கனடா நாட்டைச் சார்ந்த சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்; அரசியல் கலை அறிஞர்; முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இலக்கியப் பேரறிஞர். இவர் கி.பி. 1869–ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆம்ப்சயரிலுள்ள (Hampshire) சுவான்மோர் (Swanmore) என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் பெற்றோர்கள் இவர் ஆறாம் வயதில் கனடா நாட்டில் குடியேறினர். இவர் தொராண்டோ பல்கலைக் கழகத்தைச் (Toronto University} சேர்ந்த மேலைக் கனடாக் கல்லூரியில் (Upper Canada College) கல்வி கற்று, அப்பல்கலைக் கழகத்தில் 1903–ஆம் ஆண்டில் டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார். அதே ஆண்டில் மாண்ட்ரியால் (Montreal) பல்கலைக்கழகத்தில் இவர் ஆசிரியரானார். பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகனின் தலைவராக இலீகாக்கு (Leacock, Stephen Butler) 1908–ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். பல்வேறு கலைகளைப் பற்றி ஏறத்தாழ 20 நூல்களை இவர் எழுதியிருந்தாலும், இவரை நகைச்சுவை மன்னர் என்றே கூறுவர். இவர் கீழ்க்காணும் நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். அரசியற்கலை மூலபாடம் (Elements of political Science), பிரிட்டன் பேரரசு, கனடா போன்றவை இவரது ஆழ்ந்த புலமைக்குச் சான்று பகரும் நூல்கள். புனிதமாலோ என்னும் மாலுமி (The Mariner of St. Malo), மார்க்கு துவைன் (Mark Twain), சார்லசு திக்கன்சு (Charles Dickens) போன்றவை இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களாகும். இவருடைய நகைச்சுவை நூல்கள் உலகப் புகழ் படைத்தவை. இலக்கியத் தவறுகள் (Literary Lapses), பொருளற்ற புதினங்கள் (Nonsense Novels), சிற்றூரின் சூரியவொளித் துணுக்குகள் (Sunshine Sketches of a Little Town), பணக்காரச் சோம்பேறிகளின் அர்க்கேடிய துணிவுப் பயணங்கள் (Arcadian Adventures of the Idle Rich), போதும் இக்கல்லூரிகள் (Too much College) போன்றவை நகைச்சுவை நூல்கள். மேலும் ‘நகைச்சுவைக் கொள்கையும் உத்தியும்’ (Humour: Its Theory and Technique) என்னும் இந்நூலில் இவரது நகைச்சுவை பற்றிய உரையாடல்- களைக் காணலாம். ‘எனக்குப்பின் யான் விட்டுவந்த பையன்’ (The Boy I left Behind me) என்னும் வாழ்க்கை வரலாற்று நூல், முடிவுறாத நிலையிலேயே உள்ளது. இவர் 1944–இல் கனடா நாட்டிலுள்ள தொராண்டோவில் காலமானார்.