இராசராச சோழன், முதலாம்
irācarāca cōḻaṉ, mutalām
சோழப் பேரரசர். சோழ அரசர்களுள் தலை சிறந்தவர்.
சோழப் பேரரசர். சோழ அரசர்களுள் தலை சிறந்தவர். இராசராசனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் எனப்படும். இவர் தந்தை சுந்தரசோழப் பராந்தகன்; தாயார் வானவன் மாதேவியார். இவர் தமையன் பெயர் ஆதித்த கரிகாலன்; தமக்கை குந்தவை. இராசராசன் 5–ஆம் வயதிலேயே தம் தந்தையை இழந்தார். தாய் வானவன் மாதேவி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறினார். தமக்கை குந்தவை, பாட்டியார் சம்பியன் மாதேவியார் ஆகியோரின் பொறுப்பில் இராசராசன் வளர்ந்தார். தமையன் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்படவே. இராசராசன் கி.பி. 985–ஆம் ஆண்டு சூன் 25–ஆம் நாள் பட்டத்திற்கு வந்தார்.
வெற்றிகள்
இராசராசன் இரண்டு படையெடுப்பில் பாண்டிய நாட்டையும் கேரள நாட்டையும் வென்று, அவர்களது நாட்டைக் கைப்பற்றினார். ஈழ மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழரை எதிர்த்துப் பாண்டியருக்கும் கேரளருக்கும் உதவியதால், இராசராசன் ஈழத்தின் தென்பகுதிக்கு ஈழவேந்தனை ஓடச் செய்தார். ஈழத்தின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரம் அழிக்கப்பட்டது. ஈழத்தின் வடபகுதி மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிடப்பட்டு, சோழப் பேரரசின் ஒரு மண்டலமாகத் திகழத் தொடங்கியது. பொலனருவை என்ற பெயர் பெற்ற பட்டினம் சோழ மண்டலத்தின் தலைநகராக்கப்பட்டது. இவர் ஈழத்தை வென்றபின், கர்நாடக மாநிலத்தில் இருந்த கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி ஆகிய ஊர்களை கி.பி. 991–இல் வென்று சோழப் பேரரசுடன் இணைத்தார். பின்னர், வேங்கியைத் தலைநகராகக் கொண்டு கீழைச் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்த சாடசோட பீமனை வென்று தம்மிடம் அடைக்கலம் புகுந்திருந்த கீழைச் சாளுக்கிய இளவரசன் சக்திவர்மனை வேங்கி அரியணையில் அமர்த்தினார். சக்திவர்மனின் தம்பியான விமலாதித்தனுக்குத் தம் மகள் குந்தவையை மணமுடித்துக் கொடுத்து, கீழைச் சாளுக்கிய நாட்டைத் தம் மேலாண்மையின் கீழ்க் கொண்டு வந்தார். பின்னர் இவர் மேலைச் சாளுக்கிய அரசன் சத்தியாசிராயனுடன் போர் புரிந்து, சாளுக்கிய நாட்டின் தலைநகரான மானியகேடத்தைத் தாக்கி அழித்து, சோழருடைய ஆதிக்கத்தை வடமேற்கே துங்கபத்திரை வரை நிறுவினார். இதனுடன் சேர நாட்டிற்கு மேற்கே அரபிக் கடலில் காணப்படும் மாலத் தீவுகளையும் வென்று, இவர் தம் ஆட்சிக்குட்படுத்தினார். இத்தீவுகளில் இருந்த மக்கள் சோழநாட்டிற்கும் மேலை நாடுகளுகளுக்கும் இடையே இருந்து வந்த வாணிகத்திற்கு இடையூறு செய்திருக்கக்கூடும்; அதன் விளைவாகவே அத்தீவுகளை இராசராசன் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது. இவ்வாறு பல திசைகளிலும் போர் செய்து இவர் சோழப் பேரரசை நிறுவினார். இவரது ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசானது வடமேற்கே துங்கபத்திரை ஆறு வரையிலும் கிழக்கே நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததுடன், ஈழத்தின் வடபகுதியையும் மாலத் தீவுகளையும் உட்கொண்டதாக விளங்கியது. இவர் சோழப் பேரரசின் ஆதிக்கம் ஓங்குவதற்கு அடிகோலினார் என்று கூறலாம்.
சோழப் பேரரசு — முதலாம் இராசராசன் காலம்
ஆட்சிமுறை
இராசராசன் கி. பி. 1000–ஆம் ஆண்டு நாட்டில் நில அளவீடு செய்து நிலவருவாயைச் சீர்செய்தார். பேரரசின் ஆட்சியை வலிமைப்படுத்தியதுடன் நாட்டின் சிற்றூர்களில் உள்ளாட்சி முறையை ஏற்படுத்தினார்; படைப் பலத்தைப் பெருக்கினார். சோழர் படையில் கப்பற்படை சிறப்புமிக்க படையாக விளங்கியது. தம் மைந்தன் இராசேந்திரனைப் பட்டத்து இளவரசனாக்கி ஆட்சித்துறையில் உதவிபுரியச் செய்தார்.
சமயப்பற்று
சிவநெறி கண்ட சோழன் என்ற பட்டப் பெயர் பூண்ட இராசராசன், சிவனிடம் மிக்க பக்தி செலுத்தினார். தஞ்சையில் இராசராசேச்சுவரம் என்னும் மிகப்பெரிய கோயிலைக் கட்டினார். நாகப்- பட்டினத்தில் சூடாமணிவிகாரம் என்னும் புத்த விகாரத்தை அமைக்கச் சைலேந்திர அரசர் மாறவிசய துங்க வர்மருக்கு அனுமதி அளித்ததுடன், ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச் சந்தமாகவும் அளித்தார்.
தில்லைக் கோயிலில் அடைபட்டுக் கிடந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை வெளிக்கொணரக் காரணமாயிருந்தவரும், நம்பியாண்டார் நம்பியைக்கொண்டு சைவத்திருமுறைகளை வகைப்படுத்தியவரும் இராசராசனே ஆவார். இதன் காரணமாக இவர் திருமுறை கண்ட சோழன் எனப் புகழப்பட்டார். திருக்கோயில்களில் தேவாரப் பாடல்களை முறைப்படி இசைப்பதற்கும் நிவந்தங்கள் அளித்தார். சைவத்தைத் தம் சமயமாகக் கொண்டிருந்தாலும், இவர் சமயப் பொறை உடையவராகத் திகழ்ந்தார்.
தஞ்சைப் பெரிய கோயில்
இராசராசனின் புகழுக்குக் காரணமாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோயில் கி.பி. 1010—இல் கட்டி முடிக்கப்பட்டது. இராசராசேச்சுவரம் என்னும் பெயருடைய இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் கொண்ட நீள்சதுர (செவ்வக) வடிவத்தில் கட்டப்பட்ட கற்றளியாகும். திராவிடக் கலைப் பாணியில் மைந்த இக்கோயில் இரண்டு கோபுரங்களை உடையது. முதல் வாயில் கேரளாந்தகன் திருவாயில் எனப்படும். இரண்டாம் வாயில் இராசராசன் திருவாயில் எனப்படும். முதல் கோபுரம் 30 மீட்டர் உயரமுடைய மூன்று மாடக் கோபுரமாகும். இரு கோபுரங்களிலும் அழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் விமானம் மிக உயரமானது. கருவறையின் 32 மீட்டர் சதுரமான அடித்தளத்தில் 69 மீட்டர் உயரத்திற்கு 13 அடுக்குகள் கொண்ட விமானத்தைக் கருங்கல்லினால் கட்டியுள்ளனர். கல்வெட்டுகளிலிருந்து இக்கோயிலைக் கட்டியவர் பெயர் இராசராசப் பெருந்தச்சன் என அறிய முடிகிறது. விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் 4 மீட்டர் உயரம் உடையது. இது 3083 பலம் நிறையுள்ள செம்பினால் செய்யப்பட்டு, 2926½ கழஞ்சு பொன் அதன்மேல் பூசப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள இலிங்கம் மிகப் பெரியதும் ஒரே கல்லினாலானதுமாகும். இதன் உயரம் 4 மீட்டர். ஆவுடையார் சுற்றளவு 18 மீட்டர். இக்கோயிலின் விமானத்தில் உள்ள சிற்பங்களும், மாடக் குழிகளில் உள்ள தெய்வங்களும் அழகு இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட சண்டிகேசுவரர் கோயிலும் அமைப்பில் பெரியதாக உள்ளது. இக்கோயிலில் 108 கரணங்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் புகழ் பெற்றவை. கரணங்களுள் சில செதுக்கப்படா நிலையிலே உள்ளன. ஓவியங்கள் அசந்தா, எல்லோரா ஓவியங்கள் போன்று புகழ் மிக்கவை. ஓவியங்களில் காணப்படும் நங்கையர் மெல்லிய ஆடை உடுத்தியுள்ளனர். ஆண்கள் இக்காலத்தைப் போன்றே வகை வகையான மேல் சட்டைகள் அணித்துள்ளனர். ஓவியங்களில் மிகச் சிறந்தவை இராசராசனும் கருவூர்த் தேவரும், சுந்தர மூர்த்தி நாயனார் கைலாயம் செல்லல், நடராசனின் ஆனந்தத் தாண்டவம் போன்றவையாகும்.
பட்டப் பெயர்கள்
இராசராசன் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டிருந்தார். அவை இவர்தம் குணநலன் வெளிப்படுத்துவனவாக உள்ளன. பண்டித சோழன், நித்தியவிநோதன், இராசவித்தியாதரன் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்குக் கலைகளில் இருந்த ஈடுபாட்டை விளக்குகின்றன. இராசராசன் ஒரு சிறந்த சிவபக்தன் என்பதைச் சிவபாதசேகரன் என்ற பெயர் உணர்த்துகின்றது. இவர் வெற்றியின் நினைவாக மும்முடிச்சோழன், சோழமார்த்தாண்டன், செயங்கொண்ட சோழன், பாண்டிய குலாசனி. கேரளாந்தகன், சிங்களாந்தகன், தெலிங்குகாலன் போன்ற பட்டப்பெயர்களைக் கொண்டு விளங்கினார்.
இராசராசனின் குடும்பம்
இராசராசனுக்குப் பல மனைவியர் இருந்தனர். பட்டத்தரசியின் பெயர் உலகமாதேவி (தந்தி சக்திவிடங்கி). இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் மற்றொரு மனைவியாகிய வானவன்மாதேவி என்ற திரிபுவன மகாதேவியார் மகன். இராசராசனுக்கு மேலும் 3 மக்கள் இருந்திருக்கவேண்டும், அவர்களுள் குறிப்பிட்டத்தக்கவர் குந்தவை. இவர் விமலாதித்தியர் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசருக்கு மணமுடிக்கப்பட்டார்.
சிறப்புகள்
இராசராசன் தென்னிந்திய அரசர்களுள் மிகச் சிறந்த அரசராகக் கருதப்படுகின்றார். இவரது ஆட்சித் திறன், வெற்றிகள், கலையார்வம் ஆகியன பெரிதும் போற்றப்படுவனவாகும்.
இராசராசன் சீன நாட்டிற்கு, தாம் இறக்குமுன் வாணிகத் தொடர்பு வளர்வதற்காகத் தூதுக் குழுவை அனுப்பிவைத்தார் என்பது சீன நாட்டுக் குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. வரலாற்றுச் செய்திகளைக் கால வரன்முறைப்படுத்தி மெய்க்கீர்த்திகளின் வாயிலாக எடுத்துரைக்கும் பழக்கத்தை முதன் முதலாகத் தொடங்கிக் கொடுத்து, சோழப்பேரரசின் வரலாற்றைப் பிற்காலத்தவர் தெரிந்து கொள்ளச் செய்த பெருமையும் இவரையே சாரும். தமிழக அரசு இராசராசனின் ஆயிரமாம் ஆண்டைத் தஞ்சையில் 1984–இல் கொண்டாடியது. அப்பொழுது பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவ்விழாவைத் தொடங்கிவைத்துச் சிறப்புறச் செய்தார். சி.ஈ.இரா.
துணை நூல்கள்
Sastri, K.A.N, The Colas, University of Madras, 1984.
Bharatiya Vidya Bhavan's History and Culture of the Indian People, Vol, V, The Struggle for Empire, Bombay, 1979.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 33)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a66ywjc6/
தமிழ்“இராசராச சோழன், முதலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a66ywjc6/APA
Oliyon Research. (2026). இராசராச சோழன், முதலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a66ywjc6/MLA
"இராசராச சோழன், முதலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a66ywjc6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment