கொய்னா, சாலிசிலேட் போன்ற மருந்துகள் செவிக்கு நஞ்சாகலாம். இவற்றை உடனே நிறுத்தி விட்டால், தொடக்க காலச் செவிடு குணமாகும். இன்று உயிர் காக்கும் பல மருந்துகளும், ஊசி மருந்துகளும் கேட்கும் திறனையும், சமன் நிலையையும், நச்சுத் தன்மையால் பாதிக்கின்றன. இவற்றால், நிலையாகக் கடும் விளைவு தோன்றலாம். மிகு அளவான ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து கேட்கும் திறனைக் குறைக்கிறது. நியோமைசின், கானாமைசின், ஜென்டாமைசின், வேனோமைசின் ஆகியவை காதையும், சிறுநீரகத்தையும் தாக்குகின்றன. சிறுநீர் பிரிய வைக்கும் மருந்து, புற்று நோய் ஊசி மருந்து, சில பூச்சி மருந்து ஆகியவையும் காது நரம்பிற்கு நச்சாகின்றன. சில சமயம், காதில் ஊற்றும் மருந்து, செவிப் பறைத் துளை வழியாக நடுச் செவிக்குச் சென்று, குருதியில் உறிஞ்சப் படுவதால், நச்சுத் தன்மை கொடுக்கும் மருந்துகளை நெடுங்காலம் பயன் படுத்தக் கூடாது. —டி. எம். பரமேஸ்வரன்