இலிபியா நாட்டில் கல்வி
ilipiyā nāṭṭil kalvi
உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண்மை, மீன்பிடித்தல், சுற்றுலா ஆகிய தொழில்களை வளர்க்கவும் இலிபியா நாட்டில் கல்வி ஒரு கருவியாகக் கருதப்படுகின்றது.
உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண்மை, மீன்பிடித்தல், சுற்றுலா ஆகிய தொழில்களை வளர்க்கவும் இலிபியா நாட்டில் கல்வி ஒரு கருவியாகக் கருதப்படுகின்றது. பெட்ரோலியத் தொழிற்சாவைகள் மூலம் கிடைக்கும் மிகுந்த வருவாய், இந்நாட்டில் பதினான்கு வயது நிறைந்த அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்கும் வாய்ப்பினை அரசுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இலிபியாவில் (Libya) பெரும்பாலும் அரசுப் பள்ளிகளே உள்ளன. தனியார் இசுலாமியக் குர்ரான் பள்ளிகளும் (Islamic Koranic Schools) உண்டு. ஆனால், இவை இசுலாமியச் சமயத் தொடர்பான பாடங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
மழலையர் பள்ளிகள் இந்நாட்டில் பெருமளவில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில மழலையர் பள்ளிகள் உண்டு. தொடக்கப்பள்ளிகள் இங்கு மிகுதி. தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள். இக்கல்வி மாணவர்களுக்கு இலவசம் மட்டுமன்றிக் கட்டாயமும் ஆகும்.
தொடக்கப் பள்ளிக் கல்விக்குப் பின், மாணவர்கள் பொதுக் கல்வியோ தொழிற் கல்வியோ பெறுகின்றனர். பொதுக் கல்வியில் மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், மூன்றாண்டு மேல்நிலைப் பள்ளிக் கல்வியும் அடங்கும். தொழிற் கல்வியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வித் தரத்தில் நான்கு ஆண்டுகளும், மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தரத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளும் மாணவர்கள் பயிலுகின்றனர். வணிகத் தொழில், வேளாண்மை, இயந்திரத் தொழில் நுட்பம் போன்ற பாடங்கள் தொழிற்கல்வியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. பொதுக் கல்வியில் மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதி பெற்ற மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயில முடியும்.
வீட்டு வசதியின்றி நாடெங்கும் சுற்றித்திரியும் பழங்குடியினரின் குழந்தைகள் (Nomadic–Children) தங்கிப் படிப்பதற்கு வசதியாக விடுதிகளை அரசு செய்து தந்துள்ளது. சிற்றூர்களிலும் நகரை விட்டு மிகவும் ஒதுங்கிய பகுதிகளிலும் வாழும் குழந்தைகளும் இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கின்றனர்.
இங்கு 85 விழுக்காடு மாணவர் தொடக்கப் பள்ளிகளிலும் 40 விழுக்காடு மாணவர்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 1970–ஆம் ஆண்டுக் கணக்கின்படி பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
நிருவாகம்
கல்வி அமைச்சகம் இந்நாட்டுக் கல்வித் திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்துகிறது. கல்வி மாவட்டங்களில் (Educational Zone) இருக்கும் அலுவர்களும், கல்வி நெறியாளரும் (Director of Education) கல்வி அமைச்சகத்தின் கல்விச் செயல்களில் துணையாக நிற்கின்றனர். எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிதியுதவி செய்து வருகிறது. மேலும், உயர்கல்வி, சில தொழிற் பயிற்சி ஆகியவை பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது. இந்நாட்டு மாணவர்களன்றி, இத்தாலிய மாணவர்கள் மிகுதியாகப் பயிலும் சில தனியார் பள்ளிகளும் இந்நாட்டில் உண்டு. ஆனால், இப்பள்ளிகள் மாணவர்களிடமிருந்து பெறும் கட்டணங்களின் மூலமே நடைபெற்று வருகின்றன.
பாடத்திட்டம், தேர்வுகள்
தொடக்கப் பள்ளிகளில் கணக்கு, இயற்கை அறிவியல், உடல் நலம், ஓவியம் வரைதல், கைத்தொழில், உடற்கல்வி ஆகியன கற்பிக்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளியின் இறுதி ஆண்டில் பள்ளிகளே தேர்வு நடத்துகின்றன. தொடக்கப் பள்ளிப் பாடங்களைப் போன்றே உயர்நிலைப் பள்ளிகளிலும் பாட அமைப்புகள் உள்ளன.
மேல்நிலைப் பள்ளிப் பொதுக் கல்வியில் இலக்கியம், அறிவியல் பாடங்களோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, அரபு ஆரிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. மேல்நிலைப் பள்ளி இறுதி ஆண்டில் தேர்வுகள் உண்டு.
ஆசிரியர், ஆசிரியர் கல்வி
ஆறாண்டு தொடக்கப் பள்ளிக் கல்வி பெற்றவர்கள், நான்காண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாகின்றனர். மூன்றாண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் நான்காண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்று, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகின்றனர். இலிபியா பல்கலைக் கழக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகின்றனர்.
ஆசிரியர் பயிற்சியில் பெண்களுக்கு அரசு முதலிடம் தருகிறது. இதற்காகப் பெண்களுக்குக் கல்வி வசதிகள் பலவற்றுடன் கல்வி மையங்களை அரசு திறந்து வருகிறது.
இலிபியாவில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர். அரேபிய நாடுகளில் இருந்து தகுதியான ஆசிரியர்களைத் தருவித்து, ஆசிரியர் பற்றாக்குறையை இலிபிய அரசு தீர்த்து வைக்கிறது. ஆயினும், தகுதியான இலிபியன் ஆசிரியர் கிடைக்கும் வேளையில் பிற நாட்டு ஆசிரியர்களை நீக்குவது என்று அரசு முடிவு செய்துள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 415)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6ykb5dj/
தமிழ்“இலிபியா நாட்டில் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a6ykb5dj/APA
Oliyon Research. (2026). இலிபியா நாட்டில் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6ykb5dj/MLA
"இலிபியா நாட்டில் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a6ykb5dj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment