கு அடங்கி ஒழுகுமாறு தம்மிடம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய திறன் பெற்று விளங்குதல். ந.ரா.மு.